ஒவ்வொருவரும் வித்வானாக வேண்டும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒரு வாத்யார் எவரோ ஒரு சிஷ்யருக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு பண்ணித் தருவது மட்டுமில்லாமல் – இது ரொம்பவும் அத்யாவச்யமான கார்யம்தான், இதற்கு நீங்கள் கைகொடுக்கத்தான் வேண்டும், தோள் கொடுக்கத்தான் வேண்டும், ஆனால் இப்படி இன்னொருத்தன் படிப்பதற்கு வசதி பண்ணித்தருவதோடு மாத்திரம் நின்று விடாமல் – உங்களில் ஒவ்வொருவருமே நம்முடைய இத்தனை சாஸ்தி்ரங்களில், வித்யைகைளில், கலைகளில் ஏதாவது ஒன்றிலாவது தேர்ச்சிபெற வேண்டும். ‘ஆபீஸுக்குப் போனேன், ஸம்பாதிச்சேன், குடும்பம் நடத்தினேன்’ என்பதோடு நின்றுவிடாமல், நூற்றுக்கணக்காக இருக்கப்பட்ட நம்முடைய வித்யைகளில் ஏதாவது ஒன்றிலாவது ஒவ்வொருத்தரும் நல்ல ஞானம் ஸம்பாதித்துக் கொள்ள வேண்டும். நம் வித்யைகள் வளர ஆசார்யர்களும் சிஷ்யர்களும் உண்டாக்கித் தருவதோடு நிற்காமல் நீங்கள் ஒவ்வொருவரும் சிஷ்யராகி ஏதாவது ஒரு வித்யையை அப்யஸித்து அதில் நீங்களே ஆசார்யராகி இன்னொருத்தருக்குச் சொல்லிக்கொடுக்கக்கூடிய அளவுக்குத் திறமை பெற வேண்டும்.

பாஷா சாஸ்தி்ரத்தில் இன்டரெஸ்ட் இருந்தால் வ்யாகரணம், நிருக்தம் இப்படி ஏதாவது நன்றாகக் கற்கலாம். அறிவு வாதத்தில் இன்டரெஸ்ட் இருந்தால் தர்க்கம் படிக்கலாம். ஸங்கீதத்தில் இன்டரெஸ்ட் இருக்கிறதா? வீணை, ம்ருதங்கம், ஜலதரங்கம், வாய்ப்பாட்டு ஏதாவது கற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு உளியை வைத்துக் கொண்டு ஒரு சில்பம் பண்ணக் கற்றுக்கொள்ளலாம். இப்படிப் பலபேர் பல உளிகளை வைத்துக்கொண்டு தட்டியதுதான் இன்றைக்கும், ‘இந்திய நாகரிகம் என்று ஒன்று வானளாவ இருக்கிறது’ என்று உலகத்துக்கெல்லாம் காட்டும் வானளாவும் கோபுரங்களாக உயர்ந்து நிற்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is திரவிய உதவியும் ஸமூஹ கெனரவமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அஹம் குறைய 'அவனை'த் தொடர்புறுத்துக!
Next