மநு – மாந்தாதாவின் காலத்திலிருந்து வந்திருக்கிற தர்ம சாஸ்த்ரத்தை அநுஸரித்த யோக்யதைகளையே மநுநீதிச் சோழனின் பரம்பரையினரும் ஊர் நிர்வாஹ அங்கத்தினர்களுக்கு உரியனவாக வைத்துவிட்டார்கள். இவற்றைத்தான் மேலே அயிட்டம் அயிட்டமாகப் பார்த்தோம். இந்தத் தகுதிகள் எல்லாம் உள்ள எவனானாலும் அவன் நிர்வாஹத்துக்கு வந்தால் ஸரியாகத்தான் நடப்பான். ஒரு க்ராமத்திலுள்ள ஜனங்களிடம், “நான் இப்படியாகப்பட்ட யோக்யதாம்சங்கள் உள்ளவன்” என்று ஒரு தர்மிஷ்டன் சொல்லிக் கொண்டு ‘கன்டெஸ்ட்’ பண்ணாவிட்டாலும் (தேர்தலில் போட்டியிடாவிட்டாலும்) அவர்களுக்கே தங்களுக்கு மத்தியில் இப்பேர்ப்பட்டவர்கள் யார் யார் விசேஷமாக இருக்கிறார்கள் என்று தெரியுமல்லவா? “இன்னார் நல்ல யோக்யதை உள்ளவர், யோக்யர், படிப்பாளி, குணத்திலும் நல்லவர், புத்திசாலித்தனம் உள்ளவர், கார்ய ஸாமர்த்யமும் உள்ளவர், இவரிடம் நிர்வாஹப் பொறுப்பு தரலாம்” என்று க்ராமத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் சில பேரைப் பற்றி விசேஷமாக நினைப்பார்கள் அல்லவா?
இம்மாதிரிப் பகுதிகளைத் தற்போது ‘வார்ட்’ என்கிறோம். அக் காலத்தில் ‘குடும்பு’ என்று சொல்லியிருக்கிறார்கள். தற்போது ஊர் ஸபைகளில் ஒரு வார்டுக்கு ஒரு மெம்பர் என்று தேர்ந்தெடுப்பதைப் போலவே அப்போதும் குடும்புக்கு ஒருவர் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். க்ராமத்தை இப்படிப்பட்ட முப்பது குடும்புகளாகப் பிரித்து முப்பது மெம்பர்கள் கொண்ட ஸபையை அமைத்திருக்கிறார்கள்.
மேலே சொன்னவாறு ஜனங்கள் ஸம்மதத்தைப் பெற்ற எவரானாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்க அப்போது வகை செய்தார்கள். இது ஜனநாயக அம்சம்தானே? ஜாதியை வைத்தோ, பாரம்பர்யமாகவோ இல்லாமல், அரசன் அல்லது ஒரு அதிகார ஸ்தானத்தின் அப்பாயின்ட்மென்ட் அல்லது நாமிநேஷன் என்றும் இல்லாமல் ஊர் ஸபை மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களென்றால் அது ஜனநாயக தத்வத்தைச் சேர்ந்ததுதான்.
எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்ற ‘வைடலா’ன விஷயத்தை இப்போது பார்த்துவிடலாம். ‘ராஜாங்க நியமனமும் இல்லை, ஜனங்களில் அனைவருமோ தகுதி பெற்ற சில பேரோ வோட் போட்டுத் தேர்ந்தெடுக்கும் முறையும் இல்லை’ என்று மட்டும் சொல்லி ரொம்ப நேரம் உங்களைக் காக்க வைத்துவிட்டேன்.
அப்படியானால் அது என்ன முறை?
மேலே சொன்னபடி ஒவ்வொரு குடும்பிலும் ஜனங்கள் மதிப்பு வைத்திருக்கிற பெரிய மனிதர்கள் யாரென்பது எல்லோருக்கும் தெரிந்துதானே இருக்கும்? இவர்கள் சாஸனத்தில் சொன்னபடி எல்லா யோக்யதாம்சங்களும் பெற்றிருக்கிறார்களா, அதில் டிஸ்க்வாலிஃபை பண்ணுவதாக உள்ள எந்த அம்சமும் இல்லாதவர்களாக இருக்கிறார்களா என்று பரிசீலித்துப் பார்த்து, இந்தத் தகுதிகள் பெற்றிருக்கிற எல்லாரையும் அபேக்ஷகர்கள் என்று வைத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட அபேக்ஷகர்களுக்குள்தான் ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ப்ரதிநிதியைத் தேர்ந்தெடுக்கச் செய்தார்கள்.