கோயிலும் கடிகையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வேத சாஸ்தி்ராப்யாஸத்துக்கு கடிகை, தேவதாராதனத்துக்குக் கோவில் என்று இரண்டையும் நரஸிம்ஹவர்மா நிர்மாணித்ததில் ரொம்பவும் பொருத்தமும் பொருளும் இருக்கின்றன. வேத மந்த்ரங்களைக் கொண்டு செய்யும் ப்ராண ப்ரதிஷ்டையும், கும்பாபிஷேகமும், பூஜைகளுந்தான் தெய்வ ஸாந்நித்யத்தை ஆலயங்களில் உண்டாக்குபவை. வேதம் என்ற வேரிலே ஊன்றி நிற்கும் நம்முடைய ஸநாதன தர்மமென்னும் வ்ருக்ஷத்தில் பழமாகத் தொங்குவதே ஆலயம். எல்லாரும் அநுபவிப்பதற்காக வெளியே தொங்குகிற இந்த ஆலயப் பழம் உண்டாகக் காரணமான வேர் மறைவாக, மறையாக இருப்பதே!

நரஸிம்ஹவர்மா முதலான ராஜாக்களின் வழியிலேயேதான், ராஜாக்கள் எடுபட்டுப் போனபின் நம்முடைய மதத்துக்கு நிரம்பப் போஷணை தந்துள்ள செட்டிப் பிள்ளைகளும் (நகரத்தாரும்) ஒரு கோயிலை ஜீர்ணோத்தாரணம் பண்ணினால் ஒரு பாடசாலை ஏற்படுத்துவது என்று வைத்துக்கொண்டிருந்தார்கள்.

‘பாடசாலையில் கற்றதனால் ஆய பயன் இதுதான்’ என்று வாலறிவன் நற்றாளை காட்டிக் கொடுக்கும்படியாக ஆலயங்களை எழுப்புவது பூர்விகர் வழக்கமாயிருந்தது.

கல்வி கற்பதைச் சொல்லும் இடத்தில் ஈச்வரனுக்கு “வாலறிவன்” என்ற பெயரைத் திருவள்ளுவர் கொடுத்திருப்பது அர்த்தபுஷ்டி வாய்ந்தது. எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனே “வாலறிவன்”. எத்தனை கற்றாலும் அதனால் அஹங்கரிக்காமல் அவனுடைய ஸர்வஜ்ஞத்வத்தில் அது துளிமாத்திரமே என்ற அடக்கத்தோடு அவனுடைய நற்றாள் தொழ வேண்டுமென்றுதான் இந்த வார்த்தையைப் போட்டிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கற்கோயிலின் தோற்றம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  எட்டாம் நூற்றாண்டில்
Next