தொடர்ந்து அங்கம் வகிக்கலாகாது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

6. இந்தத் தேர்தல் வருஷா வருஷம் நடப்பதாகும். இந்த வருஷ மெம்பர் அடுத்த வருஷத் தேர்தலிலும் ‘கான்டிடேட்’டாக (வேட்பாளராக) இருக்க முடியாது. இப்படி, ஒரு வருஷ ‘டெர்மு’க்குப் பிறகு வருகிற மூன்று வருஷங்களுக்கு அங்கம் வஹிக்க முடியாது. மூன்று வருஷத்துக்கு அப்புறம் வேண்டுமானால் மறுபடியும் ஸபையில் ‘மெம்பர்ஷிப்’ வஹிக்கலாம். இதை “மூவாண்டினிப்புறம் வாரியம் செய்திலாதார்” என்று சாஸனம் கூறுகிறது. அதாவது, ஒரு தேர்தல் நடப்பதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் அபேக்ஷகர் ஸபை மெம்பராக இருந்திருக்கப்படாது.

ஒருத்தர் அங்கத்தினரான பிற்பாடு அதிக நாள் பதவி வஹிப்பதாலேயே இதற்கு முந்திய விதியில் சொன்ன அர்த்த சுத்தமும் ஆத்ம சுத்தமும் கெட்டுப்போக ஹேது ஏற்பட்டுவிடப் போகிறதே என்று ஜாக்ரதை செய்வதாகத் தான் இந்த விதி ஏற்பட்டிருக்கிறது.

‘மூவாண்டின் இப்புறம்’ என்பதை, முதலில், ‘மூவாண்டின் அப்புறம்’ என்று படித்துவிட்டு, தொடர்ச்சியாக மூன்று வருஷங்கள் மெம்பராக இருந்த எவரும் அதற்குப்புறம் தேர்தலுக்குத் தகுதிபெற மாட்டார்களென்று அர்த்தம் பண்ணிக் கொண்டுவிட்டேன். அப்புறம்தான் ‘இப்புறம்’ என்பதை ஸரியாகத் தெரிந்து கொண்டு, அதற்கு ‘முந்தைய மூன்றாண்டுகளுக்குள்’ என்று பொருள் என்று புரிந்துகொண்டேன். அதாவது ஒரு வருஷ ‘டெர்ம்’ வஹித்தபின் மூன்று வருஷ gap (இடைவெளி) கொடுத்து எத்தனை தடவை வேணுமானாலும் ஒருத்தர் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனாலும் ஒரு வருஷப் பதவி வஹித்தால் அப்புறம் அதைப் போல மூன்று மடங்கு காலம் பதவி இல்லை என்பதால் எவரும் தப்பான முறையில் தங்களுடைய இன்ஃப்ளுயென்ஸை வளர்த்துக் கொள்ளமுடியாதபடி செய்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அர்த்த சுத்தமும் ஆத்ம சுத்தமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உறவினர் உதவாது
Next