நிர்வாஹப் பிரிவுகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஊர்ஸபை நிர்வாஹம் பல இலாகாக்களாக – ‘வாரியம்’ என்ற கமிட்டி அல்லது போர்டுகளாக – பிரிக்கப்பட்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது அங்கத்தினர்கள் இந்த வாரியங்களில் பொறுப்பாளர்களாகப் போடப்பட்டனர். ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஒரு வாரியத்தில் ஸ்தானமிருக்கும் அதாவது இந்த வாரியங்களின் மொத்த ஸ்தானங்களும் ஸரியாக முப்பதே. இதில் பன்னிரண்டு ஸ்தானங்கள் எல்லாக் காரியங்களையும் மேற்பார்த்து நிர்வஹித்த ஜெனரல் அட்மினிஸ்ட்ரேஷனான ‘ஸம்வத்ஸர வாரிய’த்துக்குப் போயிற்று. ‘தோட்ட வாரியம்’ என்பதாக நிலபுலன், தோப்பு துரவுகளை கவனிப்பதற்குப் பன்னிரண்டு ஸ்தானம். ‘ஏரி வாரியம்’ என்பதாக ஊரின் நீர்ப்பாசனத்தை கவனிக்கும் கமிட்டியில் ஆறு ஸ்தானங்கள்.

முப்பது மெம்பர்களில் வயஸு, அநுபவம், படிப்பு எல்லாவற்றிலும் முதிர்ச்சி கண்ட பன்னிரண்டு பேர் ஸத்வத்ஸர வாரியத்தில் ஸ்தானம் கொடுக்கப்படுவார்கள். உடம்பால் ஓடி ஆடக்கூடிய மத்யம வயஸினர் மற்ற இரண்டு வாரியங்களில் இடம்பெறுவார்கள்.

இதுதவிர பொன்வாரியம், பஞ்சவார வாரியம் என்று தலைக்கு ஆறு மெம்பர்களைக் கொண்ட இரண்டு கமிட்டிகள் இருந்திருக்கின்றன. இவற்றுக்கான மெம்பர்களும் முன்னே சொன்னதுபோலவே முப்பது குடும்புகளுக்கும் குடவோலைத் தேர்தல் நடத்தித்தான் எலெக்ட் செய்யப்பட்டார்கள். முதலில் முப்பது பேரை எலெக்ட் செய்தபின் அந்த முப்பதிலிருந்து இந்த இரண்டு வாரியங்களுக்குமான பன்னிரண்டு பேர் ஸெலக்ட் செய்யப்பட்டனர்.

முற்கால ஏற்பாட்டில் பண்ணைக்காரன் தன் பங்கில் ஐந்தில் ஒரு பங்கை ராஜாங்கத்துக்கு வரியாய்க் கொடுக்க வேண்டும். பணமாக இல்லாமல் தான்யமாகத்தான். அதனால் land revenue -வுக்கு பஞ்சவாரம் என்று பெயர்.

தோட்டவாரியம் என்பது விளைச்சல், விதை ஸப்ளை முதலான விஷயங்களை – அதாவது நேரே தான்ய உற்பத்திக்கு ஸம்பந்தப்பட்ட விஷயங்களை – கவனித்துக்கொள்ள, அதன் பஞ்சவார வசூல் குறித்தவற்றைப் பஞ்சவார வாரியம் கவனித்துக்கொண்டது. நில வரி, வியாபார வரி, சுங்கம் முதலானவற்றின் வசூல் ராஜாங்க அதிகாரிகளின் பொறுப்பிலிருந்தாலும். அது விஷயமாக ஜனங்களின் அபிப்ராயம். குற்றங்குறைகளை எடுத்துச் சொல்லவும், இது போன்ற மற்ற ஸமாசாரங்களை கவனிக்கவுமே க்ராம மஹாஸபையும் பஞ்சவார, பொன் வாரியம் வைத்திருந்தது இதெல்லாம் நம்முடைய ஊஹத்தில் தெரிவது. சாஸனத்தில் உடைத்துச் சொல்லியதல்ல.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'சந்திர ஸ¨ரியர் உள்ளவரை'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  புதுக்கதையும் பழங்கதையும்
Next