வேட்பாளரின் யோக்யாதாம்சங்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உத்தரமேரூர் கல்வெட்டுக்களிலிருந்து, ஊர் ஸபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அபேக்ஷகருக்கு அநேக யோக்யதாம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்கிறோம். அபேக்ஷகரின் ‘க்வாலிஃபிகேஷ’னுக்கு ஒரு லிஸ்டே கொடுத்திருக்கிறது. அந்நாளில் ஊர் ஸபை அங்கத்தினருக்குத் தேவைப்பட்ட அந்தத் தகுதிகள் என்னவென்றால் :

1. அவன் தீர்வை செலுத்தும் கால் வேலி நிலமாவது உடையவனாக இருக்க வேண்டும். (“கானிலத்துக்கு மேல் இறை நிலமுடையான்” என்பது சாஸன வாசகம். இறை என்பதுதான் வரி, அதாவது நிலத்துக்குத் தரும் தீர்வை.)

2. தன்னுடைய ஸொந்த மனையில் வீடு கட்டிக் கொண்டவனாயிருக்க வேண்டும். (“தன் மனையிலே அகமெடுத்துக் கொண்டிருப்பான்.”)

3. அறுபது வயஸுக்கு அதிகமானவனாகவும், முப்பது வயஸுக்கு குறைந்தவனாகவும் இருக்கப்படாது என்று முதல் கல்வெட்டு சொல்கிறது. இரண்டு வருஷம் கழித்து அதை ‘ரிவைஸ்’ செய்த இரண்டாம் கல்வெட்டு, அறுபது என்பதை எழுபது என்றும், முப்பது என்பதை முப்பத்தைந்து என்றும் உயர்த்தி நிர்ணயம் செய்திருக்கிறது. “அறுபது பிராயத்துக் கீழ் முப்பது பிராயத்துக்கு மேற்பட்டார்” என்று முதலில் இருந்ததை “எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார்” என்று மாற்றி வயஸு நிர்ணயம் செய்திருக்கிறது.

இதிலிருந்து தெரிகிற இன்னொரு விஷயம், ஏதோ ஒரு ரூல் போட்டுவிட்டால் அதையேதான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றில்லாமல் அவ்வப்போது புனராலோசனை செய்து அதை இன்னும் சீர்படுத்தமுடியுமென்று தெரிகிறபோது ‘அமென்ட்மெண்ட்’டும் (சட்டத் திருத்தமும்) கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அந்தண - வேளாள அதிகாரிகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  திருத்தக் கூடிய விதிகளும்-திருத்தக் கூடாத விதிகளும்
Next