அந்தண – வேளாள அதிகாரிகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த இரண்டு அதிகாரிகளில் வேளாண் என்பவன் வேளாளர் ஜாதி என்று சொல்லாமலே புரியும். ‘ஸோமாசி’, ‘க்ரமவித்தன்’, ‘பட்டன்’ என்கிற மூன்று வார்த்தையுமே ப்ராமண ஜாதியைக் குறிப்பிடுபவைதான். ஸோமாசி என்றால் பக்ஷணம் இல்லை. ஸோமயாகம் செய்த ‘ஸோமயாஜி’தான் தமிழில் ‘ஸோமாசி’ ஆனது ஸுந்தர மூர்த்தி நாயனார் சரித்ரத்தில் ‘சோமாசி மார நாயனார்’ என்று ஒருத்தர் வருகிறார். அறுபத்துமூவரில் ஒருத்தர் அவர்.

க்ரமவித்தன் என்றால் என்ன? எழுதி வைக்காமலே காதால் கேட்டுப் பாடம் பண்ணவேண்டியதான வேதத்தின் வாசகங்களில் கொஞ்சங்கூடத் தப்பு வரப்படாது. அப்படி வந்தால் மந்த்ர சக்தியே பாதிக்கப்படும் என்பதால் அவற்றின் பதங்களைப் பலவிதங்களில் ஒன்றோடு ஒன்று கூட்டியும், முன்பின்னாக மாற்றியும் சொல்லிக் கொடுத்து, ‘இதுதான் மூலரூபம்’ என்று ஆணி அடித்ததுபோல் நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகளை ரிஷிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி வேத அக்ஷரங்களைப் பல தினுசாக மாற்றிச் சொல்வதில் வர்ணம், க்ரமம், ஜடை, கனம் என்று பலமுறைகள் உண்டு. ‘கனம்’ தான் கடைசி-ரொம்ப நுணுக்கமாகப் பதங்களைக் கோத்து வாங்கினது. ‘கனபாடி’ என்று கேள்விப்படுகிறோமே, ‘கனம்’ வரையில் பாடம் தெரிந்தவர்தான் கனபாடி. ‘ஜடாவல்லபர்’ என்றால் ‘ஜடை’யில் தேர்ச்சி பெற்றவர். இப்படியே க்ரமம்வரை அத்யயனம் பண்ணினவன் ‘க்ரமவித்’ தமிழில் க்ரமவித்தன்’, மூவேந்தர்களின் அநேகக் கல்வெட்டுக்களில் பல க்ரமவித்தர்’களின் பெயர் காணப்படுவதிலிருந்து தமிழ் நாட்டில் அப்போது ஏராளமாக வேத அத்யயனம் பண்ணின ப்ராமணர்கள் இருந்ததாகத் தெரிகிறது.

‘பட்டர்’ என்பதும் ‘அய்யர்’, ‘சாஸ்த்ரி’, ‘சர்மா’ என்ற மாதிரி அக்காலத்தில் ப்ராமணனைக் குறிப்பிட்ட பதம் தான். சாஸ்த்ர ப்ரகாரம் ப்ராமணன் ‘சர்மா’ என்றும், க்ஷத்ரியன் ‘வர்மா’ என்றும், வைச்யன் ‘குப்தா’ என்றும், நாலாம் வர்ணத்தவன் ‘தாஸ’ என்றும் போட்டுக் கொள்ளவேண்டும். ஆனாலும் பூர்வகாலத்தில் ப்ராமணனை ‘பட்டன்’ என்று குறிப்பிடுவதே அதிகம் வழக்கத்திலிருந்திருக்கிறது. மஹாராஷ்ட்ர பட்டோஜி, மங்களூர் பட், பெங்காலி பட்டாசார்யா எல்லாரும் பட்டர்களான ப்ராமணர்கள்தாம்.

நாலாம் வர்ணத்தைச் சேர்ந்த வேளாண், முதல் வர்ணத்தைச் சேர்ந்த பட்டன் இருவரும் முக்ய அதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கல்வெட்டைப் பற்றிய விவரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வேட்பாளரின் யோக்யாதாம்சங்கள்
Next