‘அர்த்த சுத்தம்’, ‘ஆத்ம சுத்தம்’ என்று சொன்னதோடு சாஸனத்தின் இன்னோரிடத்தில் பஞ்சமாபாதகம் என்கிற ஐந்து பெருங்குற்றங்களில் எதைச் செய்திருப்பவனையும் அவனுடைய பந்துக்களோடு சேர்த்து டிஸ்க்வாலிஃபை செய்திருக்கிறது. ப்ரம்மஹத்தி, ஸுராபானம் என்ற கள்குடி, ஸ்வர்ணஸ்தேயம் என்பதான பொன்னைத் திருடுவது, குரு தல்ப கமனம் என்பதாக குரு பத்னியிடம் தப்பான உறவு கொள்வது – ஆகிய இந்த நாலு பெருங் குற்றங்களும், இந்தக் குற்றங்களில் ஒன்றைச் செய்தவனோடு நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதான ஐந்தாவது குற்றமும் சேர்ந்து ‘பஞ்ச மஹா பாதகம்’ எனப்படும். ‘ப்ரஹ்மஹத்தி’ என்பதாக ப்ராம்மணனைக் கொல்வது மட்டுமே இங்கே சொல்லப்பட்டாலும், எந்தக் கொலையுமே ஒரு மஹாபாதகமாகத்தான் கருதப்பட்டு அதைச் செய்தவனை ஸமூஹம் ஒதுக்கிவைத்தது. அதேபோல, ஸ்வர்ணத்தைத் திருடுவது மாத்திரமில்லாமல் எல்லாவிதத் திருட்டும், குரு பத்னியிடம் மாத்திரமின்றி எந்த ஸ்த்ரீயிடமுமே தப்பாக நடப்பதும் மஹாபாதகங்களாகக் கருதப்பட்டன. கொலை, திருட்டு, வ்யபசாரம் ஆகியவற்றிலேயே ரொம்பவும் கேவலமானவ எவை என்பதைக் காட்டத்தான், ஸத்தானவனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதில் கூட சக்தியோ மனஸோ இல்லாமலிருப்பவனுமான ஒரு ப்ராம்மணனைக் கொல்வது, லக்ஷ்மியின் ஸாந்நித்யம் உள்ளதான ஸ்வர்ணத்தைத் திருடுவது, தாயாருக்கு ஸமமான குரு பத்னியிடம் மனோவிகாரம் கொள்வது இவற்றைக் குறிப்பாகச் சொன்னது. இவற்றுக்குமேல் கொடூரமான – heinous என்கிற – குற்றமில்லை என்று அர்த்தம்.
பஞ்சமாபாதகனைப் போலவே ‘ஆததாயி’ என்றும் ஒன்று உண்டு*. அர்ஜுனன் (கீதையின் ஆரம்பத்தில்) கௌரவர்களை ‘ஆததாயி’க்கள் என்று சொல்லி மஹா க்ருரமான அந்த ஆததாயிக்களைக் கொல்வதால்கூடத் தனக்குப் பாபமே வந்துசேரும் என்று பயப்பட்டுச் சொல்லியிருக்கிறான். ஸத்ப்ராம்மணனை மட்டுமில்லாமல் மஹா பாபியையுங்கூடக் கொலை செய்வது பாபம்தான் என்று இங்கே தெரிகிறது.
இப்படிப்பட்ட பாதகங்களைச் செய்தவர்களும், அவர்களுடைய பந்துக்கள் எல்லோரும் ஊர் ஸபை அங்கத்தினராவதற்கு அருஹதை இழந்துவிடுவார்கள்.
* தீ வைப்பவன், விஷம் வைப்பவன், நிராயுதபாணியை ஆயுதத்தால் கொல்பவன், பொருளை அபஹரிப்பவன், பூமியை அபஹரிப்பவன், பிறன் மனைவியை அபஹரிப்பவன் ஆகிய அறுவரும் ‘ஆததாயி’களாவர்.