ராமபிரானும் விநாயகரும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மாமாக்காரர் மஹாவிஷ்ணு மருமானுக்கு மரியாதை பண்ணி அவர் மஹிமை தெரியும்படியாகச் செய்ததைச் சொல்லவேண்டும்.

மஹாவிஷ்ணு என்ற மூலருபத்தில் அவர் இவரிடமிருந்து சக்ரத்தை வாங்க முடியாமல் தோப்பிக்கரணம் போட்டது மட்டுமில்லை; ராம க்ருஷ்ணாதி அவதாரங்களிலும் பிள்ளையாருக்கு சாஸ்த்ரோக்தமாகப் பூஜை பண்ணியிருக்கிறார்.

ராமாவதாரத்தில் ராவண ஸம்ஹாரம் ஆன பிற்பாடு அவர் ராமலிங்க ப்ரதிஷ்டை செய்து சிவாராதனம் பண்ணியது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ராவண ஸம்ஹாரத்துக்கு முன்னாடி, கிஷ்கிந்தையிலிருந்து போகிற போதே ஸேது பந்தம் நிர்விக்னமாக நடக்க வேண்டுமென்பதற்காக அவர் ராமநாதபுரம் ஸமுத்ரக்கரையில் நவ பாஷாணம் என்ற இடத்தில் நவக்ரஹ ப்ரதிஷ்டை செய்து பூஜை பண்ணினாரென்பதும் சில பேருக்காவது தெரிந்திருக்கும். தேவி பட்டணம் என்பது அந்த நவபாஷாணந்தான். இப்போதும் ராமேச்வர யாத்திரை போகிறவர்கள், சுற்றுப்பட்ட க்ஷேத்ரங்கள் பலவற்றுக்குப் போகும்போது நவபாஷாணத்துக்கு நிச்சயமாகப் போகிறார்கள். மிகவும் க்ரமமாக இந்த யாத்திரை பண்ணினால் முதலில் போக வேண்டிய ஊர் ஒன்று இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் ஸேது யாத்ரா என்றால் அங்கேயிருந்துதான் ஆரம்பிப்பார்கள்.

ஆரம்ப ஸ்வாமியான விக்நேச்வரரை ராமசந்த்ரமூர்த்தி பூஜை பண்ணிய ஊர்தான் அது. உப்பூர் என்று பெயர். ராமர் மாதிரி வடக்கேயிருந்து வந்தால் நவபாஷாணத்துக்கு முன்னால் அது வந்துவிடும். அதுதானே பொருத்தம்? நவக்ரஹங்களைப் பூஜிப்பதற்கும் முதலில் ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொண்டுதானே ஆகவேண்டும்? எல்லாம் மநுஷ்ய ரீதியில் சாஸ்த்ரோக்தமாக, ஸம்ப்ரதாய பூர்வமாகப் பண்ணி வழிகாட்டியவர் ராமர். அவர் ஸேதுபந்தத்துக்கு முன் நவக்ரஹங்களை ப்ரீதி செய்தாரென்றால், அதற்கும் முந்தி ஸர்வ விக்ன ஹர்த்தாவான பிள்ளையாரையும் பூஜை பண்ணித்தானிருப்பார். அப்படி அவரால் பூஜிக்கப்பட்டவர்தான் நவபாஷாணத்துக்குப் பக்கத்தில இருக்கும் உப்பூர்ப் பிள்ளையார். வரப்ரஸாதி என்று அந்த வட்டாரத்திலுள்ளவர்களெல்லாம் கொண்டாடும் மூர்த்தி. மற்றவர்களுக்கு வரம் கொடுப்பாரே தவிர தமக்கு ஒரு கூரைகூட இல்லாதவர். தமக்கு மேலே விமானம் கட்ட அவர் விடுவதேயில்லை. எதையாவது விக்னத்தை உண்டுபண்ணி அதை தடுத்துவிட்டு, எளியவர்களில் எளியவராக, வெய்யில் மழை எல்லாம் தம்மேலேயே விழும்படி உட்கார்ந்திருக்கிறார்! “வெயிலுகந்த விநாயகர்” என்றே அவருக்குப் பெயர்.

தொந்தி கணபதிக்கு “டுண்டி” என்று ஸம்ஸ்க்ருதத்தில ஒரு பெயருண்டு. டுண்டிராஜ கணபதி காசியில் பிரக்யாதியோடு இருக்கிறார். அதன் ஸம்பந்தமாகத் தானிருக்க வேண்டும், தமிழ் தேசத்திலும் “தொண்டி” என்று விநாயக க்ஷேத்ரம் இருக்கிறது. இதுவும் ராமர் பூஜித்த க்ஷேத்ரமாகத்தான் சொல்லப்படுகிறது. வேதாரண்யத்திலிருந்து ஸமுத்ரக்கரை ஓரமாகவே தெற்காக வந்தால், ஏறக்குறைய வேதாரண்யத்துக்கும் உப்பூருக்கும் நடுபாதியில் தொண்டி இருக்கிறது. முதலில் ராமர் இங்கேயிருந்துதான் லங்கைக்கு அணைகட்ட நினைத்தாராம். இங்கே அதற்காக அவர் பிள்ளையார் பூஜை பண்ணப் பிள்ளையாரும் ப்ரஸன்னமானார். ராமருக்கு வெற்றி நிச்சயம் என்று வரம் கொடுத்துவிட்டு, ஆனால் ‘இங்கேயிருந்து அணைகட்டாமல் இன்னம் தெற்காகப் போய்க் கட்டினால் வேலை குறையும். தள்ளிப்போய்க் கட்டினால்தான் சுற்றி வளைக்காமல் லங்கைக் கோட்டையின் வாசல் பக்கத்துக்கே போய்விடலாம்’ என்று பிள்ளையார் யோசனை சொன்னாராம்.

இந்தத் தொண்டி விநாயகரும் தமக்கு மேலே விமானமில்லாமல்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மாமாக்காரர் மழையிலும் வெய்யிலிலும் அலைந்து கொண்டு லங்கைக்கு அணைகட்டிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் கோவில் கட்டிக்கொண்டு கொண்டாட்டம் அடிக்கக் கூடாதென்றுதான் இப்படி இரண்டு இடத்திலுமே இருக்கிறார் போலிருக்கிறது. ஆசார்யாள் “கணேச பஞ்சரத்ந” ஸ்தோத்ரம் செய்திருப்பது தொண்டி கணபதி மேல்தான்.

ஈச்வரஸுதனை ஸ்ரீராமர் ஆராதனை பண்ணி அநுக்ரஹம் பெற்ற பலன்தான், கடைசியில் அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணி விஜய ராகவனாக, அதோடுகூட இப்போது பறி கொடுத்திருந்த பத்னியைத் திரும்பவும் பெற்ற ஸீதா ராமனாகத் திரும்பிவந்து அந்த ஈச்வரனையே ராமலிங்கமாக ப்ரதிஷ்டை செய்தது.

ஆசார்யாள் பிம்பம் லாரியில் ராமேச்வரத்துக்குப் போயிற்று என்று சொன்னேனே, அப்போது அச்சரப்பாக்கத்தில் செய்த மாதிரியே உப்பூரிலும் நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்தது. ஈச்வரனக்குப் பிள்ளையார் இடைஞ்சலைப் போக்கினது முதல் ஊரில் என்றால், பின் ஊரில் அவரை ராமர் பூஜித்த விசேஷம்தானே, ஈச்வரனின் ஜ்யோதிர்லிங்க மஹாக்ஷேத்ரமான ராமேச்வரம் ஸாக்ஷாத் ஸ்ரீராம ப்ரஸாதமாக நமக்கு கிடைத்திருப்பது! ராமர், ஈச்வரன் இரண்டு பேருடனும் இப்படித் தம் ஸம்பந்தத்தை ராமேச்வரத்துக்கு போன ஆசார்யாள் காட்டிக்கொண்டு விட்டார். க்ருஷ்ணாவதாரத்தில் மஹாவிஷ்ணு மருமானைப் பூஜித்தது ஸ்வாரஸ்யமான பெரிய கதை*.


*இது அடுத்த உரையாக விரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is முருகனுக்குதவிய முன்னவன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸ்யமந்தகத்தின் கதை
Next