வேத – ஆகமங்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதிலே கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த சாஸனங்களில் ப்ராமணர்கள் என்று தனியாக மற்ற வேத சாஸ்திரக்காரர்களைச் சொல்லிவிட்டு, ஆலய பூஜையில் ஸம்பந்தப்பட்ட பாஞ்சராத்ரிகள், வைகாநஸர்கள், சிவாகமக்காரர்கள் ஆகியோரை அவர்களோடு சேர்க்காமல் பிரித்துச் சொல்லியிருப்பதாகும். வேதங்களை மாத்திரம் அநுஸரிப்பவர்கள், அவற்றோடு முக்யமாக வழிபாட்டு முறைகளான ஆகம தந்த்ரங்களையும் அநுஸரிப்பவர்கள் என்பவர்களை இப்படி ஒருத்தருக்கொருத்தர் வித்யாஸப்படுத்தியிருக்கிறது. ஒரேயடியாக வித்யாஸப்படுத்திப் பிரித்து வைக்கவுமில்லை – ஒரே வித்யசாலையிலேயே வேதத்தையும் சொல்லிக்கொடுத்து, ஆகமத்தையும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே! ஒரே ஸநாதன தர்மத்தின் இரண்டு கிளைகளாகவே வேத – ஆகமங்களை மதித்து வளர்த்து வந்திருக்கிறார்களென்று தெரிகிறது.

எண்ணாயிரத்துக்குக் கிட்டத்திலேயே உள்ள பணையவரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டிலிருந்தும் இப்படியே ப்ராமணர், சிவயோகி என்பதாக வைதிகர்களையும் ஆகம மார்க்கக்காரர்களை வித்யாஸப்படுத்தி, முன்னவர்களில் ஐம்பது பேருக்கும் பின்னவரில் பத்துப் பேருக்கும் அங்கே நித்யபடி நன்றாக போஜனம் பண்ணுவித்தது தெரிகிறது. (மலையாள தேசத்தில் இன்றைக்கும் உத்ஸவ காலங்களில் ‘அக்ரம்’ என்ற பேரில் எல்லா ப்ராமணர்களுக்கும் போஜனம் பண்ணுவிப்பதுபோல் அப்போது தமிழ்நாட்டிலும் நடந்திருக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஊஹம்.)

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பல சாஸ்த்ரங்களுக்கு ஆதரவு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸமரச அம்சம்
Next