கையூட்டு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

லஞ்சத்தைச் சோழ சாஸனத்தில் ‘கையூட்டு’ என்று சொல்லியிருக்கிறது. ரூபாயிலே கை கொஞ்சம் ட்ரிக் பண்ணி ட்ராமா ஆடுவதை, விளையாடுவதைக் ‘கை ஆடல்’, கையாடல் என்கிறோம். கையில் ஊட்டிவிடுகிற மாதிரி ரஹஸ்யமாகப் பணத்தை வைத்து லஞ்சம் கொடுப்பதைக் ‘கை ஊட்டு’ என்று அக்காலத்தில் சொல்லி வந்திருக்கிறார்கள். வாயில் சாதத்தை ஊட்டும்போது அது என்ன சாதம், அதற்குள்ளே என்ன ‘தொட்டுக்கொள்ள’ ஒளித்து வைத்திருக்கிறது என்பது எதுவும் வெளியில் தெரியாது. தட்டிலோ, கையிலோ போட்டு அதை ஒருவர் வாயிலே போட்டுக்கொள்ளும்போது பலபேருக்குத் தெரிவதுபோல இல்லாமல், யாருக்கும் தெரியாமல் ஊட்டிவிட்டுப் போய்விடலாம். இதேபோல யாருக்கும் தெரியாமல், எந்தக் கணக்கு வழக்கிலும் வராமல் பணத்தைக் கையிலே ஊட்டுகிற மாதிரி அழுத்திவிட்டுப் போவது கையூட்டு! சாதத்தை வாய் முழுங்குகிற மாதிரி பணத்தைக் கை முழுங்கிவிடும்!

கையாடல் கூடாது என்பதற்காக ஸெக்யூரிடி கேட்பது போலத்தான், கையூட்டுப் பெறும் வாய்ப்பைக் குறைப்பதற்காகவே ஊர்ஸபைக்காரனாகிறவனுக்கு ஏதோ கொஞ்சம் பூ ஸ்திதி, வீடு என்றெல்லாம் இருக்கவேண்டுமென்று விதி செய்திருப்பது. ஆகவே இது ஸரியானால் அதுவும் ஸரிதான். இங்கே ஸமத்வம் அல்ல நடத்திக் காட்ட வேண்டிய விஷயம் – தூய்மையான நிர்வாஹமே விஷயம். ஸபைக்காரன் பொதுப்பண நிர்வாஹத்திலே தப்பு செய்துவிட்டானென்றால் அதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு அவனுடைய ஸொத்திலிருந்து ‘அட்டாச்’ செய்துவிடவேண்டும் என்பதாக வைத்து, இதற்கு ஸெக்யூரிடி மாதிரிதான் ஸொத்துத் தகுதி ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கே தனி ஆளின் கௌரவ அகௌரவங்களைக் குறித்த ஸமத்வ வாதத்துக்கு இடமில்லை, ஓரு ஊரின், ஒரு ஜனஸமூஹத்தின் ஸொத்து ந்யாயமாகப் பரிபாலிக்கப்படவேண்டும் என்ற தர்ம நியாயமான தத்வம்தான் இங்கே கவனித்துப் பேணப்படவேண்டிய விஷயம் என்பதைக் கருத்தில் கொண்டு அப்படியே செய்திருக்கிறார்கள்.

அதோடுகூட ஒரு ஊரிலே நிலபுலன், வீடு வாசல் உள்ளவன் என்றால் அவன் பொறுப்பில்லாமல் அதைவிட்டு ஓட மாட்டான். ஆனபடியால் இப்படிப்பட்டவன் ஊரோடு இருந்து, ஊரின் கஷ்ட நஷ்டங்களை எப்போதும் தெரிந்து கொள்ளும்படியிருக்கும்.

உழைத்துப் பணம் போட்டு ஒரு உடைமையைப் பெற்றவன் அதனிடம் வைத்துள்ள பற்றைப்போல, அக்கறையைப்போல, ராஜமான்ய நிலம் பெற்றவனுக்கு அதனிடம் இருக்காது. பிதுரார்ஜிதமாக ஒரு நிலமோ, வீடோ, வந்தால் அதனிடமும் ஒரு தினுஸான வாஞ்சையே இருக்கும். அம்மாதிரி grant -ஆக, gift -ஆகப் பெற்றதில் இராது. தனக்காக்கும் பஹுமானமாய் வந்தது என்பதில் தற்காலிகமாக ஒரு மோஹம் இருந்தாலும் அது நாள்பட்டு உறுதியான பிடிப்பாக நிற்காது. வெறும் ராஜமான்ய நிலத்திலேயே காலம் கழிக்கிறவன் அதைவிட்டு ஓடவும் இடம் ஏற்படும். இதனால்தான் ஸொந்த அல்லது பிதுரார்ஜித நிலத்தை உடைமையாகப் பெற்றிருந்து அதற்கு வரி கட்டுகிறவனாக இருக்கவேண்டும் என்ற விதி செய்திருக்கிறது.

வேத வித்யையில் சிறப்புப் பெற்றவர்களாகவும், வேத பாஷ்யம் போதிக்கிறவர்களாகவும் இருக்கப்பட்டவர்கள் மற்றவர்களைவிடவும் த்ரவ்ய சபலத்துக்கு ஆளாகாமல், போதுமென்ற மனஸோடு எளிமையாக வாழ்ந்துவருவதை அந்நாளில் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களுடைய நடத்தை சுத்தத்தில் கொண்ட அதிகப்படி நம்பிக்கையின் பேரில் இப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் மிகக் குறைச்சலான நிலபுலன் இருந்தாலும் போதும் என்று விதியை ‘ரிலாக்ஸ்’ செய்து, நிபந்தனையைத் தளர்த்திக் கொடுத்திருக்கிறது. பொதுவாகக் “கானிலத்துக்கு மேல் நிலமுடையான்” என்று யோக்யதாம்சம் நிர்ணயித்ததற்கு sub-clause- ஆக (உபஷரத்தாக) , அதில் பாதியான “அரைக்கானிலமே உடையானாயினும் ஒரு வேதம் வல்லானாய், நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான்” தேர்ந்தெடுக்கப்படலாம். என்று சேர்த்திருக்கிறது.

இருந்தாலும் இவனுக்கும் கூட ரிலாக்ஸேஷன்தான். எக்ஸெம்ப்ஷன் இல்லை. இவனுக்கும் ஸொத்து கொஞ்சமாவது இருந்தாக வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குறைவான லஞ்ச ஹேது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸொத்துப் பரிபாலன அநுபவம் அவசியம்
Next