ராஜபீட விஷயமும் ஊர்ச்சபை விஷயமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதனால்தான் பாரம்பர்ய அதிகாரமென்பது ராஜாவோடு நிற்கட்டும், ஜனங்கள் ஒரு மைய புருஷனிடம் விச்வாஸத்தில் கட்டுப்பட்டு நிற்க அது அவசியம் என்று வைத்தபோதே, சிறிய அளவில் ஊராட்சி என்று வரும்போது அங்கே உறவு முறையால் எந்தச் சலுகையும் ஏற்பட்டு விட முடியாதபடி ஒரே அடியாய் அடித்துப் போட்டு விட்டார்கள்.

உச்ச லெவலில் மானார்க்கியும் (முடியரசும்), பாரம்பர்ய வாரிசுரிமையும் இருந்தாலும் அது அநேகவிதமான மந்த்ராலோசனை ஸபைகளுக்குக் கட்டுப்பட்டே நடந்தது. மநு தர்மாதி சாஸ்திர நூல்களுக்குக் கட்டுப்பட்டே மந்த்ராலோசனை ஸபை முடிவுகள் பண்ணும். அடிப்படைச் சட்டம் ராஜா தன்னிஷ்டப்படி போடுவதல்ல. எந்த ராஜா ஆண்டாலும் தர்ம சாஸ்திரங்கள், அர்த்த சாஸ்திரம், நீதி சாஸ்திரம் ஆகியனதான் அடிப்படைச் சட்டம். அதன்மேல் ராஜா இடம், பொருள், ஏவலை அநுஸரித்துப் புது ரூல்கள் கொஞ்சம் போடலாம். அவ்வளவுதான். மேல்நாடுகளில் ராஜா வைத்ததே சட்டம் என்று இருந்ததால்தான், ‘The king can do no wrong’ என்றார்கள். ‘ரைட்’டோ ‘ராங்’கோ அவர்களுடைய ராஜா எதைப் பண்ணினாலும் அதைச் சட்டமாக்க முடிந்ததாலேயே அது அவர்களுக்கு ‘ரைட்’டாகி விட்டது! ‘ராஜா ஊரைச் சூறையாடலாம்; பிறருடைய ஸ்திரீகளை க்ரஹிக்கலாம்’ என்றுகூட அவனே சட்டம் போட்டுக்கொண்டுவிடக்கூடியபடி அவனுக்கு இதில் பூர்ண அதிகாரம் இருந்தது. அப்படி நம் தேசத்தில் இருந்ததேயில்லை. Law-making power(சட்டம் போடும் அதிகாரம்) என்பது நம் ராஜாக்களுக்கு முழுசாக, ‘அப்ஸொல்யூட்’டாகக் கொடுக்கப்படவில்லை. அவனும் சாஸ்திரங்களின் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் ‘ராங்’ பண்ணிவிட்டானென்று ராஜ ஸதஸின் பெரியவர்கள் முடிவு செய்து அவனை ஸிம்ஹாஸனத்திலிருந்து இறக்கியும் இருக்கிறார்கள். துன்மார்க்கத்தில் போன அஸமஞ்ஜன் மாதிரியான ராஜகுமாரர்களையும், ராஜாவான பிறகும் யதேச்சாதிகாரமாகத் தன் மனஸுப்படி பண்ணின வேனன் போன்றவர்களையும் மந்த்ராலோசனை ஸபையினர் ஒழித்தே கட்டியிருக்கிறார்கள்.

ஆனால், ஊருக்கு ஊர், ஸபை அங்கத்தினர்களைப் பரீக்ஷிக்க மந்த்ராலோசனை ஸபைகள் வைத்து ஸாத்யப்படுமா? அப்பன் பிள்ளை என்ற பாரம்பர்யம், அல்லது வேறுவித உறவுமுறைகளால் ஒவ்வொரு ஊர் ஸபைகளிலும் இருக்கப்பட்ட ஏராளமான அங்கத்தினருக்குள்ளே பிணைப்பு ஏற்படுமானால் இது ஒவ்வொன்றையும் கவனித்துச் சீர்ப்படுத்திக் கொண்டிருக்க மந்த்ராலோசனை ஸபைகள் அமைத்து மாளாது. அப்புறம் இந்த மந்த்ராலோசனை ஸபை அங்கத்தினருக்குள்ளேயும் இப்படி உறவுமுறைப் பிணைப்பு இருக்கிறதா, அதற்குக் கண்காணிப்பு செய்ய இன்னொரு ஸபை வேண்டுமா என்று அதுபாட்டுக்கு நீண்டு கொண்டே போகும். அதனால்தான் உச்ச லெவலில் ஹெரிடிடரி மானார்க்கி (பாரம்பர்ய முடியரசு) என்று வைத்தபோதிலும் கீழ் லெவலில், ஊராட்சியில், க்ராம ஆட்சியில் இப்படிக் கூடவே கூடாது. அப்பன்-பிள்ளை என்று மட்டுமில்லாமல் மற்ற கிட்டத்து உறவுக்காரர்கள்கூட மெம்பர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட இடம் தரக்கூடாது என்று விதி செய்திருக்கிறார்கள்.

நீண்டகாலம் அடிமைப்பட்டும், தரித்ரப்பட்டும் இருந்து விட்ட நம் தேசத்தில், இப்போது புதிதாக ஸ்வய அதிகாரம் வந்திருக்கிறபோது, கண்டது காணாத மாதிரிப் பிடுங்கித் தின்ன வேண்டும் என்பதில் ஏற்படக்கூடிய வேகத்தில், பழைய ராஜாக்களும் ஜமீன்தார்களும் எடுபட்டுப் போனாலும், புதுசாக சட்ட ஸபைகளில் இடம்பெறுகிறவர்களில் அவரவரும் தங்கள் தங்கள் பந்துக்களோடு ‘ஜமீன்தாரி’கள் ஸ்ருஷ்டித்துக் கொள்ளாமலிருக்க, இந்த மாதிரி இப்போதும் ஏதாவது ஷரத்து இருந்தால் தேவலை என்று நினைக்க இடமிருக்கிறது.

அந்த நாள் ராஜா விஷயம் மாதிரி இல்லை இந்த நாள் மந்த்ரிகள் முதலானவர்களின் விஷயம். ராஜ குமாரர்களும், ராஜ குடும்பத்திலுள்ள முக்யஸ்தர்களான ராஜ பந்துக்களும் பரம்பரையாக பெரிய பொஸிஷன்களில் இருந்து வந்திருப்பவர்களாகவே இருப்பார்கள். அதற்கேற்ற கல்வி கேள்வி, அந்தஸ்து, வாழ்க்கைச் சூழ்நிலை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆதலால் புதுசாக ராஜா இவர்களுக்கு ஏதோ பாரபக்ஷம் காட்டித் தூக்கிவிட வேண்டுமென்பதற்குப் பெரும்பாலும் இடமே இல்லாமலிருந்திருக்கும். இக்கால மந்த்ரிகளின் புத்ரர்கள், பந்துக்கள் ஆகியோர் விஷயத்தில் இப்படிச் சொல்வதற்கில்லை. பொருளாதாரம், ஸமூஹ அந்தஸ்து முதலானவற்றில் ரொம்பவும் ஸாமான்யமாக இருக்கப்பட்ட ஒருவர் இப்போதைய தேர்தல் முறையினால் மந்த்ரியாகி திடீரென்று செல்வம், செல்வாக்கு ஆகியவற்றில் பெரிய உயர்வு பெறமுடியும். இப்படிப்பட்டவர்களின் உறவினர்கள் எப்படியிருப்பார்கள்?

அதோடு ‘வெல்ஃபேர் ஸ்டேட்’ என்பதாகப் பொதுஜன வாழ்வின் பல துறைகளிலும் ப்ரவேசிப்பதற்க்குப் புதிதாக ஏற்பாடு வந்திருப்பதால் ஜனங்களிடம், ‘இன்னின்ன நல்லது பண்ணுவேன்; அதற்கு ப்ரதியாக இன்னது செய்யணும்’ என்று ‘கையூட்டு’ வாங்க அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘இன்ன மாதிரி நீ செய்யாவிட்டால் உன் தொழிலையோ இன்னொன்றையோ கெடுப்பேன்’ என்று மிரட்டித் தனக்குக் கட்டுப்பட்டிருக்குமாறு பண்ணவும் இப்போதைய புதிய ஏற்பாட்டில் அதிக இடமிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பல கட்சிகள் என்று ஏற்பட்டிருப்பதில் உண்டாகிற பரஸ்பர போட்டியில் தர்மத்தை விட்டாவது தன்னுடைய கட்சியை எப்படியேனும் நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பலபேருக்கு ஏற்படத்தான் செய்யும். கட்சியால் தன்னையும், தன்னால் கட்சியையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதான நிலையில் கட்சியின் பெயரைக் கொண்டு எங்கெங்கே லாபமடைய முடியுமோ அங்கேயெல்லாம் தன்னோடு நிற்காமல் தன்னுடைய சாய்காலைக் கொண்டு புத்ரர், பந்துக்கள் ஆகியோரையும் உள்ளே நுழைய விடுவது என்று ஆனால் அப்புறம்……… சொல்லணுமா? முறைகேட்டுக்கு முடிவேயில்லாமல்தான் ஆகும்! பல்வேறு கட்சிகளிடையே போட்டி என்பது மாத்திரமில்லாம்மல், ஒவ்வொரு கட்சியிலுமே சாய்காலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு உறவுக்கார கோஷ்டி என்பதாகப் பல – ‘clique’, ‘faction’ என்று கௌரவக் குறைவு த்வனிக்கும்படி சொல்கிறார்களே, அப்படிப்பட்ட பல – தோன்றி, எந்தக் கட்சிக்கும் ஐடியல், ஐடியாலஜி என்பவை போய், ‘யார் யாரை அமுக்கி முன்னுக்கு வரலாம்? யார் யாரை முழுங்கி ஏப்பம் விடலாம்?’ என்ற உள்போட்டியே நித்யப்படி நிலவரமாகி விடலாம்.

இதையெல்லாம் பார்க்கும்போது மெம்பர்களின் நெருங்கின உறவினர்களுக்கு இடமில்லை என்று உத்தரமேரூர் சாஸனத்தில் தீர்மானம் பண்ணியிருப்பதில் நிரம்பவும் ஸாரமிருப்பதாகத் தெரிகிறது. இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து நிர்வாஹத்தில் மாசு படியாமல் ரக்ஷித்துள்ள அவர்களுடைய தர்ம ந்யாய உணர்ச்சியைப் பற்றி மிகுந்த மதிப்பு ஏற்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தார்மிக நிர்வாஹத்தின் முதுகெலும்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பதவிநீக்கமும் நிரந்தரத் தடையும்
Next