நடைமுறையில் செய்துகாட்டுவதால் நல்லதை விளைவிக்கும் ஒழுங்குமுறைதான் தர்மம் என்பது. இந்த நடைமுறைக்கு ஆதார தத்வமாக ஒரு அடிப்படை இருக்க வேண்டும். ஒரு ஒழுங்கு என்றால் அது அப்படிப்பட்ட ஒழுங்கிலே இருக்கிறது என்பதை உணர்த்துவதாக ஒரு அடிப்படை உண்மை இருக்கவேண்டும். தீபாலங்காரம் செய்யும்போது வட்டமாக, சதுரமாக, கோணமாகப் பல வரிசைகளில் தீபங்களை வைத்தால் அந்த ஒழுங்கிலே மனஸுக்கு ஒரு நிறைவு தெரிகிறது. ஏதோ ஒரு ஒழுங்கிலே வளைத்தும் நீட்டியும் கோலம் போட்டிருந்தால் அதைப் பார்க்கிறபோது ஒரு ஸந்தோஷம், எதுவோ ஒன்று ரொம்ப ஸரியாயிருக்கிறது என்ற ரஸிப்பு உண்டாகிறது. வட்டமோ, சதுரமோ, வளைவோ, கோணமோ கொஞ்சம் கோணலாக இருந்தால் மனஸுக்கு என்னமோபோல் இருக்கிறது. எதனாலென்றால் இந்த வெளி ஒழுங்குகளுக்கு ஆதாரமாக ஏதோ ஒரு உள்ளொழுங்கான தத்வம் இருக்கிறது. கண்ணுக்கு வெளியொழுங்கு தெரிகிற மாதிரி நம் உள்ளுக்குள்ளே, உள்ளத்துக்குள்ளே அந்த தத்வத்தைப் பற்றி நமக்குத் தெரியாமலே ஒரு ஞானம் இருக்கிறது. எனவே, அதற்கு இது – வெளியிலே ஒழுங்கு செய்திருப்பது- ஒத்துப்போகிற போது மனஸில் நிறைவு உண்டாகிறது.
இதே மாதிரி சுத்தமான அந்தஃகரணமுள்ள ரிஷிகள் முதலான மஹான்களுக்கு உள்ளுக்குள்ளே ஸ்வச்சமாகத் தெரிந்த ஒரு அடிப்படைக்கு ஒத்துப்போவதாக வெளியிலே பின்பற்றவேண்டிய அநேக ஒழுங்குகளைத்தான் ஒழுக்கம் என்று வைத்து தர்ம வாழ்க்கையை அமைத்திருக்கிறது. இதற்கு அடிப்படையாய் உள்ளே ஒரு தத்வம் இருக்கிறது என்றேனே, அது என்னவென்றால், அதுதான் ‘ஸத்யம்’ என்பது. நம்முடைய வெளி அறிவுக்கும் புரிகிறமாதிரி இந்த ஸத்யத்தை எடுத்துச் சொல்பவையே வேத, உபநிஷத, சாஸ்திரங்கள். ஒழுங்கு மாதிரி, தர்மம் மாதிரி வெளியிலே எத்தனை செய்தாலும் அந்த ஸத்யத்துக்கு இது ஒத்துப்போகாவிட்டால் இது மனநிறைவைத் தராது; வாழ்க்கை நிறைவைத் தராது; அதாவது வாழ்க்கை நிறைந்து ஈச்வர சரணார விந்தத்தில் நம்மைக் கொண்டுவிட்டு முடிவதாக ஆகாது.
ந ஸ தர்மோ யத்ர ந ஸத்யமஸ்தி
‘எதில் ஸத்யமில்லையோ அது தர்மமாகாது’ (ஸபாவை ‘ஸா’ – ‘அவள்’ என்று பெண்பாலில் சொன்னதுபோல், தர்மத்தை ‘ஸ:’ — ‘அவன்’ என்று ஆண்பாலில் சொல்லியிருக்கிறது.)
தர்மம் தெரிந்த பெரியவர்கள் அதற்கு ஆதாரமான ஸத்யத்தையும் அறிந்து அதன்படியே தார்மிகமான நிர்வாஹ க்ரமங்களையும், சட்டவிதிகளையும் ஒழுங்குபடுத்தித் தரவேண்டுமென்று ஏற்படுகிறது.
ஸரி, ஸத்யத்தின்பாற்பட்ட தர்மத்தை அறிந்த வயதானவர்கள்-உபநிஷத் ஞானத்தால் ஸத்யத்தையும், தர்ம சாஸ்திர ஞானத்தால் தர்மத்தையும் அறிந்த வ்ருத்தர்கள் ஒன்று கூடி முடிவு செய்கிறார்களென்றால் அந்த இடம் ஸபையாகிவிடுமா? அவஸரப்பட்டு அப்படித் தீர்மானித்துவிட வேண்டாம். தர்மம் தெரிந்த பெரியவர்கள், ஸத்யம் அறிந்த வ்ருத்தர்கள் என்று சொன்னோமே, இப்படித் தெரிந்து கொள்வது, அறிந்துகொள்வது என்றால் என்ன? சாஸ்திரங்களை நிறையப் படித்து இதுதான் தர்மம், இதுதான் ஸத்யம் என்று நன்றாகத் தெரிந்துகொண்டிருப்பதும் அதைத் திறமையோடு பிறருக்கு எடுத்துச் சொல்வதும் ஒருத்தரை ஸபேயரான வ்ருத்தராக்கி விடுமா? ஆக்காது. தாங்கள் கற்றும் கேட்டும் தெரிந்துகொண்ட ஸத்ய தர்மங்களை வாழ்க்கையில் நடத்திக் காட்டுபவர்களாகவும் இருந்தால்தான் உண்மையான வ்ருத்தர்களாவார்கள். கசடறக் கற்றபின் அதற்கு தக நிற்கவேண்டும் என்று திருவள்ளுவர் சொன்னாற்போல், தர்மாதாரமான ஸத்யத்தை பற்றி புத்தியால் அறிந்ததோடு நிற்காமல், அதை அநுபவித்தவர்களாகவும், அதன் வெளி ஒழுங்கான தர்மத்தை வாழ்க்கையில் அநுஷ்டிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்கள் எடுத்துச் சொன்னால்தான் அந்த ஸத்யம் ஜீவசக்தியோடு பிறர் மனஸில் பாய்ந்து வேலை செய்யும். இல்லாவிட்டால் ‘பிரமாதமான பேச்சு’ என்ற புகழ்மாலையோடு, அந்தப் பேச்சைப் போலவே காற்றோடு போய்விடும். ‘மித்யாசாரம்’ என்று (கீதையில்) பகவானும், பொய்யொழுக்கம் என்று தமிழ் நூல்களும் சொல்லும் ‘ஹிபாக்ரிஸி’யாக ஒருவன் பெரிசாக வாய்ப்பந்தல் போட்டு விட்டு வாழ்க்கையில்வேறுவிதமாக இருந்தானானால், அவன் எத்தனை அழகாகத்தான் ஸத்யத்தை எடுத்துச் சொன்னாலும் அதற்குப் பிறத்தியாரை ‘இன்ஸ்பயர்’ பண்ணும் சக்தி இருக்காதாதலால் அது ஸத்யத்தோடு சேரவே சேராது. உயிரில்லாத வெற்றுப் பேச்சான ஸத்யம் ஸத்யமேயில்லை.
ந தத் ஸத்யம் யத்-சலேநாநுவித்தம்
‘சலேந அநுவித்தம்’. ‘சலன்’ என்றால் ஹிபாக்ரிட். ‘அநுவித்தம்’ என்றால் ‘ஸம்பந்தப்பட்ட’. ஹிபாக்ரிட்டின் ஸம்பந்தமுடைய, அதாவது ஹிபாக்ரிட்டினால் எடுத்துச் சொல்லப்பட்ட எது ஒன்றும் ஸத்யமாகாது. ‘ந தத் ஸத்யம்’- அது ஸத்யமாகாது.
‘வ்ருத்தரில்லாதது ஸபையாகாது; தர்மம் சொல்லாதவர் வ்ருத்தாராக மாட்டார்கள்; ஸத்யமில்லாதது தர்மமாகாது; பொய்யொழுக்கக்காரரின் ஸம்பந்தமுள்ளது ஸத்யமாகாது’- இப்படி அந்த ச்லோகம் சொல்கிறது. இதுவும் சட்ட ஸபை, பார்லிமெண்ட், ஐ.நா. ஸபை ஆகியவற்றுக்கு ‘மாட்டோ’ வாக வைக்கக்கூடிய ச்லோகம்தான்.
‘ஞானசீல வயோ வ்ருத்தர்’ என்று சொல்வது வழக்கம். வயஸினால் கிழவராகிறவர் ‘வயோ’ வ்ருத்தர் மட்டும்தான். அதோடு அறிவினாலேயும் பழுத்தால் ‘ஞான’ என்று இன்னொரு அடைமொழி சேரும். அறிந்தபடி தூய ஒழுக்கத்தோடு வாழ்கிறபோதுதான் ‘சீல’ என்ற அடைமொழியும் சேர்ந்து ஒருத்தர் ‘ஞான சீல வயோ வ்ருத்த’ராவது. இப்படிப்பட்ட வ்ருத்தர்கள்தான் ஸபேயர்கள் என்று அந்த ச்லோகம் காட்டுகிறது.
சோழர்கால சாஸனத்திலும் அறத்தைப் பற்றிய அறிவு, அந்த அறிவை வாழ்க்கையில் பற்றி ஒழுகி காட்டும் தூய நடத்தை இரண்டையும் ஸபை அங்கத்தினர்களுக்குத் தேவையான தகுதிகளாக விதித்திருக்கிறது. இதோடுகூட கார்ய ஸாமர்த்தியமும் பொதுப்பணியிலிருப்பவர்களான அவர்களுக்கு இருக்கவேண்டுமென்று பொருத்தமாக ஷரத்து செய்திருக்கிறது. ‘வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர்’ , ‘அர்த்த சுத்தமும் ஆத்மசுத்தமும் உடையார்’ என்று நாலாவது ஐந்தாவது விதிகளில் சொல்லியிருப்பதில் இந்த எல்லா ‘ஆஸ்பெக்ட்’களும் ‘கவர்’ ஆகிவிடுகின்றன.
வயசைக் குறித்த மூன்றாவது விதியைப் பற்றித்தான் சொல்லிகொண்டிருந்தேன். அதிலேயே நடுவில் அடுத்த விதிகளும் வந்துவிட்டன! தற்காலத்தில் இல்லாததாக வயஸுக்கு ‘அப்பர்’ லிமிட்’ கட்டியிருப்பது இதில் குறிப்பிடவேண்டிய அம்சம். முதலில் (அதை) அறுபது என்று வைத்து அப்புறம் எழுபதாக உயர்த்தியிருக்கிறது.