க்ராம ஸபையின் அமைப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த நாளில் ஊரை ‘வார்டு’ என்று பல பிரிவுகளாகப் பிரித்திருக்கிறமாதிரி அப்போது ஒவ்வொரு ஊரையும் (கிராமத்தையும்) பல ‘குடும்பு’களாகப் பிரித்திருக்கிறார்கள். உத்தரமேரூர் கல்வெட்டுக்குச் சுமார் ஐம்பது வருஷம் முந்தியதும், செந்தலை என்கிற சந்த்ரலேகா சதுர்வேதி மங்கலம் என்ற ஊரிலிலுள்ளதுமான முதலாம் ஆதித்ய சோழனின் கல்வெட்டிலேயே அந்த ஊரைக் ‘குடும்பு’கள் என்ற வார்டுகளாகப் பிரித்திருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ப்ரதிநிதி கொண்டதாக க்ராம மஹாஸபை அமைக்கப்பட்டிருந்தது. மேற்படி ப்ரதிநிதிகள், அதாவது ஊர்ச்சபையின் அங்கத்தினர்கள்தான் ராஜாவாலோ, அல்லது ராஜாங்க அதிகாரியாலோ அல்லது அதிகாரக் குழுவாலோ நியமிக்கப்படாமல், தேர்தல் மூலமாகப் பொறுக்கி எடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தனர். அதாவது – இதுதான் முக்யமான அம்சம் – ஊராட்சி ஸபையின் மெம்பர்ஷிப் பாரம்பர்யமாகவோ, அல்லது ராஜாங்க நியமனமாகவோ (கவர்ன்மெண்ட் அப்பாயின்ட்மெண்டாகவோ) இல்லை. மணியம் மாதிரி அப்பா – பிள்ளை என்று தலைமுறை தத்துவமாக இல்லை. Hereditary appointment இல்லை, nominated appointment -ம் இல்லை, Elected appointment . இதை ஒரு விதத்தில் ஜனங்களே எலெக்ட் செய்வதாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். வோட்டுச் சீட்டு மாதிரியே ஒன்றை அநுஸரித்து இந்தத் தேர்தல் நடந்தது என்பது இதில் இன்னொரு ஸாரமான அம்சம். ஆனாலும் வோட்டர்கள் என்று பல பேர் தலைக்கு ஒரு வோட்டுப் போட்டு நடந்த தேர்தல் அல்ல. பின்னே அது என்ன, எப்படி நடந்தது என்று பின்னால் சொல்கிறேன். காக்க வைத்துச் சொல்வதில்தான் ருசி அதிகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தேர்தல் குறித்த கல்வெட்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கல்வெட்டைப் பற்றிய விவரம்
Next