உயிரோடு ஒட்டிவைக்க வேண்டும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்போதும் நம் பண்டைய சாஸ்திரங்களில் ரிஸர்ச் என்பது கொஞ்சம் நடக்கத்தான் நடக்கிறது. ஆனால் அது ‘அகாடெமிக்’காக, ஸமூஹ வாழ்க்கையோடு ஒட்டாமல் நடக்கிறது. ‘பேப்பர்’ படிப்பது, ‘தீஸிஸ்’ எழுதுவது, ‘ஸெமினார்’ ‘ஸிம்போஷியம்’ என்று நடத்துவது, ஸ்காலர்கள் என்று பொறுக்கி எடுத்த சிலபேர் மட்டும் ‘டிஸ்கஸ்’ பண்ணுவது. அப்புறம் நூறு இருநூறு என்று விலை வைத்துப் புஸ்தகமாகப் போட்டு லைப்ரரிகளில் வைத்து அந்தப் புஸ்தகங்களில் சிலந்தி கூடுகூட்டுவது, புஸ்தகம் ரிலீஸ் ஆகிறபோது விழா நடத்தி மந்த்ரிகளும் ஜட்ஜ்களும் நம்முடைய கல்ச்சரைப் பற்றி லெக்சர் செய்வது, பத்ரிகைகளில் பெரிசாக புஸ்தக விமர்சனம் செய்வது, அப்புறம் கொஞ்சம் காலத்தில் பேசியவர்களும் எழுதியவர்களுமே அடியோடு மறந்துபோய் விடுவது – என்பதாகத்தான் இப்போது நடந்துவருகிறது. இப்போதைய ‘ஸெட்-அப்’பில் நம்முடைய பண்டைய வித்யைகளுக்காகவும் ச்ரமம் எடுத்துக்கொண்டு இப்படி ஆராய்ச்சி, விவாத மஹாநாடு, நூல் வெளியீடு என்றெல்லாம் நடத்துகிறார்களே என்று அவர்களைப் பாராட்ட வேண்டுமென்றாலும் (அவர்கள்) செய்வது “நிறக்காமல்”, ஸமூஹத்தில் வேர் பிடிக்காமல் கொஞ்ச காலத்திலேயே எடுபட்டுப் போய்விடுவதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. இப்படியில்லாமல் இவற்றை ஸமூஹத்தின் உயிரோடு ஒட்டி வைக்கவேண்டும். அதற்கு இவற்றிலேயே தங்களுடைய உயிரும் வாழ்க்கையும் கலந்து போய்விடும்படியாகப் பண்ணிக்கொள்ளும் குரு – சிஷ்ய பரம்பரை ஏற்பட்டால்தான் முடியும்.

நம்முடைய சாஸ்திரங்களை நிஜமாகவே காப்பாற்ற வேண்டுமென்றால் அவற்றிலுள்ள விஷயங்களை மாத்திரம் புஸ்தகம் போட்டு லைப்ரரியில் வைப்பதில் ப்ரயோஜனமில்லை. அப்படியே இந்தப் புஸ்தகங்களை யாராவது படித்துத் தெரிந்துகொண்டு, இப்போது நடக்கிற ரீதியிலேயே மேலும் ரிஸர்ச் பண்ணி, மேலும் புஸ்தகங்கள் போடுவதாக வைத்துக் கொண்டாலும் அதனால் நிலைத்து நிற்கிறதாகப் பயன் எதுவும் விளையாது. புஸ்தகப் படிப்பால் பெறுகிற வெறும் விஷயஞானமென்பது எத்தனையோ தப்புக்களுக்கும், விபரீதத்துக்குமேகூட இடம் தரலாம். அல்லது வீணாகப் போய்விடலாம். நம் தேசாசாரப்படி உருவான இவ்விஷயங்களை நம்முடைய தேசாரத்தின்படியே ஏற்பட்டுள்ள சாஸ்திரிய முறைப்படி, மாணவனுக்கு விநயம், புலனடக்கம், மற்ற ஒழுக்கங்கள், உயர்குணங்கள், ஈச்வரபக்தி முதலியவற்றோடு கலந்து கொடுத்தால்தான் அவனுக்கும் ச்ரேயஸ் ஏற்பட்டு, அவனால் உலகுக்கும் க்ஷேமம் உண்டாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வருங்காலத்துக்காக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  எல்லாத் துறையிலும் குருகுல வாஸம்
Next