வேதாந்த விஷயத்திலும் இப்படியே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

யோக சாஸ்திரம் பற்றி நான் சொன்ன ஒரு அம்சம் வேதாந்தத்துக்கும் பொருந்துவதுதான். எப்படி ஒரு யோகியை நாம் குருவாக உட்கார்த்திவைத்து, சிஷ்யன் பிடித்துக்கொடுக்க முடியாதோ அப்படியேதான் வேதாந்தத்தை அப்யஸித்து ஸித்தி பெற்ற ஞானி விஷயமும். பக்திச்சார்புள்ள வேதாந்த ஸம்ப்ரதாயமானால் அதிலே ஸித்திபெற்ற பரம பக்தரையும் இப்படி நாம் குருகுலத்தில் கொண்டுவர முடியாது. இங்கேயும் அறிவு ரீதியில் வேதாந்த சாஸ்திர ஞானம் தரத்தான் நாம் குருகுலம் வைக்கவேண்டியதே தவிர, அதை அங்கேயே அநுபவமாகப் பண்ணித் தருவதற்கு அல்ல. பூர்வகால வித்யாப்யாஸத்திலும் இப்படித்தான் வேதாந்த சிக்ஷை நடந்ததென்று சொன்னேனல்லவா? தற்போது வித்யாசாலையில் கற்றதைக் கொண்டு வித்யார்த்தி பிற்பாடு ஒரு உத்தமமான ஞானகுருவை, அல்லது பக்த ச்ரேஷ்டரை, அல்லது யோகீச்வரரை அடைந்து ஸாதனைக்குப் போய்க்கொள்வான். ஆனால் அறிவு ரீதியில் சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ளும்போதுகூட அதை குணத்தோடும் ஆசாரத்தோடும் ஸம்பந்தப்படுத்தாமல் இப்போது விட்டிருப்பதுபோல் இருக்கக்கூடாது. நல்ல ஒழுக்கக் கட்டுப்பாட்டுடனும்,பக்தி விச்வாஸம் முதலான பண்புகளுடன் கற்றுக்கொண்டால்தான் மாணவன் நன்றாக உருவாவான், கல்வியும் பிற்காலத்தில் கொஞ்சங்கூட தப்பு வழியில் ப்ரயோஜனமாகாமல் நல்லதற்கே ஆகும் என்பதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன்.

இப்படி நம் தேசத்துடையதாக வந்துள்ள ஸகல கலைகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் நம் தேச முறைப்படியே தொடர்ந்து வித்யாப்யாஸம் நடக்க நாமெல்லாரும் முனைந்து ஏற்பாடுகள் செய்யவேண்டும். முடிந்தமட்டும் குருகுல அம்சங்கள் இருக்கும்படியாக இந்த வித்யாப்யாஸத்தை அமைக்கவேண்டும். அப்போதுதான் ஆசாரமும் குணமும் வித்யையோடு கைகோத்துக் கொண்டு போகும். ஆசாரம், குணம் இல்லாவிட்டால் வேதமே வேதமில்லை என்று வசனம் ஓதுவதைவிட (அதாவது கற்பதைவிட) ஒழுக்கம்தான் ப்ராமணனுக்கு முக்யம் என்று வள்ளுவரே தீர்ப்புச் சொல்லியிருக்கிறாரே!*


* மூன்றாம் பகுதியில் “ஆசார விஷயங்கள்” என்ற உரையில், “ஆசாரங்களின் பாகுபாடு; குறள் தீர்ப்பு” என்ற உட்பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'தியரி' மட்டும், ப்ராக்டிஸ்' இல்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  செய்யவேண்டிய பணிகள்
Next