ஆசிரியர்களையும் உண்டாக்க வேண்டும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இன்னம் எத்தனையோ சாஸ்திரங்களிருக்கின்றன. இப்போதைய ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஜுவாலஜி, ஜியாலஜி, இன்ஜினீயரிங் முதலியவற்றுக்கு நம் தேசத்திலேயே மூல சாஸ்திரங்கள் இருக்கின்றன. வராஹமிஹிரரின் “ப்ருஹத்ஸம்ஹிதை”யையும், போஜராஜனின் ‘ஸமராங்கண ஸூத்ரதார’த்தையும் பார்த்தால் இவற்றைப்பற்றி அறியலாம். ஆனால் இவற்றில் மேல்நாட்டு ஸயன்ஸ்களே இங்கேயும் ப்ரசாரமானபின் நம் ஸ்வதேச விஞ்ஞான சாஸ்திரம் தெரிந்தவர்களே இல்லாமல் போய்விட்டார்கள். அதனால் இவற்றில் வாத்யார்கள் கிடைப்பதே ஸாத்யமில்லாததாகத் தோன்றுகிறது.

ஆனால் அறிவாளிகளாக, ஆராய்ச்சித் திறன் உள்ளவர்களாக இருப்பவர்கள் பழைய புஸ்தகங்களைப் பார்த்தும், மேலும் பல பழைய சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்தும் பழைய வழிமுறைகளையும் அறிய முடியும்.

அறிந்தவர்கள் அப்புறம் வாத்யாராகி சிஷ்யர்களைத் தயாரிக்கவேண்டும்.

இப்படியாகச் சில வித்யைகளை இன்று கற்றுக் கொள்ளச் சிஷ்யர்கள் மட்டுந்தான் இல்லை என்றில்லாமல், அவற்றைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களும் இல்லாமலிருக்கிறது. இப்படிப்பட்டவற்றில், நல்ல புத்தி வன்மை உள்ளவர்களுக்குப் பழைய நூல்களைத் தேடி எடுத்துக்கொடுத்து, அல்லது அவர்களே தேடிப் பெறுவதற்கு எல்லா வசதியும் செய்துகொடுத்து, அவற்றை அவர்கள் படித்து ஆராய்ந்து அறியச் செய்யவேண்டும். இப்படி ஆசிரியரை முதலில் ஸ்ருஷ்டி செய்துவிட்டு, அப்புறம் இவரிடம் மாணவர்கள் சேர்ந்து இவர் புதிதாகத் தெரிந்து கொண்ட பழைய வித்யையைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கிராமக் கலைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இயற்கை விதிகளுக்குப் பிடிபடாத வித்யைகள்
Next