அஹம் குறைய “அவனை”த் தொடர்புறுத்துக! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இங்கே அந்த உளி எப்படி ஈச்வர ஸம்பந்தம் பெற்றதோ, சில்பி எப்படி தன் கலைத்திறமையை ஈச்வரார்ப்பணம் பண்ணினானோ அப்படியேதான் எந்தக் கலையானாலும் சாஸ்தி்ரமானாலும் ஸயன்ஸானாலும் அதை ஈச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இல்லாவிட்டால் ‘இதிலே நாம் கெட்டிக்காரன்’ என்ற அஹங்காரம்தான் உண்டாகும். ஆச்ரயிப்பவர்களின் அஹங்காரத்தைக் குறைக்கத்தான் மதபீடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நம்முடைய பெரிய பண்பாட்டுப் பாரம்பர்யம் வீணாகப் போகப்படாது என்பதில் எனக்கு இருக்கிற ஆசையினால் அனைவரும் நம்முடைய வித்யைகளில் ஒன்றையேனும் நன்கு கற்ற அறிவாளிகளாக ஆகவேண்டும், அல்லது கலைஞர்களாகவேண்டுமென்று சொல்லி உங்களைத் தூண்டிக்கொண்டிருப்பதில், பீடத்தின் முக்ய உத்தேசமான அஹங்காரக் குறைப்புக்கு நேர் எதிராகப் பண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலே சொல்கிறேன் – அனைவரும் அறிவாளிகளாக வேண்டியதுதான். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சிபெற வேண்டியதுதான். ஆனால் அதே ஸமயத்தில் அனைவருக்கும் நல்ல பக்தியும் இருக்கவேண்டும். ‘கற்பதெல்லாம் அவன் அருளால், கலைகளெல்லாம் அவன் ப்ரஸாதம்’ என்ற எண்ணத்தோடு கற்கவேண்டும். அப்புறம் அதை ப்ரயோஜனப்படுத்துவதும் முடிவாக அவனை நினைவுப்படுத்துகிற விதத்திலேயே இருக்கவேண்டும்.

பாஷா சாஸ்தி்ரத்தில் போனாலும் சப்த ப்ரஹ்மத்தைக் காட்டிக் கொடுக்கவேண்டும். ஸங்கீதத்தில் போனால் நாத ப்ரஹ்மத்தில் முடிக்கவேண்டும். வாதம், அறிவாராய்ச்சி என்று போனாலும் இவற்றால் எந்த அளவுக்குப் பரமாத்ம தத்வத்தைக் காட்டிக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அதைச் செய்யவேண்டும். கணிதமும் ஸங்க்யை (எண்ணிக்கை) யில் அளவிடமுடியாத ஆத்ம தத்வத்தை நினைப்பூட்ட முடியும் – பாஸ்கர ராயர், ஆர்யபடர் முதலியவர்களுடைய கணித நூல்களின் மங்கள ச்லோகங்களைப் பார்த்தால் தெரியும், அவர்கள் எப்படி இதையும் ஈச்வர ஸம்பந்தமாக்கினார்களென்று. தாவர சாஸ்தி்ரமா, biology -யா (உயிரியல் சாஸ்திரமா), எதுவானாலும் ஸ்ருஷ்டிகர்த்தாவின் விசித்ர விசித்ரமான கல்பனா சக்தியை ரஸிக்கவைப்பதில் முடியமுடியும். ஜாகரஃபி அவன் எப்படி ஜகத்ஸ்வரூபமாக மலைகள், பீடபூமிகள், நதிகள், பாலைவனங்கள், க்ளைமேட்டுகளாக விதவித வேடிக்கை பண்ணுகிறான் என்பதைக் காட்டும்படிச் செய்யமுடியும். ‘அஸ்ட்ரானமி’ அவன் அந்தரத்தில் கோடாநு கோடி லோகங்களை அதிசய கதிகளில் ஆட்டி வைப்பதைத் தெரிந்துகொள்ள உதவி புரிய முடியும். ஃபிஸிக்ஸினாலே அவன் ப்ருக்ருதி (இயற்கை) ரூபத்தில் போட்டிருக்கிற சட்டதிட்ட ஒழுங்குகளைப் பார்த்து நம்மையும் மநுஷ்யதர்ம ஒழுங்கிலே கொண்டுவந்து கொள்ளுமாறு அறிவுபெறமுடியும். இப்படி எந்த ஒரு வித்யையைத் தெரிந்துகொண்டாலும் அதன் மூலம் தானும் பரமாத்ம தத்வத்திலே ஒரு அம்சத்தைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் புரியப் பண்ணவேண்டும். இது ரொம்ப முக்யம். இல்லாவிட்டால் எல்லா அஹங்காரங்களையும்விட மோசமான “வித்யா கர்வ”த்தில் நீங்கள் அழுந்திப்போவதற்கு நான் வழி சொன்னதாக ஆகிவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஒவ்வொருவரும் வித்வானாக வேண்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வீணாகும் நேரம் வித்யைக்கு ஆகட்டும்
Next