சில்ப சாஸ்திரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆலய நிர்மாணம் என்றவுடனேயே சில்ப சாஸ்திரமும் வந்துவிடுகிறது. லோகமே ப்ரமிக்கும் சில்பங்கள் எண்ணி முடியாமல் கொட்டிக் கிடக்கிற தேசம் இது. சித்த விகாரத்தை உண்டுபண்ணுவதற்கில்லாமல், சித்தத்தை சுத்தம் செய்வதற்காக தெய்வ ஸம்பந்தமாக்கப்பட்ட சில்பங்கள். Cultural heritage (பண்பாட்டுப் பிதுரார்ஜிதம்) என்று இவற்றைப் புகழ்ந்துவிட்டால் போதாது. சில்பிகளுக்கும் ஸ்தபதிகளுக்கும் ஊக்க உத்ஸாகங்களைத் தந்து கௌரவப்படுத்தி, அவர்களிடம் பலபேர் போய் கற்றுக் கொள்ளத் தூண்டுதல் தரவேண்டும். இதைத் தெரிவிக்கவே ஆகம ஸதஸில் இவர்களையும் வரவழைத்து முக்யத்வம் தருகிறோம். நாங்கள் ஆரம்பித்தபின் ஈச்வரனும் கண்ணைத் திறந்து பார்த்ததில் (நாங்கள் ஆரம்பித்ததும் அவனுடைய அநுக்ரஹ பலத்தில்தான்!) நிறைய ஜீர்ணோத்தாரணப் பணிகள் நடந்து, புதுப்புதுக் கோவில்களும் தினம்தினம் உண்டாகிக் கொண்டிருப்பதால் சில்ப சாஸ்திரத்துக்கும், அது தெரிந்த சில்பிகளுக்கும், சில்ப சாஸ்திர போதனைக்கும் கொஞ்சம் நல்ல தசை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கும் கவர்ன்மென்டில் பள்ளிக்கூடம், பயிற்சிசாலை வைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக இந்த சாஸ்திரம் ஆதியிலேயே ப்ராமணர்களால் கற்பிக்கப்பட்டு, தற்பித்துச் செய்யப்பட்ட வேறு ஒரு ஜாதியாரிடம் குலத்தொழில் முறையாகப் போய்விட்டதால் இதிலே இப்போது அதிகமாக சாஸ்திர விரோதமான அநாசாரங்களைக் கலக்க இடமில்லை. ஒரு தூணில் வேலைப்பாடு செய்வது, ஒரு மூர்த்தி அடிப்பது என்றால் நாள்கணக்கில், ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக உழைத்தால்தானே முடியும்? இதில் ப்ராமணன் உட்கார்ந்தால் அவன் ஸகலருடைய க்ஷேமத்துக்காகவும் பண்ணவேண்டிய யக்ஞ கர்மாநுஷ்டானங்கள் என்ன ஆவது? அதனால்தான், வ்யாகரணம், தர்க்கம், மீமாம்ஸை முதலானதுபோல் தினமும் கொஞ்ச நேரம் வாயால் சொல்லிக் காதால் கேட்டு மனஸில் நிறுத்திக்கொள்வதாக இல்லாமல், நாள்பூரா உடம்பால் செய்யவேண்டிய கார்யத்திலேயே தன்னுடைய நோக்கத்தையும் ப்ரயோஜனத்தையும் உடையதான சில்ப சாஸ்திரத்தைத் தனியாய் ஒரு வகுப்புக்கு விடவேண்டியதாயிற்று.

இப்படியேதான் வைத்யம் முதலானவற்றையும் பிராமணனானவன் ‘தியரி’யை மட்டும் போதித்துக் குலத் தொழிலாக இன்னொரு வகுப்பாருக்குத் தந்தது. அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அதனால் ஜீவனோபாயம் கிடைத்தது. இது ஒன்றே தொழில் என்பதால் அவர்கள் நல்ல ஒருமுனைப்பாட்டோடு அதிலே ஈடுபட்டு, சிறந்த செய்நேர்த்தியைப் பெற்றார்கள். அநுபவ மெருகு ஏற ஏற ‘தியரி’ என்று தெரியாமலேகூட தங்கள் பிள்ளைகளுக்கும், சிஷ்யப் பிள்ளைகளுக்கும் ஒரு பழக்க ஸாமர்த்யத்தாலேயே சில்பம் போன்ற கலைகளைச் சொல்லிக்கொடுக்க முடிந்தது.

ஆனால் தெரியவேண்டிய அளவுக்குத் ‘தியரி’யும் தெரிந்துகொண்டு, எப்படி சாஸ்திர விரோதம் கொஞ்சமும் இல்லாமல் மூர்த்திகளைப் பண்ணவேண்டும், எப்படி மண்டபம் விமானம் முதலானவை எழுப்பவேண்டும் என்பதற்கெல்லாம் சில்ப சாஸ்திரங்களை ஒப்பிக்கிற ஞானமும் இவர்களுக்கு இருந்தது. (இப்போதும் இருந்துவருகிறது.) தெரியாத விஷயத்தில் ஸந்தேஹம் வருகிற விஷயத்தில் மாத்திரம் ப்ராமண குருவைக் கேட்டுக்கொண்டால் போதும் என்ற அளவுக்கு விச்வகர்ம வகுப்பு எனப்படும் இவர்களே இந்தக் கலையில் வித்யாப்யாஸம் தர வல்லவர்களாகிவிட்டார்கள்.

ஸமீப காலம் வரையில் நல்ல ஸதாசாரத்துடன் குடுமி, கச்ச வேஷ்டியுடன்தான் இவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதைய அவநிலையிலும்கூட இவர்களில் ரொம்பப்பேர் இப்படி இருக்கிறதைப் பாராட்டிச் சொல்ல வேண்டும். இவர்களுக்குப் பூணூல் உண்டு. சைவபோஜனம் தான் பண்ணுவார்கள். ஸம்ஸ்க்ருத த்வேஷமும் ப்ரம்மத்வேஷமும் இல்லாமல் சில்ப சாஸ்திர ப்ரகாரம் தொழிலைப் பண்ணுவார்கள். அதை நன்றாகப் படித்து விளக்கம் சொல்லும் ஞானமுள்ளவர்களும் இவர்களில் உண்டு. இப்போது “ஸமதர்மம்” என்று எதுவோ ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அந்த ஐடியாலஜிப்படி சில்பத்துக்கு கவர்ன்மென்ட் ஸ்கூல் அல்லது காலேஜ் என்றால் இதுவெல்லாம் நஷ்டமாக நேரும்தானே என்றால், “ஆமாம்” என்றுதான் வருத்தத்தோடு பதில்சொல்ல வேண்டியதாகிறது. “பின்னே, ‘இதில் அநாசாரம் அதிகமாக வராது’ என்றீர்களே!” என்றால், அதிகமாக வராது என்றேனேயொழிய வரவே வராது என்று சொல்லவில்லையே! காரணம், வேத சாஸ்திராப்யாஸத்துக்கு உள்ளது போல் அவ்வளவு கடுமையான நெறிகள் இதைக் கற்றுக் கொள்வோருக்கு இல்லை. நெறி கடுமையாய் இருக்க இருக்கத்தான், தோஷம் ஏற்படவும் அதிக சான்ஸ் உண்டு. மேலும் ஆசாரத்திலே கொஞ்சம் முன்னே பின்னே இருப்பவர்கள் சிற்பக்கலை கற்றுக்கொண்டு மூர்த்திகள் அடித்துக் கோயில்கள் கட்டினாலும்கூட அந்தக் கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் பண்ணி, மூர்த்திகளை பிரதிஷ்டை செய்யும்போது ஸகல அநாசாரங்களும் மந்த்ர பூர்வமாக நிவ்ருத்தி செய்யப்படுவதால், நடுவில் ஏற்பட்ட தோஷங்களும் போய்விடுவதாக த்ருப்திப் படலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வாஸ்து சாஸ்த்ரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கிராமக் கலைகள்
Next