வேட்பாளர் இல்லாத-வாக்காளர் இல்லாத தேர்தல் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இவர்கள் ‘ஸபைத் தேர்தலுக்குத் தகுதி பெறாதவர்கள்’ என்பதைத்தான் ‘குடவோலை எழுதிப் புக இடம் பெறாத’வர்கள் என்று சொல்லியிருக்க வேண்டுமென்று எவரும் ஊஹித்துவிடலாம். ஆனால் தேர்தலை ஏன் “குடவோலை எழுதிப் புகுவது” என்று சொல்லியிருக்கிறது என்பது மட்டும் ஊஹிக்க முடியாததாக இருக்கிறது. ‘குடவோலை’ என்ன, அது ‘எழுதிப் புகுவது’ என்ன என்று புரியவில்லை.

புரியாத இதையும் இரண்டாவது சிலா சாஸனம் தெளிவாகப் புரியவைக்கிறது.

இப்போதுதான் அந்த நாள் எலெக்ஷனில் இருந்த ரொம்பப் புதுமையான (அதாவது நமக்குப் புதுமையாகத் தோன்றுவதான), முக்யமான விஷயத்தைப் பற்றிச் சொல்லப்போகிறேன். இதுவரை தேர்தல் விதிகளைப் பற்றிச் சொன்னேன். இனிமேல்தான் அந்தத் தேர்தல் எப்படி நடந்தது என்று அதன் ‘ப்ரொஸீஜரை’ச் சொல்லப்போகிறேன். இதில் நூதனமான விஷயமிருக்கிறது!

அபேக்ஷகர்கள் என்பதாகச் சில பேர் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தலுக்கு நின்று ‘வோட்’ கேட்பதென்பதே அப்போது கிடையாது! வோட்டர்கள் என்று யாரும் போய் வோட் போட்டதும் கிடையாது! “இதென்ன இப்படி சொல்கிறாரே! இத்தனை நாழி முடியரசுக் காலத்திலேயே ஜனநாயகத் தேர்தல், மெம்பரின் யோக்யதாம்சம் என்றெல்லாம் நீட்டி முழக்கிவிட்டுக் கடைசியில் கான்டிடேட் (அபேக்ஷகர்) என்று யாரும் கன்டெஸ்டே பண்ணவில்லை (போட்டியிடவேயில்லை) என்கிறாரே! வோட்டிங் என்றே ஒன்று நடக்கவில்லை என்கிறாரே!” என்று தோன்றலாம். “கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் யுத்தம் என்கிறமாதிரி அபேக்ஷகர், வோட்டர் இல்லாத தேர்தலா?” என்று ஆச்சர்யப்படலாம்.

பாரம்பர்ய முறையில்லாமல் ஜனநாயக முறையில் தகுதி பெற்ற எவரானாலும் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் தேர்தல் நடந்தது வாஸ்தவம்; ஸமூஹ நலத்தில் கண்குத்திப் பாம்பாக இருந்து அபேக்ஷகர்களுக்கு ஏகப்பட்ட யோக்யதாம்சங்கள் நிர்ணயித்திருந்ததும் வாஸ்தவம். ஆனாலும் “நான் நிற்கிறேன்” என்று அபேக்ஷாப் பத்திரம் தாக்கல் செய்து எவரொருத்தரும் அபேக்ஷகராகப் போட்டியிடுவதும், ப்ரசாரம் பண்ணுவதும் கிடையாது. அபேக்ஷகர் என்ற ஒருவர் வோட் கேட்டதும் கிடையாது. அதே மாதிரி வோட்டர் என்ற ஒருவர் வோட் போட்டதும் கிடையாது.

பின்னே எப்படித் தேர்தல் நடந்ததென்றால், சொல்கிறேன். சாஸனத்திலேயே உள்ளதைத்தான் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தகுதித் தடைகள் சில
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அபேக்ஷகர் யார்?
Next