தேர்தல் குறித்த கல்வெட்டு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இவர்களில் விஜயாலயனுக்குப் பின்னால் இரண்டாம் பட்டமாக ஆட்சி நடத்திய பராந்தக சோழன் காலத்தில் நான் சொன்னபடி நடந்த தேர்தலைப் பற்றிய விவரங்கள் தெரியவந்திருக்கின்றன. ஆயிரம் வருஷத்துக்கு முந்திய (கி.பி.920-ம் வருஷத்திய) ஒரு கல்வெட்டில் இதைப்பற்றி விரிவாகவும், ஸ்வாரஸ்யமாகவும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறது. அந்தக் கல்வெட்டு காஞ்சீபுரத்துக்கு அருகே உள்ள உத்தரமேரூரில் இருக்கிறது. பேரூர் என்றும் அந்த ஊருக்கு பேர்வழங்கி வந்திருக்கிறது.

பார்லிமெண்ட், ஸ்டேட் அஸெம்ப்ளிகள் மாதிரி ஒரு ராஜ்யம் முழுவதற்குமோ, அல்லது அதன் பெரிய பிரிவான மஹா மண்டலம் ஒன்றுக்கோ சட்டம் போட்டு திட்டம் போட்டு நடத்துவதற்காக ப்ரதிநிதிகளைப் பொறுக்கி எடுப்பதற்காக நடந்த தேர்தல் அல்ல, இந்த சாஸனத்தில் சொல்லப்படும் விஷயம். பல நூற்றாண்டுகளுக்கு முன் சோழ ராஜாக்களின் ஆட்சியில் அந்தந்த ஊர்க் கார்யங்களைக் கவனிப்பதற்காக, இந்த நாளில் ஸ்தல ஸ்தாபனம் (Local Body) என்று நகர ஸபைகளும் பஞ்சாயத்துக்களும் உள்ள மாதிரி ஸபைகள் இருந்திருக்கின்றன. இவற்றின் ப்ரதிநிதிகளுக்கான தேர்தல்தான் இந்த சாஸன விஷயம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சோழ வம்சம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  க்ராம ஸபையின் அமைப்பு
Next