வாஸ்து சாஸ்திரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆகமத்தில் கோயில் கட்டுவது பற்றி வந்தாலும், கோயிலை ஊரிலே எங்கே அமைப்பது, அந்த ஊரையே எப்படி அமைப்பது, அதில் வீடுகளை எப்படி அமைப்பது, அந்த வீடு ஒவ்வொன்றையும் எப்படி அமைப்பது என்பதையெல்லாம் சொல்ல ப்ராசீனமாக வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. காற்றும் வெளிச்சமும் இருக்கிற விதத்தில், குடிதண்ணீர் கிடைக்கும் விதத்தில், கழிவு நீர் ஓடுகிற விதத்தில் வீட்டையும் ஊரையும் நிர்மாணம் செய்தால் மட்டும் போதாது. இதை மட்டுமேதான் இன்று கவனிக்கிறார்கள் – அல்லது கவனிப்பதாகப் பேர். இவற்றையும் சொல்லி, இதைவிட முக்யமாக, எப்படி நிர்மாணித்தால் உத்தமமான திவ்ய சக்திகளின் ரேடியேஷன் ஊருக்கும் வீட்டுக்கும் கிடைக்குமோ, எப்படி நிர்மாணம் பண்ணும்போதுதான் நம் கர்மாநுஷ்டானங்களுக்கு ஸெளகர்யமாயிருக்குமோ அப்படிச் செய்வதற்கு வாஸ்து சாஸ்திரம் வழி கூறுகிறது. கூடம், தாழ்வாரம், முற்றம் முதலியவை கூடாது என்று ரூம் ரூமாகக் கட்டினால் ஔபாஸனப் புகை எப்படி வெளியே போகும்? அநுஷ்டானத்துக்கு ஏற்றதாக வீட்டு அமைப்பு இருக்கவேண்டுமானால் வாஸ்து சாஸ்திரப்படிதான் செய்யவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆகம சாஸ்த்ரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சில்ப சாஸ்த்ரம்
Next