இந்த ஆராய்ச்சி செய்ததில், தொண்டை மண்டலத்தில் “கடிகை” என்ற பெயரில் இருந்த பெரிய வித்யாசாலைகள் போலவே தமிழ்நாட்டில் மற்ற இடங்களிலும் அந்தப் பெயரில்லாமலே இருந்துள்ள பெரிய வேத பாடசாலைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது.
இப்போது நமக்கு அபிப்ராயம் சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு ஆகியவற்றைப்போலத் தென்னார்க்காடு – வடார்க்காடு – செங்கல்பட்டுப் பகுதிகள் கொண்ட நடுநாடு வித்யையில் அவ்வளவு சோபித்திருக்காது என்று. சாஸனங்களைப் பார்த்தால் இந்த அபிப்ராயம் எவ்வளவு தப்பு என்று தெரியும்! ‘கடிகா ஸ்தானம்’ என்று பேரில்லாத வேறு பெரிய வித்யாசாலைகள் இந்தப் பகுதியில் இருந்திருக்கின்றன. கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் நடுவேயுள்ள பாஹூர் என்ற இடத்தில் ஐந்து செப்பேடுகளில் தொடர்ச்சியாக ஒரு சாஸனம் அகப்பட்டு ப்ரஸித்தி பெற்றிருக்கிறது. அதிலே இந்த பாஹூரில் சதுர்தச வித்யைகள் பதிநாலுக்கும் பதிநாலு டிபார்ட்மெண்ட்களோடு ஒரு பெரிய வித்யா ஸ்தானம் இருந்ததாகவும், அதன் அபிவ்ருத்திக்காக ஒன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் விஜயந்ருபதுங்கன் என்னும் அரசனின் மந்த்ரி மூன்று கிராமங்களை தானம் பண்ணினதாகவும் சொல்லியிருக்கிறது.
பாஹுருக்குப் பக்கத்திலேயே திரிபுவனம் என்ற ஊர் இருக்கிறது. (தஞ்சாவூர் ஜில்லா திரிபுவனம் அல்ல.) அங்கேயுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலின் கிழக்கு, மேற்கு, வடக்குச் சுவர்களில் ராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 1048ல் பொறித்த கல்வெட்டுக்கள். இதிலிருந்து திரிபுவனத்தில் ஸுமாராகப் பெரிசான வித்யாஸ்தானம் இருந்ததாகவும் அதில் 190 பசங்களும் 12 வாத்யார்களும் இருந்ததாகவும் தெரிகிறது. அறுபது பசங்கள் ரிக்வேதமும், இன்னொரு அறுபது பசங்கள் யஜுர் வேதமும், இருபது பசங்கள் ஸாமவேதமும், பாக்கி ஐம்பது பசங்கள் இதர சாஸ்த்ரங்களும் படித்திருக்கிறார்கள். இவர்களில் எழுபதுபேர் வேதாந்தத்திலும், ‘ரூபாவதாரம்’ என்ற அபூர்வமான வ்யாகரண சாஸ்த்ரத்திலும் ஸ்பெஷலைஸ் பண்ணியதாகத் தெரிகிறது. இவை தவிர ராமாயண, மஹாபாரதங்களும், மநு தர்ம சாஸ்த்ரமும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
வைகாநஸம் என்று ஒரு வைஷ்ணவ ஆகமம். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரதானமாக இருக்கப்பட்ட ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சீபுரம், மேல்கோட்டை என்ற நாலு க்ஷேத்ரங்களில் திருப்பதியில் மட்டும் வைகாநஸ ஆகமப்படி பூஜை நடக்கிறது. மற்ற மூன்றும் பாஞ்சராத்ர ஆகமத்தை அநுஷ்டிப்பவை. திரிபுவனம் பாடசாலையில் இந்த வைகாநஸமும் ஒரு ஸப்ஜெக்ட்.
இந்தக் கல்வெட்டில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு அம்சம், வாத்யார்கள் பசங்கள் ஆகிய இரண்டு பிரிவினருமே கல்வியைத் தவிர வேறெந்தக் காரியத்திலும் ப்ரவேசிக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரத்துக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் எண்ணாயிரம் என்று ஒரு ஊர். ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்று அதற்கு இன்னொரு பெயர் இருப்பதிலிருந்தே நாலுவேதமும் அறிந்த ப்ராம்மணர்களுக்கு அந்த ஊர் ராஜராஜனால் தானமாகக் கொடுக்கப்பட்டிருந்தது என்று தெரிந்துகொள்ளலாம். முதலாம் ராஜேந்த்ர சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. பதினோராம் நூற்றாண்டுச் சாஸனம். அதிலிருந்து இந்த எண்ணாயிரம் கிராமத்தில் 340 பசங்களும் 14 வாத்யார்களும் கொண்ட ஒரு பெரிய வித்யாஸ்தானம் இருந்ததாகத் தெரிகிறது. இதை இரண்டு பாகமாகப் பிரித்து, 270 பசங்கள் கீழ் வகுப்புக்கள் என்றும் 70 பேர் மேல்படிப்புப் படிப்பவர்கள் என்றும் வைத்திருக்கிறார்கள். அந்த 270 பேரில் 75 பேர் யஜுர்வதேம்;75 பேர் ரிக்வேதம்;20 பேர் அதே ஸாமவேதத்தில் சாந்தோக்ய சாகை; 20 பேர் அதே ஸாமவேதத்தில் தலவகார சாகை; 20 பேர் வாஜஸநேயம் என்னும் சுக்ல யஜுர்வேதம் (முதலில் யஜுர்வேதத்தில் 75 பேர் என்று சொன்னது தமிழ்தேசத்தில் இன்றளவும் மிக அதிகம் பேர் பின்பற்றும் க்ருஷ்ண யஜுஸ்ஸாக இருக்க வேண்டும்.யஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ண என்று இரண்டு உண்டு); அதர்வ வேதம் படித்தவர்கள் 10 பேர். வேத அங்கங்களில் ஒன்றான போதாயன க்ருஹ்ய கல்பம் 10 பேர் படித்திருக்கிறார்கள். முன்னேயே சொன்ன ரூபாவதாரம் 40 பேர்.