கும்பத்தின் பொருத்தம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வேத வித்யைக்கு இப்படிக் கும்பத்தை ஸம்பந்தப்படுத்தியிருப்பதைப் பார்க்கும்போது ஒரு பொருத்தம் தெரிகிறது. சற்றுமுன் சொன்னாற்போல வேத தர்மம் என்பது ஒரு மஹா வ்ருக்ஷம். அதற்கு வேர்தான் வேத அத்யயனம். இந்த வ்ருக்ஷத்தின் முடிவான பலனாக – “பலம்” என்றால் “பழம்” தான், தெரியுமோல்லியோ? – வேத தர்மத்தின் நிறைவாகப் பழுக்கும் பழமாக இருப்பதுதான் நம்முடைய தேவாலயங்கள். வேத மந்த்ரங்களையேதான் அந்த ஆலயங்களில் கோபுரங்களிலும், விமானங்களிலும், தெய்வ மூர்த்திகளிலும், அப்படியே இறக்கி நிரப்பி வைத்து லோகத்துக்கெல்லாம் க்ஷேமத்தை “ரேடியேட்” பண்ணும்படிச் செய்திருக்கிறது. அப்படி மந்த்ர சக்தியை அவற்றுக்குள் செலுத்தவும் கும்பமேதான் வருகிறது. கும்பம் என்ற கடத்துக்குள் உள்ள மந்த்ர தீர்த்தத்தைக் கும்பாபிஷேகத்தில் கோபுர விமான கலசங்களின் மேலும் (இந்தக் கலசங்களும் கும்பங்கள்தான்) ) , தெய்வ விக்ரஹங்களின் மேலும் கொட்டித்தான் கோயிலைக் கோயிலாக்குகிறோம். வேதப் பழமான ஆலயத்தில் வரும் கும்பமேதான் வேராக அத்யயனம் சொல்லித்தரும் வித்யாசாலையில் பரீக்ஷை கடமாக வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது!

கடிகாஸ்தானம் என்ற பெயர் இப்படித்தான் உண்டாயிற்று என்று தெரிந்து கொண்டபோது ரொம்பவும் ஸந்தோஷமும் த்ருப்தியும் ஏற்பட்டது. ரிஸர்ச்சில் பாஸ் பண்ணிவிட்டோமென்ற த்ருப்தி.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சிறிது ஸம்ஸ்க்ருத பாடம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தமிழகத்தின் வேதக் கலாசாலைகள்
Next