எனவே தற்போது வித்வானாக இருந்துகொண்டும் சிஷ்யர்கள் கிடைக்காமலிருப்பவர்களை முதலில் பிடித்து அவர்களிடம் சில பேராவது சேர்ந்து படிக்கும்படி வசதி செய்துதர வேண்டும்.
Chair என்று யூனிவர்ஸிடிகளில் வைப்பதுபோல் இந்த வித்வான்களை வைத்து அதே போன்று ஸன்மானம் கிடைக்கச் செய்யவேண்டும். ஸன்மானம் என்பது தாம்பாளத்தில் வைத்து நீட்டுவது மட்டுமல்ல, ஸமூஹத்தில் கௌரவத்தை உண்டாக்குவதும்தான். ராஜாவைவிடப் பண்டிதன் மேல்-இவனக்குத்தான் “சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று போற்றிய நம் தேசப்பண்பு மறைய விடக்கூடாது.
அபூர்வமான பழைய சாஸ்தி்ரங்களில் பண்டிதர்களாகக் கிடைக்கக் கூடியவர்களையெல்லாம் நம் மடத்திலேயே சேர்த்து நிரந்தரமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், அவர்களைக் கொண்டு சிஷ்ய பரம்பரைகள் உற்பத்தி பண்ணவேண்டுமென்றும் எனக்குப் பேராசை. அம்பாள் ஸங்கல்பம் எப்படியோ?
எவனாவது ஒரு மாணவன் பழைய சாஸ்தி்ரங்களில் ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, நிஜமான ஆர்வத்துடன் அதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால், ‘உனக்கு வாத்யாரில்லை, நீயே ஏதாவது புஸ்தகம், சுவடியைத் தேடி முட்டிக்கொள்’ என்று சொல்லாமல், ‘வாப்பா, உனக்காகத்தான் இதோ வாத்யார் தேடிப் பிடித்து வைத்திருக்கிறோம்; நீ வருவாயா வருவாயா என்றுதான் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நாம் சொல்லும்படியாக ஏற்பாடுகள் செய்து நமக்குப் பெருமை தேடிக்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொடுக்கத் தெரியாத, அல்லது இஷ்டப்படாத பண்டிதர்களையும் பிரார்த்தித்துக் கொண்டு,”மசித்து”, அந்த சாஸ்தி்ரம் அவரோடு போகாமல் நாலு சிஷ்யர்களிடம் சேருமாறு செய்யவேண்டும். அவர் இந்த வழிக்கு வரமுடியாதவர் என்றே ஏற்பட்டாலும், அல்லது அவரிடம் படிக்க எவனுமே வரவில்லை என்று ஏற்பட்டாலும்கூட, அவருக்குப் பராமரிப்பு தரத்தான் வேண்டும். என்றைக்கோ உப்புக் காய்ச்சிப் பத்துநாள் ஜெயிலுக்குப் போனவர்களை த்யாகி என்று கௌரவப்படுத்தி ஆயுஸ் பூரா பென்ஷன், அவர்கள் “போயிருந்தால்கூட” அவர்களுடைய குடும்பத்துக்குப் பென்ஷன் என்று கொடுக்கவில்லையா? அம்மாதிரி அறிவுக்கே தங்களைத் தந்துகொண்டு எந்த சாஸ்திரமானாலும் ஸரி, கலையானாலும் ஸரி, அதை ஸாங்கோபாங்கமாகத் தெரிந்துகொண்டிருக்கிறவர்களுக்கும் நாம் வாழ்க்கை வசதிகள் கொடுத்து, மரியாதை பண்ணி வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் சிஷ்யர் என்று வைத்துக்கொண்டு பாடம் சொல்லித் தராவிட்டால்கூட அவர்களை அபிமானித்து, உத்ஸாஹப்படுத்தி வைத்துக் கொண்டால் எப்படியோ ஒரு விதத்தில் அவர்களுடைய சரக்கு வெளியிலே வராமல் போகாது. ஸதஸ்களில் அவர்களைப் பேசப் பண்ணி நோட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். அறிஞர்களாக உள்ளவர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டு (“பரிப்ரச்னம்” பண்ணி) விஷயங்களைக் கறந்து கொள்ளலாம். அவருடைய சாஸ்தி்ரத்தில் குறிப்பாக topic-களைச் சொல்லி வ்யாஸம் (thesis) மாதிரி எழுதப் பண்ணலாம், அல்லது அவருடைய ஸஹாயத்துடன்அறிவாளிகளே எழுதலாம். ஆக, நம் சாஸ்தி்ரங்களைக் காக்க நம்மால் என்ன பண்ண முடியுமோ அவ்வளவும் செய்யவேண்டும்.