வயதுத் தகுதி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அடுத்தபடியாக வயஸுத் தகுதி. போனால் போகிறதென்று இதற்கு மட்டும் நம் ஜனநாயகக் குடியரசிலும் ஒரு கீழ் வரம்பு, இருபத்தைந்தோ முப்பதோ எதுவோ ஒன்று வைத்துவிட்டு மேல் வரம்பு இல்லாமல் விட்டிருக்கிறார்கள். ‘இளம் தலைமுறை’, ‘வருங்கால வாரிசு’ என்றெல்லாம் பெயரைக் கொடுத்து அநுபவமில்லாத சிறுவர்களையும் தங்கள் தங்கள் கட்சிகளுக்குள் இழுத்துக்கொள்ளும் போக்கு தற்போது உண்டாகி இருக்கிறது. இவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காகக் கீழ் வரம்பை இன்னம் கீழே கொண்டுபோனாலும் போகலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களைப் போலவே தேர்ந்தெடுப்பவர்களான ‘வோட்டர்’ (வாக்காளர்)களுக்கும் வைக்கப்பட்டுள்ள ஒரே தகுதி கீழ்வரம்பு வயஸுதான். இருபத்தொன்றில் ‘மேஜர்’ என்பதைப் பதினெட்டாக மாற்றி, அப்போதே வோட்டுரிமை தந்து வோட்டர் ஆக்கிவிட வேண்டுமென்று இப்போது ஒரு பேச்சு இருப்பதாகத் தெரிகிறது.

தற்காலக் ‘கண்டதே காட்சி’க் கோலத்தில், வாழ்க்கையில் அடிபட்டு, கஷ்ட ஸுகங்களை அலசிப் பார்த்துப் புரிந்துகொள்ளும் அநுபவ ஞானம் சென்றுபோன தலைமுறையினரையும்விட புதுத் தலைமுறையினருக்கு ‘லேட்’டாகத்தான் உண்டாவதாகத் தெரிகிறது.

“மடத்துக்குள்ளே முட்டாக்குப் போட்டு உட்கார்த்தி வைத்திருக்கிற உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அந்த ஸயன்ஸ், இந்த ஸயன்ஸ், புதுப்புது நிர்வாஹ முறைகள், வியாபார முறைகள், டெக்னாலஜிகள், கலை ஆராய்ச்சிகள் என்று நாளுக்கு நாள் நாங்கள் என்ன போடு போடுகிறோம் தெரியுமா? இதனால் ஜெனரல் நாலெட்ஜ் லெவலே (பொது அறிவு மட்டமே) ரொம்பவும் உசந்துவிட்டது. ஸ்கூல் பசங்கள்கூட யூனியன், பார்லிமெண்ட் எல்லாம் வைத்துக்கொள்கிற அளவுக்கு எல்லாருக்கும் அறிவு வெளிச்சம் கொடுத்துவிட்டோமாக்கும்” என்று சொல்லலாம்.

இதெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனால் இது அவ்வளவுமே மூளையும், தாற்காலிக இந்த்ரிய ஸுகமும் ஸம்பந்தப்பட்ட விஷயம்தான். ‘வாழ்க்கை என்ன? எதனால் அது ஸாரப்படும்?’ என்பதைப் புரிந்துகொள்ள வைக்க இவை ஒன்றும் உதவவில்லை. அதோடு இல்லை. நேர்மாறாக, இந்தக் கண்டுபிடிப்புக்களின் ஜ்வலிப்பில் உண்டான glare -னால் (கண் கூசலினால்) வாழ்க்கையை உள்ளபடிப் புரிந்துகொள்வதில் ஜனங்கள் முன்னைவிட பின்னேதான் போய், அநுபவத்தில் குறைந்தவர்களாக ஆகிவருகிறார்கள். என்னை மடத்துக்குள்ளே முட்டாக்குப் போட்டு உட்கார்த்தி வைத்திருந்தாலும் பலதரப்பட்ட ஜனங்களும் இங்கே வந்து குறைகளைச் சொல்லிக் கொள்கிறார்கள் அல்லவா? இவர்களுடைய பலவிதமான ப்ரார்த்தனைகளைக் கேட்கிறபோது, ப்ரச்னைகள் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் ஒப்பித்துவிட்டுப் போகிறவற்றைப் பார்க்கிறபோது, போன தலைமுறையைவிட இப்போது எப்படி ஜனங்கள் உலகத்தைப் புரிந்துகொள்ளும் அநுபவ ஞானத்தில் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்களென்று நன்றாகத் தெரிகிறது. அநேக ஸந்தர்ப்பங்களில், “என்ன இத்தனை வயஸானவர் இப்படி உலகத்தை, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாதவராக இந்த மாதிரி கேட்கிறாரே? நாற்பது வருஷம் முந்தி நாம் பட்டத்துக்கு வந்த நாளாக* ப்ரார்த்தனைகள் – லௌகிக விஷயமாகவுந்தான் – நிறையக் கேட்டே வந்திருக்கிறோம். ஆனாலும் அந்தக் காலத்தில் இந்த மாதிரி இந்த வயஸுக் கட்டத்திலிருந்தவர்கள் கேட்டிருப்பார்களா?” என்று நினைத்துப் பார்க்கிறேன். இந்த நிலையில் வோட்டர்கள், அபேக்ஷகர்கள் ஆகியோருடைய ஏஜ்- லிமிட்டை மேலும் குறைப்பது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாகவே படுகிறது.

பொது விஷயங்களில் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டுமானால் அதற்கு உலக ஞானமும் வாழ்க்கையநுபவமும் இருக்கவேண்டும். நன்றாக அடிபட்டு இவற்றை அறிவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வயஸு முதிர்ச்சி தேவைப்படுகிறது. இவ்விஷயத்தை தீர்க்கமாக அலசிப் பார்த்துத்தான் அக்காலத்தில் ஆயிரம் வருஷத்துக்கு முந்தி, முதல் கல்வெட்டுப்படி அபேக்ஷகருக்கு முப்பது வயஸு என்று கீழ் வரம்பு கட்டினவர்கள் அப்புறம் இரண்டு வருஷம் மேலும் நடைமுறைகளைப் பார்த்துப் புனராலோசனை செய்ததில் அதுகூடப் போதாது என்று இரண்டாம் கல்வெட்டுப்படி முப்பத்தைந்து என்று உயர்த்தியிருக்கிறார்கள். இப்போது பச்சைக் குழந்தைகளைக்கூடத் தங்கள் தங்களுக்கு ஸாதகமாகப் பாலிட்டிக்ஸில் இழுத்துக்கொள்ள வேண்டுமென்பதே ஒவ்வொரு கட்சியின் தலைவர்கள் என்கப்பட்டவர்களுக்கும் அடிப்படை எண்ணமாக இருப்பதால் தற்போது செய்கிற புனராலோசனைகளோ வயஸைக் குறைப்பதில்தான் நோக்கமாயிருக்கின்றன.

தற்போது வயஸுக்கு மேல்வரம்பே இல்லை. ஆனாலும் அப்போதோ இயற்கையை கவனித்து இவ்விஷயமாகவும் விதி செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு வயஸுக்குமேல் போய்விட்டால் வ்ருத்தாப்யத்தில் ஓய்ச்சல் வந்துவிடுகிறது. ஞாபக மறதி ஏற்படுகிறது. இமமாதிரித் தளர்ந்து உடம்பிலும் உள்ளத்திலும் ஆடிப்போவதை “ஸெனிலிடி” என்கிறார்கள். வியாதிகளும் அப்போது அதிகம் பிடுங்கி எடுக்கின்றன. இவற்றோடு பழங்காலத்தில் அந்த வயஸில் ஆரம்பநாளிலிருந்து பின்பற்றி வந்த சாஸ்த்ர அப்யாஸங்களினால் விவேக வைராக்யாதிகளில் புத்தி அதிகம் போகத்தொடங்கியிருக்கும். அதனால் எதிலும் ரொம்பப் பட்டுக்கொள்ளாமல், தப்புத் தண்டா நடந்தால்கூட, ‘என்னமோ எல்லாம் ஈச்வர லீலை’ என்று விட்டுவிடும் மனோபாவம் தோன்றியிருக்கும். பொது நிர்வாஹத்தில் இப்படிப்பட்ட மனப்பான்மை கூடாதாயிற்றே! நல்ல உணர்ச்சி வேகமும் கண்டிப்பும் கார்யச் சுறுசுறுப்பும் இருக்கவேண்டுமே! அதனால்தான் வயஸுக்கு ‘லோயர் லிமிட்’டோடு ‘அப்பர் லிமிட்’டும் விதித்திருக்கிறது.

முதலில் அறுபது என்று நிர்ணயித்திருக்கிறார்கள். அப்புறம் இன்னம் ஆழமாகச் சிந்தனையைச் செலுத்தி, இரண்டு வருஷம் நடைமுறையையும் பார்த்ததில் எழுபது என்று உயர்த்தியிருக்கிறார்கள். அறுபதுக்கு மேலே ரொம்ப ஓடி ஆட முடியாதே என்று முதலில் அப்படி நிர்ணயித்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்புறம் பார்த்ததில், ஓடி ஆட முடியாவிட்டாலும் வயஸு ஏற ஏற எழுபதுவரைகூட அநுபவ முதிர்ச்சி நன்றாக வளர்ந்து பொது விஷயங்களில் புத்திமதி சொல்லவும், திட்டங்கள் சட்டங்கள் வகுக்கவும் திறமை ஜாஸ்தியாகிறது என்று கண்டிருக்கிறார்கள். அறுபது வயஸு ஆகி ஷஷ்ட்யப்த பூர்த்தி பண்ணுகிறார்களே அதோடு அநேகமாக ஓடி ஆடுவது குறைய ஆரம்பிக்கிறது. அதனால்தான் முதலில் அப்போது ‘ரிடயர்மெண்ட் ஏஜ்’ வந்துவிடுகிறது என்று வரம்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஓடி ஆடி உடம்பால் வேலை செய்வது குறைந்த பிற்பாடுதான், ஒருவேளை இதனாலேயே ‘கன்ஸர்வ்’ செய்யப்படும் எனர்ஜி (சேமிக்கப்படும் சக்தி) யாலோ என்னவோ, அறிவு நல்ல முதிர்ச்சியுடன் ஆற்றலோடு செயல்படுகிறது. இப்படி ஒரு பத்து வருஷம் இருந்தபின் ஸெனிலிடி – ‘வயஸான தோஷம்’ என்கிறார்களே, அது – உண்டாகிறது, அல்லது புத்தி ஞான வைராக்யத்திலே போய்விடுகிறது. அறுபது வயஸு என்று நிர்ணயம் செய்தபின், ஸபையில் அங்கத்தினர்களாக இல்லாமல் அந்த வயஸுக்கு மேலேபோன ஊர்ப் பெரியவர்கள், ஸபை மூலமாக இல்லாவிட்டாலும் தனிப்பட ஊர் நலனுக்கான நல்ல யோசனைகள் தரமுடிவதை கவனித்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால், ‘அதிகம் ஓடியாடிச் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, executive wing -ன் அதிகாரிகள், சிப்பந்திகள் அதற்கென்று இருக்கிறார்கள். ஸபைக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே ஆறஅமர (‘அமர’ என்றாலே ‘உட்கார்ந்து’ தானே?) யோசித்துச் சட்ட திட்டங்கள் போடுபவர்களாகவும், அவ்வப்போது மட்டும் ஊரைச் சுற்றிக் கார்யங்களை இன்ஸ்பெக்ட் பண்ணச் சக்தியுடையவர்களாகவும் இருந்தால் போதும்’ என்று புனராலோசனை செய்து, இரண்டு வருஷத்துக்கு அப்புறம் அறுபதை எழுபது என்று ‘அமென்ட்’ செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.


* இது ஏறக்குறைய நாற்பதாண்டு முன் ஸ்ரீ சரணர் அருளியது. அவரது வாக்கு தற்போது மேலும் உறுதிப்பட்டு த்வனிக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'தன் மனை' என்றதன் காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தர்ம ஒழுங்கின் ஸத்ய அடிப்படை
Next