அதற்குரிய முறைப்படி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஏனென்றால், நம்முடைய பண்டைய கலைகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் புதிதாக வித்யாசாலைகள் அமைப்பதில் ஜீவநாடியான அம்சமே. இவை மற்ற நாகரிக ஸ்கூல், காலேஜ் மாதிரியில்லாமல், அவற்றுக்கே உரிய பழைய முறைப்படி கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்பதுதான். ஸப்ஜெக்ட் பழைய சாஸ்திரமென்றால், அதைப் படிப்பிக்கும் முறையும் பழசாகவேதான் இருக்கவேண்டும். நம்முடைய கோவிலுக்கோ, மடத்துக்கோ வருவதென்றால் வெள்ளைக்காரிகூடப் புடவை கட்டிக்கொண்டு வருகிறாளோ இல்லையோ? அப்படி அததற்கும் ஏற்பட்ட வழிகளையும் வழக்கங்களையும் பின்பற்றினால்தான் அததற்கு உயிர்க்களை இருக்கும். அமெரிக்காவில் கட்டின கோயில் என்றால்கூட அங்கே பிஸ்கெட் நைவேத்யம் செய்யாமல் புளியோதரையைத்தானே கொண்டுவர வேண்டியிருக்கிறது? பரதநாட்யம் ஆடுகிறதென்றால் அதற்குக் கோவில் சிற்பத்தில் ஆயிரம் வருஷம் முன்பு காட்டியிருக்கிற ட்ரெஸ்ஸைப் பார்த்துத்தானே இன்றைக்கும் அநுஸரிக்கிறார்கள்? அதே போல ஹிந்து வித்யா – சாஸ்திரங்களுக்கென்று வித்யாசாலை வைத்தால் அதை இப்போதுள்ள யூனிவர்ஸிடிகள் மாதிரிப் பெரிய பெரிய கட்டிடங்களில் இங்கிலீஷ் ட்ரெஸ் போட்டுக் கொண்டு கற்றுக்கொடுப்பதென்றில்லாமல், பழைய ரீதியிலேயே முடிந்துமட்டும் செய்யவேண்டும்.

ஆதியில் குருகுலங்கள் வனத்திலே ரிஷிகளின் பர்ணசாலைகளில் இருந்தாற்போல் இப்போது காட்டுக்குள் கலாசாலை வைப்பதென்றால் முடியாதுதான். அப்புறம் நகரங்களிலேயே பெரிய கடிகாஸ்தானங்கள் ஏற்பட்டன. ஆனால் இப்படி டவுன்களில் நட்டநடுவில் தற்போது நான் சொல்கிற வித்யாசாலைகளை வைப்பதற்கில்லை. ஏனென்றால், கடிகா ஸ்தானங்கள் நடந்த அந்த இடைக்காலத்தில்கூட டவுன்-லைஃப் என்பது இப்போதுபோல் இத்தனை அநாசாரமும், லௌகிகமும் தலைவிரித்தாடுவதாக இல்லை.

‘டைவர்ஷ’னுக்கு இடமேயில்லாமல், பரிபூர்ண ப்ரம்மசர்ய அநுஷ்டானத்துக்கு எதிரான சபலங்கள் கொஞ்சமும் இல்லாமல் படிப்பே குறி என்று ஒருமுகப்படுத்தித்தான் பண்டைய குருகுலங்கள் வனங்களிலேயே நடந்தன. (அப்போது நாடு நகரம் குறைச்சல், காடுதான் அதிகம் என்பதையும் சொல்ல வேண்டும்) கட்டிடத்துக்குள்ளே கட்டிப்போட்டிருக்காமல் இப்படி இயற்கையோடு இயற்கையாகப் பச்சை மரங்களும் ஆற்றுப் பிரவாஹமும் சூழ்ந்த இடங்களில் மான்களோடு விளையாடிக்கொண்டு, மாடு மேய்த்துக்கொண்டு அந்தப் பசங்கள் வாழ்ந்ததும், பரந்த ஆகாசமே கூரையாக உட்கார்ந்துகொண்டு காயத்ரி அநுஸந்தானம் பண்ணினதுமே அவர்களை இப்போதுபோல் செயற்கையான, ‘மெகானிக’லான போக்குகளில் போகவிடாமல் நல்ல ஜீவசக்தியுடன் ஒவ்வொரு நிமிஷத்தையும் நிஜமாக வாழ்ந்து ஸந்தோஷிக்கும்படிச் செய்தது. இதை ரொம்பவும் ச்லாகித்தே டாகூர் ஒரே தோப்பும் துறவுமான இடத்தில் Forest University என்பதாகத் தம்முடைய விச்வபாரதி ஸர்வகலாசாலையை அமைத்தார் என்று சொன்னது நினைவிருக்கலாம் ‘யூனிவர்ஸிடி’ என்று சொல்லத்தக்க விதத்தில் ஒரே பெரிய வித்யாசாலை அதிகம் ஏற்படாத ஆதிகாலத்தில்கூட பல ரிஷிகள் பர்ணசாலைகள் அமைத்துக் கொண்டிருந்த வனப்பிரதேசங்களில் ஒவ்வொரு பர்ணசாலையும் ஒரு குருகுலமாக இருந்ததால் இயற்கை அழகு நிறைந்த விஸ்தாரமான பகுதிகள் அப்படியே ஒட்டுமொத்தமாக வித்யாபூமியாக விளங்கின.

தற்போது டவுன் – லைஃப் இருக்கும் சீர்கேடான ஸ்திதியில் எவ்வளவுக்கெவ்வளவு ஊருக்கு வெளியே இருக்க முடியுமோ அப்படி, கூடியமட்டும் இயற்கையான சூழ்நிலை பாதிக்கப்படாத விதத்தில், பெரிய கட்டுமானம், நாகரிக உடுப்பு ஆகியன இல்லாமல் நம் ஸ்வதேசிய சாஸ்திரங்களுக்கும்,கலைகளுக்கும் வித்யாசாலைகள் ஒருசிலவேனும் அமைக்கவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸ்வதேச வித்யைகளுக்கு 'திட்டம்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கிராமப் புள்ளிவிவரங்கள்
Next