ஸர்வஜன அசுத்திக்கு ஹேது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இது – அதாவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அபேக்ஷகரின் அர்த்த சுத்தி பற்றிய விஷயம் – ஒரு பக்கம் இருக்கட்டும். பழங்காலத்தில் எதிர்பார்த்தேயிருக்க முடியாதபடி, ஸர்வஜன அடிப்படையில் ப்ரஜைகள் அத்தனை பேரின் அர்த்த, ஆத்ம சுத்திகள் கெட்டுப் போவதற்கும் வழிசெய்து கொடுக்கும்படியாக இப்போது தேர்தல்முறையைச் செய்திருக்கிறதே என்பதை நினைத்தால்தான் மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. வயஸு வந்தவர்களுக்கெல்லாம் வோட்டுரிமை என்று பண்ணியிருப்பதில் இதுவரை சுத்தியோடு இருந்துவரும் எத்தனையோ கோடி ஜனங்களை அர்த்தத்தினால் (பணத்தினால்) அசுத்தி செய்து, அதனால் அவர்களுடைய ஆத்மாவையும் அசுத்தமாக்கிவிடப் போகிறார்களே என்று பயமாயிருக்கிறது.

இதுவரை எழுத்தறிவில்லாவிட்டாலும், ஏழையாயிருந்தாலும் நம்முடைய பொது ஜனங்கள் லஞ்சம் கொடுக்கவே பயந்து வந்திருக்கிறார்கள். அந்தப் பொதுஜனங்களுக்கும் லஞ்சம் கொடுத்து, அதை அவர்கள் வாங்கிக் கொள்வதென்பதற்கோ இதுவரை ப்ரமேயமே ஏற்பட்டதில்லை.

ஸமூஹ வாழ்வின் ஸகல அம்சங்களிலும் ஸர்க்கார் ப்ரவேசிக்கும் Welfare State கொள்கையைப் பின்பற்றிக் கொண்டு, ‘அதை நடத்தவிருப்பவர்களுக்கு வயஸு தவிர எந்த யோக்யதாம்சமும் வேண்டாம்; இவர்களைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் அந்த ஒரு யோக்யதாம்சம் போதும்’ என்று வைத்திருப்பதாலேயே பயம் பிடித்துக்கொள்கிறது.

இரண்டு விதமான பயம். ஒன்று – தாங்கள் சலுகை, சாய்கால் பெறுவதற்கான அபேக்ஷகர்கள் வெற்றிபெற்று மெம்பராகி விட்டபின் வோட்டர்கள் லஞ்சம் கொடுக்க முற்பட்டு இந்த தேசத்துக்கே களங்கமுண்டாக்கி விடுவார்களோ என்ற பயம்தான். ஆனால், இப்படி லஞ்சம் கொடுக்கக்கூடியவர்கள் பொது ஜனங்களில் அரைக்கால் வாசியோ, அதற்கும் குறைவாகவோதான் இருக்கக்கூடும். இதுவே மஹத்தான தப்பு என்றால், இதையும்விட மஹா பெரிய தோஷம் ஏற்பட இப்போது இடம் செய்திருக்கிறது. இது இரண்டாவது பயம். என்னவென்றால்:

ஜனத்தொகையில் அரைக்கால்வாசி போக பாக்கி முழுதும் ஏழை எளியவர்களாகவே உள்ள நம் நாட்டில் இவர்கள் அத்தனை பேருக்கும் அபேக்ஷகர்கள் காசைக் கண்ணில் காட்டி வோட் வாங்க இடமேற்படுத்தித் தந்திருப்பதைத்தான் சொல்கிறேன். இதை நினைத்தால், ‘புண்ய பூமி’ என்று இதுவரை போற்றப்பட்டு வந்த நம் நாட்டின் கதி என்ன ஆகுமோ என்று கதிகலங்கும்படியாக இருக்கிறது. Adult Franchise என்று கொண்டு வந்திருப்பதன் விளைவாகப் பணத்தைக் காட்டி நம்முடைய ஏழைப் பொதுஜனங்களை லஞ்சம் வாங்கும்படி பண்ணுவதில் கட்சியோடு கட்சி போட்டி போடப் போகிறதே என்று நிரம்பவும் விசாரமாக இருக்கிறது.

இப்பேர்ப்பட்ட பணபலம் பெறவேண்டுமென்றால் எல்லாக் கட்சிகளுமே தப்புவழியில் போனால்தான் முடியும். அதாவது ‘லீடர்ஷிப்’ கெட்டுப்போகவேண்டியதுதான். அதைவிடவும் பொது ஜனத்தைப் பற்றியே ரொம்பக் கவலையாக உள்ளது. காசு வாங்கிக் கொண்டு வோட் போடுவது என்பதாக ஜனங்கள் ஒரு தப்புக்கு இடம் கொடுத்துவிட்டால், அது பழகிப்போய், மேலும் மேலும் தப்புப் பண்ணுவதில் குளிர் விட்டுவிடும். பொதுவாக நல்ல குணமுடைய நம் ஜனங்கள் லஞ்சம் வாங்கிக்கொள்ளும் ஒரு தோஷத்துக்கு ஆளாகிவிட்டால், அப்புறம் எதிரெதிர் கட்சிகளிடமும் வாங்கிக்கொண்டு, ஒன்றுக்கு நாமம் போட்டு அஸத்யம் என்ற பெரிய தோஷத்துக்கும் ஆளாகிவிடக்கூடும். எங்கேயோ ஒரு ஆபீஸுக்கு லஞ்சம், ப்யூனுக்கு ‘டிப்’ என்றில்லாமல் தேசம் முழுக்க wholesale – ஆக இப்படி அதர்மமான லஞ்சம், அஸத்யம் ஆகியவற்றைக் கொண்டு வந்துவிட்டு, இது ‘புண்யபூமி’ என்பதையே மாற்றி விடுவதற்கா ஜனநாயகம் என்றுகூட துக்கமாக வருகிறது.

நான் பாலிடிக்ஸ் பேசப்படாதுதான். ஆனால், பாலிடிக்ஸ் தர்மத்திலே வந்து முட்டி மோதி, நம்முடைய ஜனங்களின் நல்ல பண்புகளையெல்லாம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற நிலை ஏற்படும்போது, தர்ம பீடங்களாகவே மடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதால், எப்படி வாயை மூடிக்கொண்டிருப்பது?

அடைத்துவைத்த ஜலம், திறந்து விட்டவுடன் ஒரே வேகமாகப் பிய்த்துக்கொண்டு கிளம்புவதுபோல், வெகுகால வெள்ளைக்கார ஆட்சிக்குப் பின் இப்போது ஸ்வதந்த்ரம் என்று கிடைத்திருக்கும்போது எல்லோரும் நிதானமில்லாமல், கட்டுப்பாடு இல்லாமல், வ்யவஸ்தையில்லாமல் கிளம்புவதற்கு ஆஸ்பதம் ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரி ஸமயத்தில் அபேக்ஷகருக்கும் யோக்யதாம்சம் வேண்டாம், வோட்டுப் போடுகிறவனுக்கும் வேண்டாம் என்று பண்ணினால் நாம் மனஸால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாதபடி கட்சி ப்ரதிகட்சிகளும், லஞ்சமும், த்வேஷமும், மோசமும், பொய்யுந்தான் எலேக்ஷன் என்ற பெயரில் ஊரை இரண்டுப்படுத்தப் போகிறதோ என்றே எனக்குத் தோன்றுகிறது. ‘உலகத்திலேயே பெரிய ஜனநாயகம்’ என்ற பெருமை காட்டுவதற்காக தர்மத்திலே சிறுமை அடைந்துவிட்டால் அப்புறம் நம்முடைய ஜனநாயக ஜாஜ்வல்ய வேஷம் ப்ராணன் போன உடம்புக்கு அலங்காரம் செய்கிற மாதிரி தான்!

ஸொத்து, படிப்பு முதலான யோக்யதாம்சங்கள் இல்லாவிட்டாலுங்கூட இவற்றுக்கு மேலான ஆத்மசுத்தி உள்ள நம் ஜனங்கள் இப்போது செய்யும் ஏற்பாட்டின்கீழ் அபேக்ஷர்களாகவும் வோட்டர்களாகவும் ஆகிறபோது அசுத்தமான அர்த்தத்தால் கெட்டுபோய்த் தங்களுடைய ஆத்ம சுத்தத்தை இழக்கும்படி ஆகுமோ என்பதுதான் என்னுடைய பெரிய கவலை. ஸர்வஜனங்களின் அர்த்த அசுத்திக்கும் ஆத்ம அசுத்திக்குமா ஒரு ஜனநாயகம்?

சோழ சாஸனத்தின் ஐந்தாவது clause-ல் சொல்லும் அர்த்த – ஆத்ம சுத்தியானது நாட்டு நிர்வாஹத்தில் நாம் கவலைப்படும்படியான பெரிய மாசு, ‘பொல்யூஷன்’, ஏற்படாமல் காப்பற்றிக் கொடுக்கிறது. ‘பண விஷயத்தில் முறைமீறிப் பண்ணவே மாட்டான்’ என்பதாக அர்த்த சுத்தத்தைப் பற்றி நிச்சயமாக ஊராரால் மதிக்கப்டுபவனைத் தான் அபேக்ஷகனாக ஒப்புக்கொள்வார்கள். ஒருத்தனைப் பற்றி ஏதாவது கொஞ்சம் ஸந்தேஹம், கொஞ்சம் ‘கசமுச’ப் பேச்சு இருந்தால் அப்படிப்பட்டவன் தேர்தல் அபேக்ஷை பெறவே முடியாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உயிர்நிலை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆத்ம சுத்தம்
Next