எளிதில் கிடைப்பவர் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படியெல்லாம் பயமாக, கஷ்டமாக இருப்பவைகளை எளிதாக ஆக்கித் தருவதற்குத்தான் நமக்குப் பிள்ளையார் இருக்கவே இருக்கிறார். எங்கே பார்த்தாலும் படர்ந்து கிடக்கும் அருகம்புல்லைப் பிய்த்து அவர்மேலே போட்டுவிட்டால் போதும். அதிலேயே த்ருப்தியாகி விடுவார். மநுஷ்யர்கள் எவரும் வைத்துக் கொள்ளாத பூ, அதனால் கடையில் விலைக்கு வராத பூ, செடியிலே யதேஷ்டமாகப் பூத்துக் கிடக்கிற அந்த எருக்கம்பூவில் நாலு, கைக்காசுக்குச் செலவில்லாமல் பறித்து வந்து பிள்ளையார் பாதத்தில் போட்டுவிட்டால் அப்படியே பரம ஸந்தோஷம் அடைந்து விடுவார். ஏதோ பிரப்பம் பழமோ, கொய்யாப் பழமோ, பரம ஏழைக்குக்கூட கிடைக்கக் கூடியது, அதைக் கண்ணில் காட்டினால் குளிர்ந்து போய்விடுவார். இன்னும் கொஞ்சம் நமக்கு வசதி இருந்தால் ஒரு தேங்காய் அர்ப்பணம் பண்ணலாம். அதைக்கூட மந்த்ரம், கிந்த்ரம் சொல்லி நைவேத்யமென்று பண்ண வேண்டுமென்பதில்லை. “சிதறு காய்” என்று அவருக்கு முன்னால் போட்டு உடைத்தாலே போதும். அந்தத் துண்டத்தை நாலு ஏழை குழந்தைகள் பொறுக்கித் தின்றுவிட்டால் அந்தக் குழந்தைகளின் ஸந்தோஷத்திலேயே ஸாக்ஷாத் ஈசனின் மூத்த குழந்தையும் பரமானந்தம் அடைந்துவிடும்.

இதை விடவும் சௌகர்யம் இருந்தால் இந்தக் குழந்தைக்குச் சாக்லேட்டுக்குப் பதில் மோதகம் நிவேதனம் செய்யலாம். இதையும் அவர் கண்ணில் காட்டிவிட்டு, மற்ற குழந்தைகளுக்குத் தந்து நாமும் சாப்பிட்டே அவரை ஸந்தோஷப்படுத்திவிடலாம். ‘மோதகம்’ என்றால் ஆனந்தம் என்று அர்த்தம். பொங்கும் ஆனந்தமே உருவான ஆனைக்குட்டியாக அவர் இருப்பதால் அவரைப் புதிதாக நாம் ஸந்தோஷப்படுத்துவது என்பது கூட இல்லை. அவரிடம் போய் நின்று விட்டாலே போதும், ப்ரீதியடைந்து விடுவார். நாமும் அவர் ப்ரீதியை ஸம்பாதித்துக் கொண்டு விடலாம். தத் த்வாரா (அதன் வழியே) ஈஸ்வரன் அம்பாள் ஆகியோரின் ப்ரீதியையும் பெற்றுவிடலாம்.

அவரிடம் போய் நிற்பதிலும் கஷ்டமில்லை. அவர் கோயிலுக்கு என்று நாம் ச்ரமப்பட்டுக்கொண்டு, எங்கேயோ அலைந்து திரிந்துகொண்டு போகணும் என்பதே இல்லை. எந்த சந்து பொந்துப் பக்கமாக, ஆற்றங்கரை குளத்தங்கரைப் பக்கமாக, அரசமரப் பக்கமாக நாம் போனாலும் அரை மைலுக்குள் நாலு பிள்ளையார் கோவிலாவது கண்ணில் பட்டுவிடும், கொடிக்கம்பத்துக்கு அந்தண்டை நமஸ்காரம்; கர்ப்ப க்ருஹத்துக்குள்ளே போகப் படாது; நந்திக்குக் குறுக்காலே போகப்படாது – இந்த மாதிரிக் கட்டுப்பாட்டுக்கெல்லாம் இடமில்லை. அவர் இருக்கிறதே ஒரே உள்தான். அல்லது அதுகூட இல்லாமல், ஆகாசம் பார்க்க அவர் பாட்டுக்குக் காற்றாட மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். தீண்டாதாரா, இதர மதஸ்தர்களா-பார்க்கலாமா, கூடாதா என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லாமல் ஸகல ஜனங்களின் கண்ணிலும் படும்படி உட்கார்ந்திருப்பார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பயத்தோடு, ப்ரியத்தோடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாட்டனார் பெருமை
Next