உயிர் நிலை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உத்தரமேரூர் சாஸனத்திலுள்ள எல்லா clause – க்கும் (ஷரத்துக்களுக்கும்) உயிர்நிலை அபேக்ஷகருக்கு அர்த்த சுத்தியும் ஆத்ம சுத்தியும் இருக்கவேண்டும் என்பதுதான். இந்த சுத்தியாலும், இது தருகிற தர்மசக்தியாலும் தீரத்தாலுந்தான், மெகஸ்தனிஸின் காலத்திலிருந்து நம் தேசத்தைப் பற்றி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிற வெளிநாட்டவரெல்லாம் இந்திய நாட்டைத் தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியிருப்பது.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அபேக்ஷகர்கள் அர்த்த சுத்தியோடும், ஆத்ம சுத்தியோடும் இருக்கவேண்டுமென்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்டு ஸபை மெம்பெர் ஆன பிற்பாடும் அவர்கள் இந்த சுத்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்படிக் கண்டிப்பு செய்து விதி வகுத்திருக்கிறார்கள். தப்பினால் மெம்பர்ஷிப் போய்விடும். மறுபடி தேர்தலில் அவர்கள் இடம்பெற முடியாது. அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களைச் சேர்ந்தவர்களுந்தான்! இந்த விஷயத்துக்கு அப்புறம் வருகிறேன்.

தற்போது பஹிரங்கமாகக் குற்றவாளி என்று நிரூபணமானவரைத் தவிர எவரும் அபேக்ஷகராக நின்று ஒரு பொது ஸபை (நகரஸபையோ, சட்ட ஸபையோ, பார்லிமெண்டோ எதுவோ ஒன்றில்) அங்கத்தினராகிவிட முடியும். புத்தி சாதுர்யத்தால் கோர்ட்டுக்கு வராமலே இப்போது நடக்கிற மறைமுகக் குற்றங்களுக்கோ எல்லையே இல்லை. பெரும்பாலான குற்றங்களை நிரூபிக்க முடியாமல் benefit of doubt (குற்றவாளிதானா என்பதில் கொஞ்சம் ஸந்தேஹமிருந்தால்கூட ஒருவனை விட்டுவிட வேண்டும் என்பதாக ஸந்தேஹத்தின் ஸாதகமான பலனை) வழக்குக்கு ஆளாகியிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவதில், பெரிய பெரிய தப்புக்கள்கூட ஸாமர்த்யமாகப் பண்ணிவிட்டு ஸாக்ஷியம் போதவில்லை என்று தப்பிவிட முடிகிறது. பொலிடிகலாக, அண்டர் – க்ரௌண்டாகப் போய் அராஜகமாக ரயிலைக் கவிழ்ப்பது, தண்டவாளத்தைப் பிடுங்குவது முதலானவற்றைச் செய்தாலும் அவை குற்றமாக வருவதே இல்லை. ஸிவில் ஸைடிலும் அப்படியே பாலிடிக்ஸின் அடிப்படையில் ஸரியாகக் கணக்குக் காட்டாமல் வசூல் செய்வது, சலுகை காட்டி ஆதாயம் (‘கையூட்டு’ என்றேனே அது) பெறுவது ஆகியன குற்றமாக வராமலே வெகு கெட்டிக்காரத்தனமாகச் செய்யப்படுகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ப்ராம்மணரை மட்டும் குறிப்பதாகாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸர்வஜன அசுக்திக்கு ஹேது
Next