சாஸ்த்ரமும் சட்டமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அந்தக் காலத்தில் சாஸ்த்ரப்படி எந்த தோஷங்கள் ‘பாபங்கள்’ என்று சொல்லப்பட்டனவோ அவையேதான் ராஜாங்கத்தின் சட்டப்படி ‘குற்றங்கள்’ என்று தீர்மானிக்கப்பட்டன. தற்போது சாஸ்த்ரம் சொல்லும் தோஷங்கள் ‘லா’வில் குற்றமாக வரவில்லை. இன்னம் சொல்லப்போனால், சாஸ்த்ரத்தில் தோஷம், பாபம் என்று எதுகளைப் பண்ணக்கூடாது என்று சொல்லியிருக்கின்றனவோ அவற்றைப் பண்ணுவதுதான் முன்னேற்றத்துக்கு அறிகுறி என்றும், சாஸ்த்ரப்படி செய்வதேதான் ‘லா’ப்படி குற்றம் என்றுங்கூட செய்துவருகிறார்கள். இதில் பெரிய high jump/long jump செய்துகாட்டிப் பெருமைப்படுவதற்கே ஸ்வதந்த்ரம் ஏற்பட்டபின் ஸாக்ஷாத் நம்மவர்களால் குடியரசுக்கான அரசியல் நிர்ணயச் சட்டம் “முன்னேற்ற”, “முற்போக்கு” நோக்கில் செய்யப்பட்டுவருகிறது. பாதிவ்ரயத்துக்கு (கற்பு நோன்புக்கு) ஹானியாக விவாஹரத்து, வதூ (மணப்பெண்) பரிசுத்தத்துக்கு ஹானியாக வயஸுவந்த அப்புறம்தான் கல்யாணம்; அவிபக்த குடும்ப (கூட்டுக்குடும்ப)த்துக்கு ஹானியாகப் பெண்ணுக்கு ஸொத்துரிமை, வைதிக ஆசார ஸம்ரக்ஷணத்துக்கு ஹானியாகக் கலப்பு போஜனம், கலப்பு மணம் – என்றெல்லாம் சாஸ்த்ரப்படி மஹா பாபமானவற்றையெல்லாம் முன்னேற்றம், முற்போக்கு என்ற பெயர்களில் விசேஷமாக ஆதரித்து வ்ருத்தி செய்யத் துணிந்திருக்கிறார்கள்.

பழைய நாளில் ரிஷிகள் தந்த தர்ம சாஸ்த்ரமும், ராஜாக்களின் சட்டமுறையும் ஒன்றாகவே இருந்தன. “சட்டப்படியும், சாஸ்த்ரப்படியும்” என்று இப்போது இரண்டாகப் பிரித்து, “உம்” போட்டுச் சொல்கிறமாதிரிச் சொல்ல அப்போது அவச்யமில்லாமலிருந்தது. சாஸ்த்ரவிதியே சட்ட விதியாயிருந்தது. சாஸ்த்ரம் எதை தோஷமென்று சொல்கிறதோ அது சட்டப்படி குற்றம். ஒரு தோஷத்தைப் போக்கிக்கொள்ள சாஸ்த்ரத்தில் ப்ராயச்சித்தம் சொல்லியிருந்தால் அங்கே அப்படி ப்ராயச்சித்தம் செய்து கொண்டவனைப் பெரும்பாலும் ராஜாங்க நீதி ஸ்தலமும் குற்றவாளி அல்ல என்றே கருதிற்று. ப்ராயச்சித்தம் செய்துகொண்டதில் பாபம் போயிற்று என்பதைச் சட்டமும் ஒப்புக்கொண்டதென்றாலும், சில பாபங்களை, அதாவது குற்றங்களை, செய்தவன் அந்தப் பழக்கத்தில் மறுபடி அதே மாதிரி பண்ணிவிடக்கூடும் என்பதையும் சட்டம் கவனித்தது. சாஸ்த்ரத்திலுங்கூட ப்ராயச்சித்தமானது ஒருவன் இதற்குமுன் செய்த பாபத்தை கழுவுவதாகத்தான் சொல்லியிருக்கிறதே தவிர இனிமேல் அப்படிப் பண்ணாமல் அவனைத் தடுப்பதாகச் சொல்லவில்லை. ஆகையால், மறுபடி எந்தமாதிரிக் குற்றங்களைச் செய்யும்படிவிட்டால் ரொம்பவும் ஸமூஹ விரோதமாக, ஸமூஹத்துக்கு அபாயமாக ஆகுமோ, அப்படிப்பட்ட பாபங்களைப் பண்ணினவன் சாஸ்த்ர ரீதியாய் ப்ராயச்சித்தம் பண்ணிக்கொண்டிருந்தால்கூட ஸமூஹ நிலையை முன்னிட்டு அவனைச் சட்டப்படி தண்டித்து, மறுபடி அவன் அப்படிச் செய்யாதபடி கட்டுப்படுத்தவேண்டுமென்று கருதப்பட்டது.

இந்த முறையில்தான் அந்த சோழர்கால சாஸனத்திலும், ப்ராயச்சித்தம் செய்துகொண்டால் சில குற்றங்களிலிருந்து விடுபட்டதாகக் கருதி மெம்பர்ஷிப் தரலாமென்றும், வேறு சில குற்றங்களுக்கோ ப்ராயச்சித்தம் செய்துகொண்டாலும் மன்னித்துவிடாமல், ஆயுஸ் பூராவும் அப்படிப்பட்டவர்களை ஸபையிலிருந்து பஹிஷ்காரம் செய்யவேண்டுமென்றும் ஒரு பாகுபாடு செய்திருக்கிறது. இப்படி ப்ராயச்சித்தம் பண்ணிக்கொண்டாலும் ஸபையில் ஸ்தானத்துக்கு அருஹதைப் பெறாதவர் யார் யாரென்றால், மாம்ஸம் சாப்பிட்ட ப்ராமணர்கள், மேலே சொன்ன மஹாபாதகங்களைப் பண்ணினவர்கள் – குறிப்பாக, வியபசார தோஷமுள்ளவர்கள், கிராம விரோதியாக இருக்கிறவர்கள்.

பொய்க் கணக்குக் காட்டினவர்களும் பொய் ஸாக்ஷி சொன்னவர்களும் அவர்களுடைய பந்துக்கள் ஸஹிதம் ‘டிஸ்க்வாலிஃபை’ ஆகிவிடுவார்கள். எந்த விதத்தில் தப்பான பண ஆதாயம் பெற்றிருந்தாலும் இதே கதிதான். தப்பான முறையில் எப்படி ஸொத்து சேர்த்திருந்தாலும் அது லஞ்சமாகவே கருதப்பட்டது. “எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்” என்று பண வ்யவாஹரத்தில் சுத்தமில்லாதவனை அந்தக் கல்வெட்டில் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பஞ்சமாபாதகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தகுதித் தடைகள் சில
Next