பல சாஸ்த்ரங்களுக்கு ஆதரவு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மேல் க்ளாஸில் இருந்த 70 பேரில் 25 பேர் வ்யாகரணமும், 35 பேர் பூர்வ மீமாம்ஸையிலேயே குமாரில பட்டரின் ஸித்தாந்தத்துக்குச் சற்று வித்யாஸமான உள்ள ப்ரபாகரின் ப்ராபாகர ஸித்தாந்தமும், 10 பேர் உத்தர மீமாம்ஸை எனப்படும் வேதாந்தமும் படித்திருக்கிறார்கள்.

(கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோவிலில்கூட ப்ராபாகர மீமாம்ஸைக்கு மான்யம் விட்டதைச் சொல்லும் ஆதித்ய கரிகாலனின் கல்வெட்டு இருப்பது ஞாபகம் வருகிறது.)

இன்னொரு சாஸனத்தின்படி, இதே எண்ணாயிரத்தில் பண்டிதர்களுக்கும், அப்படியில்லாதவர்களான ப்ராமணர்களுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நல்ல போஜனம் பண்ணுவிக்க மான்யம் விட்டிருந்ததாகத் தெரிகிறது. இப்படி தினமும் 506 ப்ராமணர்களுக்கு ஸந்தர்ப்பணை செய்யப்பட்டிருக்கிறது.

காஞ்சீபுரத்துக்குப் பன்னிரண்டு மைலில் பழையசீவரம் என்ற ஊர் இருக்கிறது. அதற்குக் கிட்டே பாலாற்றங்கரையில் திருமுக்கூடல் என்ற இடத்தில் உள்ள பெருமாள் கோயிலில் வீரராஜேந்திர தேவனின் 1067 ஆம் வருஷத்திய சாஸனம் இருக்கிறது. அதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் இந்தக் கோயிலின் வருமானத்திலிருந்து ஒரு வித்யாசாலையும் ஒரு வைத்யசாலையும் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த வித்யாசாலையில் 10 பேர் ரிக்வேதம், 10 பேர் யஜூர் வேதம், 20 பேர் வ்யாகரணம், 10 பேர் பாஞ்சராத்ரம் படித்திருக்கிறார்கள். வைகாநஸத்தைவிடப் பரவலாக இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ ஆகமம்தான் பாஞ்சராத்ரம் என்று சொன்னது நினைவிருக்கிறதா? அந்த வைகாநஸ ப்ராமணர்களில் ஐந்து பேர், இதேபோல் சிவன் கோவிலில் பூஜை செய்பவர்களான (சிவ யோகிகள் என்றும் இவர்களைச் சில இடங்களில் சொல்லியிருக்கிறது) சிவ ப்ராமணர்கள் மூன்று பேர் ஆகியோரும் இந்த வித்யாசாலையில் இருந்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அதர்வவேதமும் அநுஷ்டானத்தில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வேத - ஆகமங்கள்
Next