குறைவான லஞ்ச ஹேது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மநுஷ்ய ஸ்வபாவத்தைப் பார்த்தால் ஸொத்து, ஸ்வதந்த்ரம் உள்ளவன்தான் லஞ்சம் வாங்குகிற வாய்ப்பு குறைச்சல். இப்படி நான் சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் சண்டைக்கு வரலாம். பேர் பேராக ஆஸாமிகளைக் காட்டி, ‘லக்ஷம், பத்து லக்ஷம் என்று சேர்த்த பிற்பாடும் இவர்களெல்லாம் இரண்டு கையாலும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்களே!’ என்று கேட்கலாம். ஆனாலும் இப்படி வாழ்க்கையே பணம்தான் என்று பணத்துக்காகப் பறக்கிற போக்கு நம்மிடையே ஏற்பட்டது ஸமீப காலத்தில்தான். ஆத்ம ஸம்பத்து தேய்ந்துகொண்டே வந்து, அதே ஸமயத்தில் நூதன நூதனமாக போக்யப் பொருள்கள் கடைக்கு வருவதாகவும், பேப்பர் ரூபாயென்றும், அதை லக்ஷம்,கோடி என்று பாங்க் என்பதாக ஒன்றில் எவ்வளவு வேண்டுமானால் போட்டு வைக்கலாம் என்றும் ஏற்பட்ட பிற்பாடுதான் நம் ஜனங்களுக்குப் பணமே குறி, பணம் சேர்ப்பதே வாழ்க்கை லக்ஷ்யம் என்று ஆனது. இதற்கு முந்தி, போக்ய வஸ்த்துக்களுக்கு ஓர் அளவு இருந்தவரையில், இருந்த வஸ்துக்களின் அநுபோகத்தையும் கட்டுப்படுத்தும் சாஸ்த்ரங்களில் பொதுவாக ஜனங்களுக்கு பயம் இருந்தவரையில், பாங்கில் ஸர்வ ஜாக்ரதையாக எத்தனை வேண்டுமானால் போட்டு வைத்துக்கொள்ள இடம் இல்லாத வரையில், நம்முடைய மக்களுக்குப் பணத்தில் இத்தனை ஆசை இருக்கவில்லை. அதனால் பணக்காரர்கள் லஞ்சம் வாங்கும் வாய்ப்பு அப்போது ரொம்பக் குறைவுதான். இப்போதுங்கூட, ‘கம்பேரடிவ்’வாக (ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு) ப் பார்த்தால், பணமே இல்லாதவன் பதவிக்கு வந்தால் ‘கண்டது காணாதது மாதிரி’ என்கிறபடி, வசதி படைத்தவனைவிட ஜாஸ்தியாகத்தான் பணத்தாசை பிடித்துக் கை நீட்டலாம். ஸமத்வம் என்று சொல்லிக்கொண்டு இம்மாதிரியான நடைமுறை உண்மைகளை மறந்து தர்மத்துக்கும் நீதிக்கும் ஹானி செய்வது உசிதமல்ல.

நம்முடைய ஸமத்வ முறையிலேயே காஷியர் மாதிரியான வேலைகளுக்கு ஸெக்யூரிடி கட்டவேண்டுமென்று வைத்துத்தானே இருக்கிறார்கள்? அப்போது அந்த ‘போஸ்ட்’டுக்கு ஏழை ‘டிஸ்க்வாலிஃபை’ தானே ஆகிறான்? இது எப்படி ஸமத்வம்? பணத்திலே புழங்குகிறவன் அவற்றைக் கையாடக்கூடும் என்ற நடைமுறை இயற்கையை இங்கே கருத்தில் கொண்டுதான், பொதுப்பணம் கையாடப்படக்கூடாதே என்பதற்காக இங்கே மட்டும் ஸமத்வத்தை விட்டுக்கொடுத்து, கையாடல் நேர்ந்தாலும் ஈடு கட்டும்படியாக ஸெக்யூரிடி டெபாஸிட் என்று ஒன்றை வைத்து ஒழுங்கு செய்திருக்கிறார்கள். பணத்தில் புழங்குகிறவன் கையாடல் செய்யக்கூடும் என்கிற மாதிரியான இன்னொரு யதார்த்த இயற்கைதான், ஜனங்களோடு புழங்குகிற ஒரு ஊர் ஸபைக்காரன் அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுடைய ஸ்வய நலத்தைப் பேணும்படியான ஸெளகர்யம் ஏதாவது செய்து கொடுக்கக்கூடும் என்பதும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸொத்துத் தகுதி பற்றி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கையூட்டு
Next