பிற்பாடும் அசுத்தி ஏற்படாதிருக்க : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒரு வருஷம் ஸபை மெம்பெராயிருந்தவன் மூன்று வருஷத்துக்கு மறுபடி அபேக்ஷை பெறமுடியாது; ஏற்கனவே மெம்பராயிருந்தவனின் உறவுக்காரர்ளுக்குத் தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று கூறுவதான சோழ சாஸனத்தின் ஆறாவது, ஏழாவது clause-களும் குறிப்பாக ஐந்தில் சொன்ன அர்த்த – ஆத்ம சுத்திகளை ரக்ஷித்துக் கொடுப்பதில் கருத்துக் கொண்டவையே. இப்போது சுத்தராகத் தெரிகிறவர்களை எலெக்ட் பண்ணிவிட்டால் மட்டும் போதாது; வெறுமே ஐடியலிசம் பேசாமல், இந்த சுத்தர்களும் ஸந்தர்ப்ப நெரிசலில் இனிமேல் அசுத்தராகக் கூடிய ஹேதுக்கள் இருக்கின்றன என்பதை கவனித்துத் தான், அந்த ஹேதுக்களை இல்லாமல் செய்துவிடவேண்டுமென்றே இந்த இரண்டு ஷரத்துக்களும் போட்டிருக்கிறார்கள்.

இதில் முதலாவது, ஒரு வருஷம் மெம்பராயிருப்பவன் அப்புறம் மூன்று வருஷத்துக்கு மெம்பராக இருக்கமுடியாது என்று பண்ணிவிடுகிறது. அந்தக் காலத்தில் இந்த க்ராம மஹாஸபைகளுக்கு வருஷத்துக்கு ஒரு முறை தேர்தல் நடந்தது. இம்மாதிரி ஒரு தேர்தலில் ஜயித்தவன் அடுத்த மூன்று வருஷங்களும் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. ஏன்? பல ‘டெர்ம்’கள் பதவி வஹித்தால் ஒருத்தனுடைய செல்வாக்கு மிதமிஞ்சிப் போகும்; தான் செய்த தப்புக்கள் வெளிப்படாமல் மூடி மறைக்க நிறைய அவகாசம் கிடைத்து விடும். தனக்கு ஆதாயமான விதங்களில் கார்யத்தைக் கொண்டு போவது, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சலுகை காட்டுவது, வேண்டாதவர்களுக்கு ஏதாவது ஹிம்ஸை தந்துகொண்டேபோய் அவர்களை இருந்த இடம் தெரியாமல் செய்வது என்றெல்லாம் ஏற்பட்டுவிடும். அதனால்தான் அதிகார ஸ்தானத்தில் எவனொருவனும் ஆணிவேர், சல்லிவேர் விட்டுக்கொள்வது பற்றி நினைக்கவே இடம் கொடாமல், ‘ஒரு வருஷம் டெர்ம் ஆச்சா? மூணு வருஷத்துக்கு மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்ச் சேர்’ என்று விதி செய்திருப்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்ம சுத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  புது ரத்தம் பிடிக்க
Next