இப்படியேதான் மத உணர்ச்சி என்பதற்கே ஹானி செய்யும் கம்யூனிஸ்ட் நாடுகளிலும் பார்க்கிறோம். ஸமய ஸம்பந்தமே ப்ரஜைகளுக்குக் கூடாது என்று வைத்துக் கொண்டிருக்கிற கம்யூனிஸ நாடுகளான ரஷ்யாவிலும் சைனாவிலும் குற்றங்கள் குறைவாக இருக்கின்றன. கம்யூனிஸத்தை ஆஸ்திகர்களான நாம் ஒப்புக் கொள்வதற்கில்லைதான். அதற்காக, கம்யூனிஸ அரசாங்கங்கள் செய்யும் கெடுபிடிக் கண்டிப்பில் அவற்றின் பொதுமக்கள் அதிகமாகக் குற்றங்களும், மனம் போனபடிப் பண்ணும் அநேக ஒழுங்கீனங்களும் செய்யாமலிருப்பதை ஒப்புக் கொள்ளாமலிருப்பதற்கில்லை. “ஸமயக் கட்டுப்பாட்டிலிருந்து அவிழ்த்து உங்கள் எல்லோரையும் ஸமமாக, ‘காம்ரேட்’களாக ஆக்குகிறோம்” என்று சொல்லித்தான் கம்யூனிஸ ஆட்சியைக் கொண்டுவந்தார்கள். ஆனால் அப்போதே, அந்தக் கோட்பாடு போய்விட்டால் ஜனங்களை ஒழுங்கில் வைத்திருக்க முடியாது என்பதையும் தெரிந்து கொண்டு, அதைவிடக் கடுமையான ராஜாங்கக் கட்டுப்பாட்டில் மக்களைக் கட்டிப் போட்டுவிட்டார்கள்!
ஆனாலும் இப்படி மநுஷ்யனுக்கும், மநுஷ்யன் போட்ட சட்டத்துக்கும், அவன் கொடுக்கும் தண்டனைக்கும் பயந்தே ஒரு ஸமூஹம் கூடியமட்டும் ஒழுங்காயிருக்கிறதென்றால் அது பெருமை இல்லை. ஈசனுக்கு, ஈசன் சட்டத்துக்கு பயந்து ஒழுங்காயிருப்பதுதான் அழகு. அதை விடவும் அழகு, பெருமை எல்லாம் அவனிடம் ப்ரியத்தாலேயே நம் மனஸ் தன்னால் ப்ரியப்பட்டு அவனுடைய ஸ்வரூபமான தர்மத்தின் வழியிலிருந்து கொஞ்சங்கூட விலகாமல் ஒட்டிக்கொண்டிருப்பதுதான்.
ஆனாலும் அந்த அளவுக்கு எல்லாரும் வரமாட்டார்கள் என்பதால் தெய்வத்தால், அவன் போட்ட சாஸ்த்ர சட்டத்தால் இளம் தலைமுறையைக் கட்டுப்படுத்தி, இந்த சட்டத்தை அமல்படுத்தும் போலிஸ்காரர்களாக (கெடுபிடியோடு அருளும் நிரம்பிய போலீஸ்காரர்களாக) குருமார்கள் வித்யாசாலைகள் நடத்தினார்கள். பசங்களை நல்வழியில் கொண்டுவந்தார்கள். இப்படிச் செய்து கல்வி என்பது கெடுதலில் தூண்டிவிடாமல் ஸத்குண அபிவ்ருத்திக்கு உதவுவதே என்று காட்டினார்கள்.
ஸமயத்தையே வாழ்க்கை மையமாகக் கொண்டுள்ள நம் தேசத்திலும் ஸமய விரோதிகளான கம்யூனிஸ்ட்களைப் போலவே, ‘குடியரசு’ ஸர்க்கார் மதச் சார்பில்லாத கல்விதான் தருவது என்று வைத்துக்கொண்டிருப்பது நம்முடைய மஹத்தான துரத்ருஷ்டமாயிருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடுகளில் உள்ள ராஜாங்கக் கண்டிப்புமில்லாமல் எல்லாரையும் அவிழ்த்துவிட்டு இப்படிச் செய்திருப்பது….. வருத்தம் தான் படணும்.