வெள்ளையர் நாடுகளும் இஸ்லாமியர் நாடுகளும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“அநேக தேசங்களில் ஸமயக் கல்வி இருக்கத்தான் செய்கிறது. அங்கேயும் நீங்கள் சொன்ன ஒழுங்கீனம் இருக்கிறதே!” என்று கேட்கலாம்.

மேல் நாடுகளில் சும்மா ஏதோ ‘ப்ரேயர்’, பைபிள் கற்றுக் கொடுப்பது என்று வைத்துக்கொண்டிருப்பது போதவில்லைதான் – ஒப்புக்கொள்கிறேன். இதற்குக் காரணம்: அநுஷ்டான முறை என்று ஒன்றுக்குக் கட்டுப்பட ஆரம்பித்தாலே, மனம்போனபடி செய்வது குறைகிறது. மனஸை அது போனபடி விடுவதால்தானே பல தினுஸான குற்றங்களும் இழைக்கப்படுகின்றன? மேல்நாடுகளிலோ பசங்களை ஸமய அநுஷ்டானம் என்று கண்டிப்பாக ஒழுங்குமுறைகளில் கட்டுப்படுத்துவதில்லை. அதோடு ஸயன்ஸுக்கு அப்புறம்தான் ஸமயம் என்று ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில்தான் அங்கே உள்ள அறிஞர்களுக்கு (ஏன், வயஸு வந்தவர்களில் பெரும்பாலோருக்குமே) மதாபிமானமிருக்கிறது. அதுவே, துருஷ்க மதமுள்ள தேசங்களைப் பாருங்கள். நான் சொன்ன குற்றங்கள் இங்கேயெல்லாம் அவ்வளவு வலுக்கவில்லை. ராஜாங்க ரீதியில் பிறநாடுகளை துராக்ரஹம் செய்வது, “கூ” (COUP) செய்வது என்றிருந்தாலும், உள் நாட்டிலே அவர்களில் தனிமனிதர்கள் அவ்வளவாக முறைகெட்டுப் பண்ணுவதில்லை. சுற்றிலும் மற்ற தேசத்துக்காரர்கள் ஒரே தப்பு தண்டாவில் போகும் போது இவர்களும் அந்த வழிக்கு இழுக்கப்படத்தான் செய்கிறார்கள். ஆனாலும் மற்றவர்கள் போகிற அளவுக்கு இவர்கள் போவதில்லை. காரணம், ஸமயாநுஷ்டானக் கட்டுப்பாடு அந்நாடுகளில் பலமாயிருப்பதுதான். அதோடு நம்முடைய ஸமய சாஸ்த்ரங்களைச் சேர்ந்த தர்ம நூல்களிலேயே இன்ன குற்றத்துக்கு (பாபத்துக்கு) இன்ன தண்டனை என்று இருப்பது போலவே அவர்களுக்கும் மத நூலாகவே ‘ஷாரியத் என்ற சட்ட புஸ்தகங்கள் இருக்கின்றன. துருஷ்க நாடுகள் பலவற்றின் ராஜாங்கங்கள் புதிதாக Jurisprudence (சட்ட நூல்) செய்துகொள்ளாமல் ஷாரியத்தைத்தான் சட்டமாகப் பின்பற்றுகின்றன. மேல் நாட்டினரைப் போல இல்லாமல் துருஷ்கர்களுக்கு இன்றளவும் பொதுவாகத் தங்கள் மதத்தில் ஆழமான அபிமானம் இருக்கிறது. ஆதலால், சட்டவிரோதமாகப் போக மற்றவர்கள் துணிந்த மாதிரி, அல்லது அந்த அளவுக்கு, இவர்கள் மத விரோதமாகப் போகத்துணியாததால் குற்றங்களும் சற்றுக் குறைவாகவே உள்ளன. தினம் ஒரு ஃபாஷன் என்று மேல்நாட்டுக்காரர்கள் கன்னாபின்னா என்று போகிற மாதிரி இல்லாமல் துருஷ்கர்கள் தங்கள் பழைய நடை உடை பாவனைகளையே அதிகம் அநுஸரிப்பதைப் பார்க்கிறோமல்லவா? மொத்தத்தில், ஒரு ஒழுங்குக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தவர்களாயிருந்தால் குற்றத்தில் ஈடுபட மாட்டார்கள். ஹிந்து மதத்துக்கு ஹானியாக எத்தனையோ செய்தவர்களானாலும் அவர்களுடைய மதாபிமானக் கட்டுப்பாட்டைச் சொல்லாமலிருப்பதற்கில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is முரண்பாடு எதனால்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கம்யூனிஸ்ட் நாடுகளில்
Next