பயத்தோடு, ப்ரியத்தோடு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ராஜாக்கள், ப்ரஸிடென்ட்கள் எல்லோருக்கும் மேலே த்ரிலோகங்களுக்கும் ராஜாவாக இருக்கப்பட்ட ஈசனுடைய குழந்தை அவர். மூத்த குழந்தை. மூத்தது ஸாது என்று வசனம். அதனால் இவரை த்ருப்தி செய்வது ரொம்பவும் ஸுலபம். அதற்காக இஷ்டப்படி இருந்துவிட முடியாது. நமக்கு ரொம்பவும் இடம் கொடுத்துப் போய்விடப் போகிறதேயென்றுதான் கம்பிரமான யானை ஸ்வரூபமாயிருக்கிறார்! அதனால் கொஞ்சம் ஜாக்கிர்தையாகவுந்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விக்னங்கள் பண்ணுவார்! இவருடைய மஹா பெரிய தகப்பனார், தாயார் சொன்னேனே, அவர்களுக்கே விக்னம் பண்ணி, “உம் ஜாக்ரதை” என்று அதன் மூலம் நமக்கும் ‘வார்ன்’ பண்ணுகிறார்.

‘சின்ன எசமான்’ என்று பிரியத்தோடேயே கொஞ்சம் பயமும் சேர்த்து இவரைப் பூஜை பண்ணிவிட்டால் அப்படியே ப்ரீதியாகி விடுவார். அதிலேயே பார்வதி பரமேச்வராளும் உச்சி குளிர்ந்து விடுவார்கள். இவருடைய மாதா பிதாக்களான அந்த அம்பிகையும் ஈச்வரனுந்தானே இத்தனை லோகங்களையும் , அவற்றில் உள்ள நம் போன்ற ஸமஸ்த ப்ராணிகளையும் ஸ்ருஷ்டித்து, ரக்ஷித்து வருகிற ஸர்வ சக்தர்கள்? அவர்களுடைய அநுக்ரஹத்தைப் பெற்று விட்டால் நாம் இஹம் பரம் இரண்டிலும் எந்த நன்மையும் பெற்றுவிடலாம். ஆனால் நேராக அவர்களையே பூஜை பண்ணி அனுக்ரஹத்தைப் பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. சிவபூஜை, அம்பாள் பூஜை ஆகியவற்றுக்கு அநேக நியமங்கள் உண்டு. அதையெல்லாம் நாம் க்ரமமாக அநுஸரிப்பது ச்ரமம். ‘ஆசுதோஷி’ , ‘க்ஷிப்ர ப்ரஸாதினி’ என்றெல்லாம் (‘எளிதில் த்ருப்தியாகி அநுக்ரஹிக்கிறவர்கள்’ என்று அர்த்தம் கொடுக்கும்) பெயர்கள் அவர்களுக்கு இருக்கிறதென்றாலும் சிவன் கோயில், அம்பாள் கோயில் என்று போனால், இங்கேதான் நிற்கணும், இங்கேதான் நமஸ்காரம் பண்ணணும், இன்ன புஷ்பம், இன்ன நைவேத்யம்தான் அர்ப்பணம் பண்ணணும் என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடு இருக்கிறது? ஸ்ரீ சக்ர பூஜையில் கொஞ்சம் தப்பு ஏற்பட்டுவிட்டால்கூட என்னென்னவோ (கெடுதல்) ஏற்பட்டுவிடுகிறது என்கிறார்கள்! ‘சிவ ஸொத்து, குல நாசம்’ என்கிற மாதிரி வசனங்களைக் கேட்டாலே பயமாயிருக்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  எளிதில் கிடைப்பவர்
Next