நன்றாகப் படித்தறிந்த ஒருத்தர் நாலு பேருக்காவது அதைப் படிப்பிக்காமல் போனார் என்று ஏற்படவே கூடாது. நன்றாகக் கற்று வித்வானாகிற எவனும் அப்புறம் தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து ப்ரசாரம் செய்தேயாக வேண்டுமென்பது ஆன்றோர் விதித்த விதி. தன்மட்டில் கற்றவனாயிருந்து பயனில்லை. கற்பிப்பவனாயிருந்து கல்வியின் பயன் வருங்கால ஸமுதாயத்துக்கும் போகும்படி செய்யவேண்டும்.
மநுஷ்யனுடைய வாழ்க்கையில் ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸந்ந்யாஸம் என்று நாலு ஆச்ரமம் உள்ளது என்றால், கல்வி கற்பிப்பதிலும், நாலு ஸ்டேஜ்கள் உண்டு. அதீதி, போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று இந்த நாலுக்குப் பேர். அதீதி என்றால் படிப்பது. முதலில் நன்றாகப் படிக்கவேண்டும். அப்புறம் போதம், அதாவது படித்ததை நன்றாகப் புரிந்துகொண்டு அதிலே மேலும் புது அறிவு பெறுவது. மூன்றாவதாக ஆசரணை. முதலிரண்டும் இப்போதுங்கூடப் பல ஸப்ஜெக்ட்களில் நடந்துவிடுகின்றன. ஆனால் இந்த மூன்றாவது விஷயத்தில் தான் கோளாறாக இருக்கிறது. அது என்ன? ஆசரணை என்றால் அறிவிலே இறக்கிக் கொண்டதை நம்முடைய வாழ்க்கையிலே இழைத்து, நடைமுறையில் நடத்திக் காட்டுவது என்று அர்த்தம். கற்றபின் அதற்குத் தக நிற்பது ஆசரணை.
இந்த மூன்றோடு மட்டும் வித்வானின் லக்ஷணத்தை முடிக்காமல், முடிவாக ‘ப்ரசாரணை’ என்றும் ஒரு நாலாவது லக்ஷணம் சொல்லியிருக்கிறது. இதுதான் தான் கற்ற கல்வி தன்னோடு போகாமல் அதை நாலுபேருக்குக் கற்றுக் கொடுப்பது. ப்ரசாரம் செய்வது ப்ரசாரணை.
ஸ்ரீ ஹர்ஷர் இந்த விஷயத்தைக் கவி சாதுர்யத்தோடு சொல்லியிருக்கிறார். நளனுடைய கதையை “நைஷதம்” என்ற பெயரில் எழுதியிருப்பவர் அவர். நளன் நிஷத தேசத்து ராஜாவானதால் புஸ்தகத்துக்கு “நைஷதம்” என்று பெயர் வைத்தார். வித்வான்கள் விரும்பும்படியான காவ்யம் அது. “நைஷதம் வித்வத் ஒளஷதம்” – நைஷத காவ்யமானது வித்வான்களுக்கு லேஹ்யம் மாதிரி – என்று சொல்வார்கள். அதிலே அவர் நளன் சதுர்தச வித்யைகளைக் கற்றுத் தேர்ந்தான் என்று சொல்லும்போது இந்த ஸமாசாரம் சொல்லியிருக்கிறார். ‘சதுர்தச’ என்ற வார்த்தையில் சிலேடை செய்து சொல்லியிருக்கிறார்.
‘சதுர்தச’ என்ற வார்த்தை இரண்டுவிதமாக அர்த்தம் கொடுக்கும். பதிநாலு என்பது ஒரு அர்த்தம். தசம் – பத்து, சதுர்தசம் – நாலு ப்ளஸ் பத்து, அதாவது பதிநாலு நாலு வேதம், அதன் ஆறு அங்கம், நாலு உபாங்கம் என்பவை சேர்ந்து பதிநாலு வித்யைகள்.
‘சதுர்தச’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் நாலு தசை, நாலு விதமான ஸ்டேஜ்கள் என்பது.
சதுர்தச வித்யைகளைக் கற்று, அவற்றுக்கு அதீதம், போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று சதுர்தசைகளை நளன் கொடுத்தான் என்று (கவி ஸ்ரீஹர்ஷர்) வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்.
அதீதபோத ஆசரண ப்ரசாரணை:
தசாச் – சதஸ்ர: ப்ரணயந் நுபாதிபி: |
சதுர்தசஸ்த்வம் க்ருதவாந் குதஸ்வயம்
நவேத்மி வித்யாஸு சதுர்தசஸ்வயம் ||