முருகனுக்குதவிய முன்னவன் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தாயார், தகப்பனாரே இப்படித் தங்கள் வெற்றிக்கான ‘க்ரேடிட்’டைப் பிள்ளையாருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கத் தம்பிக்கு மட்டும் இவர் ஸஹாயமில்லாமல் நடக்குமா? ஆனால் இது சத்ரு ஜயம் அல்ல. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தன்னுடைய ச்ருங்கார ஜயத்துக்காகவே அண்ணாவின் ஸஹாயத்தை நாட வேண்டியிருந்தது!

குழந்தையாயிருந்தபோது அவர் ஸந்நியாஸியானதற்கு, தண்டாயுதபாணி என்று ஆண்டிப்பண்டாரமாகப் போனதற்கும் இதே அண்ணாதான் காரணம். பழத்துக்காக உலகத்தை ப்ரதக்ஷிணம் பண்ணவேண்டும் என்று அண்ணா – தம்பி ஓட்டப் பந்தயம் போனது தெரிந்த கதைதானே? அப்போது ஆண்டியாகப்போன ஸுப்ரஹ்மண்யரை அப்புறம் ஈச்வரனும் அம்பாளும் நல்லவார்த்தை சொல்லி அழைத்துக் கொண்டு வந்தார்கள். எதற்காக அவருடைய அவதாரம் ஏற்பட்டதோ அந்த சூர ஸம்ஹாரமும் அப்புறம் பண்ணினார். அதற்கப்புறம் இவருக்காகவே உருகிக்கொண்டிருந்த வள்ளியிடம் மாறு வேஷத்தில் வேடனாக, விருத்தனாகப் போய் விளையாட்டுப் பண்ணினார். அவள் இவர் யார் என்று புரிந்து கொள்ளாமல் உதாஸீனம் செய்தாள். அப்போது அவர் ஸுப்ரஹ்மண்யராகக் காட்சி கொடுத்திருந்தாலே போதும், அவள் உடனே அவரிடம் ப்ரேமை கொண்டிருப்பாள். ஆனால் அவர் அப்படிப் பண்ணாமல் தமையனின் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்கப் பண்ண இது ஒரு நல்ல ஸந்தர்ப்பம் என்று நினைத்தார். எடுத்த காரியத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் பிள்ளையாரைப் பூஜித்தே அதை நிவ்ருத்தி செய்துகொள்ளவேண்டும் என்று ஜனங்கள் உணரும்படிப் பண்ணவேண்டுமென்று நினைத்தார். அதனால் உடனே மஹா கணபதியை த்யானம் பண்ணினார்.

தம்பி கூப்பிட்டவுடனே தமையனார் பெரிய மதயானை ரூபத்தில் ஓடி வந்து வள்ளியைத் துரத்து துரத்து என்று துரத்தினார். திக்குத் திசை புரியாமல் “முருகா முருகா” என்று ஓடின வள்ளி விருத்த ரூபத்தில் எதிர்ப்பட்ட அந்த முருகனையே – முருகன் என்று தெரிந்துகொள்ளாவிட்டாலும் – பயத்தினால் ஒரு குழந்தை அதன் தாத்தாவைக் கட்டிக் கொள்கிறமாதிரி, அப்படியே இறுகப்பிடித்துக் கொண்டு விட்டாள். ‘இதற்கு மேலும் விளையாடப்படாது, விநாயக ப்ரபாவத்தை வெளிப்படுத்தியாச்சு’ என்று ஸுப்ரஹ்மண்யரும் அப்போது தம்முடைய ஸ்வய ரூபத்தை எடுத்துக் கொண்டு வள்ளியை ஸந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

அப்புறம் வள்ளி கல்யாணம் நடந்தது. கட்டைப் பிரம்மசாரியான கணேச மூர்த்தியே தம்பியின் காதல் கல்யாணத்துக்கு உதவி பண்ணியிருக்கிறார்!

அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிற விக்நேச்வர ஸ்துதியில் ஈச்வரனின் த்ரிபுர ஸம்ஹாரம், ஸுப்ரஹ்மண்யரின் வள்ளித் திருமணம் இரண்டிலும் மஹாகணபதிக்கு உள்ள பங்கைச் சொல்லியிருக்கிறார்*.

முப்பு மெரிசெய்த அச்சிவ னுறைரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடை யிபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை

அக்கண மணமருள் பெருமாளே!


* ‘கைத்தல நிறைகனி’ எனத் தொடங்கும் பாடல்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அன்னைக்கு உதவிய ஜங்கரன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ராமபிரானும் விநாயகரும்
Next