கவலைக்குரிய அம்சங்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

புதிய முறையில், நமக்குத் தெரியவரும் அநேக அம்சங்கள் கவலை உண்டாக்குவனவாகவே உள்ளன. மக்களால் மக்களைக்கொண்டு மக்களுக்காக அமைக்கப்பட்ட மக்கள் ஸர்க்கார் of the people, by the people, for the people- என்றெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்களே – அதெல்லாம் விஷயம் தெரியாத மக்களால். விஷயம் தெரியாத (ஆனால் ஸ்வய நலன் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த ஸர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்றுகூட பயப்படும்படி இருக்கிறது.

புதிதாக ஸ்வதந்த்ரம் வந்துள்ளபோதுதான் கட்டுப்பாடு ரொம்பவும் அவச்யம். அந்த ஸமயம் பார்த்து இப்படிக் கட்டவிழ்த்து விடுகிறார்களே, என்னென்ன விபரீதம் வருமோ என்றிருக்கிறது. வ்யாதி குணமான பிற்பாடு ஓய்வு எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் புது ரத்தம் பிடித்துத் தேறவேண்டிய (convalescence) பீரியடில்தான் ரொம்பவும் ஜாக்ரதையாயும், கடும் பத்தியமாயும் இருக்க வேண்டும். அப்படி, பிரிட்டிஷ் ஆட்சி என்ற வ்யாதி போய் ஸ்வதந்த்ர சக்தியில் ஆரோக்யம் பெறுவதற்கு முற்பட்டதான நடுக்கட்டத்தில் இருக்கிறோம். இப்போது கொஞ்சம் ஏறுமாறாக மக்களின் புத்தியோ மக்கள் ப்ரதிநிதிகளின் புத்தியோ போக இடங்கொடுத்தாலும், எழுத்தளவில் கிடைத்த ஸ்வதந்த்ரம் வாஸ்தவமாக நம்மை வளர்க்கிற ஜீவசக்தியுள்ள ஸ்வதந்த்ரமாக ஆகாமல் போய்விடும். இப்போதோ “கொஞ்சம் ஏறுமாறு” என்ன, “ரொம்பத் தாறுமாறாகவே” போகக் கூடுமோ என்று பயப்படும்படியாக, வயஸு வந்த எவரானாலும் வயஸு வந்த எவருக்கானாலும்  நிர்வாஹத்தில் பொறுப்புத் தந்து அதிகார ஸ்தானத்தில் உட்கார்த்தி வைத்து விடலாம், படிப்பு – ஸொத்து – அநுபவம் – நடத்தை முதலான எந்தத் தகுதிக்கும் அவச்யமில்லை என்று பண்ணிவருகிறார்கள்.

இதில் ப்ரத்யக்ஷமாகத் தெரிகிற ஒரு தீமை இப் புது ஜனநாயகத் தேர்தல்கள் ஏற்படுவதற்கு முன், நாட்டில் சில உத்யோகஸ்தர்களிடம் மாத்திரம் லஞ்சம் வாங்கும் பழக்கமும், பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் வழக்கமும் இருந்தன. வோட்டும் எலெக்ஷனும் ஆரம்பித்த பிற்பாடோ, லஞ்சமென்பதையே கேள்விப்பட்டிராத பட்டிக்காட்டில் கூட ஸர்வ ஜனங்களும் லஞ்சம் வாங்குவதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. விஷயம் தெரிந்த படிப்பாளிகளை ஏமாற்றுவதைவிடப் படிப்பறியா பாமர ஜனங்களை ஏமாற்றுவது ஸுலபம். அவர்களிடம்தான் காசாகவே துணிந்து லஞ்சம் கொடுக்கவும் அதிக இடமுண்டு. ஆனதால் அபேக்ஷகர்களும் அரசியல் கட்சிகளும் செய்யும் ஏமாற்றும் பொய்யும் அதிகமாகும். இது ஒரு பக்கம் இருக்க, அந்தப் பொது ஜனங்களுமே அபேக்ஷகர்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் பலவிதமான ஆதாயங்களைப் பெறுவதற்காக ஏமாற்றுவதற்கும் பொய் சொல்வதற்கும் ஊக்கம் பெற்றுவிடுவார்கள். இப்படிப்பட்ட ஜனநாயகத்தால் நமக்கு க்ஷேமமா, க்ஷாமமா?

“எந்தத் தகுதியும் வைக்காததால் இதுவே நிஜமாக ஸர்வ ஜனங்களையும் (தேர்தலில்) நிறுத்திவைக்க உதவும் உண்மையான ஜனநாயக முறை” என்கிறார்கள். ஆனால் இதில் இப்படி ஏகத்தாறாகப் பணம் செலவழிக்கும்படிப் பண்ணியிருப்பதால், நடைமுறையில் பணம் கொழுத்தவர்களைத்தான் அதிகம் நிறுத்தி வைப்பதாக ஆகுமென்று தோன்றுகிறது. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கட்சியிலும் த்யாகம், திறமை, தூய்மை நிறைந்தவர்கள் இருந்தாலுங்கூட, அவர்களை விட்டுவிட்டு, பணபலம் படைத்தவனைத்தான் நிறுத்துவது என்று ஆனால் அப்புறம் ஜனநாயக தத்வம், நல்ல நிர்வாஹம் இரண்டுமே என்ன ஆவது?

இப்படி வாரி விட்டுச் செலவழித்தவன் அப்புறம் எலெக்ட் ஆனபின், அதை ஈடுகட்டிக்கொள்வதற்கும், மறுபடி எலெக்ஷன் வரும்போது அதில் இதே மாதிரி செலவு செய்வதற்கும் “வழி” பண்ணிக்கொள்ளப் பார்ப்பதும் இயற்கைதானே? விஸ்தாரமம் பண்ணிக்கொண்டு போகவே வேதனையாயிருக்கிறது. வாஸ்தவத்தில் வரப்போவது ஜன நாயகமோ, “தனநாயக”மா என்று பயமாயிருக்கிறது.

இதெல்லாம் போகட்டும். எலெக்ஷனுக்கு அப்புறம் ஏற்படும் ராஜாங்கம் நிஜமாகவே மக்களைக் கொண்டு மக்களால் ஆன ஜனநாயக அமைப்புத்தானா? பல அபேக்ஷகர்களின் போட்டியிலே வோட்டுகள் சிதறிப்போவதால் மொத்தத்தில் இருபத்தைந்து முப்பது சதவிதமே வோட்டுப் பெற்றவருங்கூட மெம்பராகத் தேர்வு பெற்று விடலாம். அதே போல் மொத்தம் ஒரு ஸபையின் மெம்பர்ஷிப் ஐநூறு என்றால், பல கட்சிகளில் அந்த ஐநூறு ஸ்தானங்கள் பங்கீடாவதில் பாதிக்கு ரொம்பக் குறைவாக நூற்றைம்பது, இருநூறு ஸீட்டுக்குள்ளே பெற்ற கட்சியுங்கூட “இருப்பதற்குள் பெரிய கட்சி” என்ற முறையில் ஸர்க்கார் அமைக்கக்கூடிய சான்ஸ் இருக்கிறது. ஸர்க்கார் அமைக்கும் கட்சிக்கு ஐநூறு ஸீட்டில் இருநூறு ஸீட்தான், சராசரியில் ஒவ்வொரு ஸீட்டிலும் மொத்த வோட்டில் அதுபெற்றது நாற்பது சதவிதம்தான் என்று வைத்துக்கொண்டால் நாற்பது கோடி பேர் உள்ள நம் தேசத்தில் ஏதோ பத்து கோடி பேரின் ஆதரவை மட்டுமே பெற்றாலும் போதும், அத்தனை ஜனங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸர்க்காரைப்போல் அது தன்னைக் காட்டிக் கொண்டுவிட முடியுமென்று தெரிகிறது. அதாவது நான் ஸரியாகக் கணக்குப் போட்டுச் சொல்லாவிட்டாலும் ஜனத்தொகையில் வோட்டுப் போடாமலே இருப்பவர்கள் போக, போட்டவர்களிலும் அரைவாசிக்கு ரொம்பக் குறைவான ஆதரவை மட்டுமே பெற்ற கட்சிகூட அதிகாரத்தைப் பெற்றுவிடமுடியும்1. தேசம் அல்லது மாகாணம் முழுதையும் எடுத்துக்கொண்டால் அவற்றிலே ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஆதரவுக்கும், மத்ய – மாகாண சட்ட ஸபைகளில் அந்த கட்சி ஒவ்வொன்றும் ஜயிக்கிற ஸீட்டுக்கும் “ப்ரபோர்ஷன்” (விகிதாசாரம்) ஒத்துப்போகாமலே இருப்பதற்கு இடமிருக்கிறது. இது எப்படி ஜனநாயகம்?

இந்த அம்சத்தைக் கவனித்துத்தான் ஒரு வோட்டர் தன் ஆதரவைப் பெற்ற ஒரே ஒரு அபேக்ஷகருக்கு மட்டும் வோட் போடுவது என்றில்லாமல், ரொம்பவும் ஆதரவு பெற்றவரின் பெயரில் ஆரம்பித்து மற்றவர்கள் பேரையும் தன் preference -படி வரிசை க்ரமமாகக் குறிப்பிடலாமென்றும், அதில் முதல் preference -க்கு இத்தனை மார்க் அடுத்ததுகளுக்கு இத்தனையித்தனை என்றும் வைத்துத் தேர்ந்தெடுக்கிற ஒரு முறையும் இருக்கிறது2. இதை Proportional Representation -“விகிதாசார ப்ரதிநிதித்வம்” – என்கிறார்கள். ஆனால் இது ‘கௌன்ஸில்”கள் (மேல் ஸபைகள்) மாதிரி சின்ன அளவில்தான் முடியும், ஊர் ஸபை, மாகாண – மத்ய சட்டஸபைகளின் ஜெனரல் எலெக்ஷனில் முடியாது என்று சொல்கிறார்கள். நடைமுறைக்கு ச்ரமமானது என்கிறார்கள். அவர்கள் சொல்வது வாஸ்தவமாயும் இருக்கலாம்.

ஸர்வ ஜனங்களும் கலந்துகொள்ளச் செய்யும் தேர்தல் என்ற ஒரு காரணத்தால் மட்டும் ஒரு நாட்டில் உண்மையான ஜனநாயகம் ஏற்பட்டுவிட்து என்று சொல்லிவிடமுடியாது என்பதற்காகத்தான் இந்த வீதாசாரக் கணக்கெல்லாம் சொல்கிறேன். உண்மை ஜனநாயகமாக இன்றி, போலி ஜனநாயகம் பகட்டுச் செய்துகொண்டு உண்மை போலத் தோன்றவும் இதிலே இடமிருக்கிறது என்று காட்ட வந்தேன்.


1 ஸ்ரீசரணர்கள் தரும் அளவுகளின்படி சரியாகக் கணக்கிட்டால் கால் பங்குக்கும் குறைவான 4/25 மொத்த வாக்குகளைப் பெற்ற கட்சியும் அரசாங்கம் அமைக்க முடியும்.

2 Single transferable vote முறை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is புதுக்கதையும் பழங்கதையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பக்குவம் செய்தபின் பொறுப்புத் தருக !
Next