எந்தக் கக்ஷியின் கையில் அதிகப் பணம் இருக்கிறதோ, பொய்யையோ மெய்யையோ பெரிசுபடுத்தி ப்ரசாரம் செய்து ஜனங்களின் மனஸை வசியப்படுத்தும் ப்ரபலப் பத்திரிகைகள் இருக்கின்றனவோ, ‘பேச்சாளர்’கள் என்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, எந்தக் கக்ஷியிடம் குழந்தைப் பிராயத்திலேயே மனஸில் கல்வி என்ற அம்ருதத்துக்குப் பதில் அரசியல் விஷத்தை ஏற்றிவிடுகிற வித்யாசாலைகளில் அதிக ஆதிக்யம் இருக்கிறதோ, அதுவே க்ரமமற்ற வழிகளால் தன்னைப் பெரிய கக்ஷியாக மாற்றிக் கொள்கிற நிறைய இடம் இருக்கும்போது ஜனநாயகம் என்பது வெறும் போலியாகவே ஆகிவிடவும் கூடும். அந்த ஸ்திதிக்குத்தான் நாம் போகிறோமோ, அந்த ஸ்திதிக்குத்தான் நம்மவரே நம்மைக் கொண்டுவந்து விட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
நல்ல எண்ணத்தில்தான் இப்படிச் செய்ய முனைந்திருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் நல்ல எண்ணம் என்பது யுக்தமான நடைமுறைக்கு ஒத்துவராது என்றால் அதனால் என்ன ப்ரயோஜனம்? நல்ல எண்ணம் கொண்டவர்களானாலும், அவர்களுக்காகவே தாங்கள் செய்வதன் விளைவுகள் புரியாமல் போனாலும், இப்போது பல அறிவாளிகள் – அரசியல் நிர்ணய ஸபை அக்ராஸனரும் கூட – நடைமுறையில் இது இப்படியிப்படியான தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எடுத்துக்காட்டிய பிறகும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோமென்றால் என்ன பண்ணுவது?
ஒரு வ்யாதிக்காரனை நன்றாகத் தேற்றிவிட்டு அப்புறந்தான் அவனிடம் வீட்டுப் பொறுப்பைத் தரலாம். ஒரு குழந்தையை அறிவு, மனஸ், தேஹபலம் எல்லாவற்றிலும் நன்றாக வளர்த்து அப்புறந்தான் அதனிடம் பொறுப்புத் தரலாம். ப்ரியம் இருக்கிறது என்பதற்காக ஒரு நோயாளியிடமோ, குழந்தையிடமோ வீட்டுப் பொறுப்புக்களைக் கொடுப்பார்களா? சாப்பாட்டு விஷயங்கூட இப்படித்தான். நோயாளியிடம் ப்ரியம், குழந்தையிடம் ப்ரியம் என்பதற்காக அடை, தோசை, பக்ஷணம் என்று திணிப்பார்களா? நம்முடைய பொதுஜனங்களில் பெருவாரியானவர்கள் அரசியல் ஞானத்தில் குழந்தைகளின் ஸ்தானத்திலிருப்பவர்கள். வெள்ளைக்கார ஆட்சி அறிவு ரீதியில் அவர்களை பலஹீனர்களாக, நோயாளிகள் மாதிரி ஆக்கி வைத்திருக்கிறது. இந்த ஸ்திதியில் அவர்களுக்கு தேச நிர்வாஹத்தில் பொறுப்புத் தருவோம். ஜனநாயக விருந்தை வாயாலும் மூக்காலும் திணிப்போம் என்றால் என்ன பண்ணுவது? முதலில் அவர்களை அறிவு ரீதியில் ஆரோக்யசாலிகளாகவும், குழந்தைதனம் விலகி பக்வ ஸ்திதி பெற்றவர்களாகவும் உருவாக்க வேண்டியதே ஸ்வதந்த்ர இந்தியாவின் தலைவர்களுடைய பணி, கடமை. சில ஆண்டுகளில் இம்மாதிரி நம் மக்களின் அறிவுநிலையை மேம்படுத்திய பின்னர்தான் இப்போது வகுக்கப்படுவது போன்ற ஸர்வ ஜன வோட்டெடுப்பு முறையைப் பற்றிச் சிந்தனை செய்யலாம் என்றே தோன்றுகிறது.
ஆனால் ஒரே பிடிவாதமாக இருப்பவர்களிடம் இதையெல்லாம் சொல்லி எப்படி எடுபடச் செய்வது என்று புரியவில்லை. அவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் இப்போது நாம் இருக்கிற ஸ்திதியிலிருந்து மீளப்போகிறோமா என்று இருக்கிறது. மீள்வதா, இன்னம் மோசமாக மாட்டிக்கொண்டு, லஞ்சமும் பொய்யும் கட்சிப் பிரதி கட்சிகளும் வளர்ந்து தேசம் வீணாகப் போகிறதா என்று பயப்படும்படி ஸூசனைகள் காணப்படுகின்றன. ஒருபக்கம் ஜாதி மதமில்லாத ஸமதர்ம ஸமுதாயம் என்று சொன்னாலும், நடைமுறையில் போகிறபோக்கைப் பார்த்தால் ஜாதிக் கக்ஷி, ஊர்க் கக்ஷி, தெருக்கக்ஷி, ஒவ்வொரு கக்ஷிக்குள்ளேயும் உள்கக்ஷிகள் என்றெல்லாம் ஏற்பட்டு, பணத்தாலும் மோச ப்ரசாரத்தாலும் ஜனங்கள் கக்ஷிக்குக் கக்ஷி மாறுவதாகவும், அப்புறம் கக்ஷிக்காரர்களே ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதாகவும்* – இப்படியெல்லாம் எந்த லக்ஷ்யமும் இல்லாமல் ஸ்வய நலனுக்காகவே அநேகம் பண்ணுவதற்கு இப்போது விதை விதைத்தாச்சோ என்றே தோன்றுகிறது.
‘ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் மட்டும் கட்சி அடிப்படை கூடாது. ஏதோ ஒரு ஊருக்கான ஸெளகர்யங்களை கவனித்துப் பண்ணித் தருவதில் கட்சி அரசியலுக்கு இடமில்லாததால் இதைக் கட்சி ஸம்பந்தமில்லாமலே செய்ய வேண்டும்’ என்று சொல்லி, அப்படியே செய்கிற மாதிரி வெளியிலே காட்டினாலும், இதிலும் பார்ட்டி-பாலிடிக்ஸ் நன்றாகப் புரையோடித்தானிருக்கிறது என்கிறார்கள். ‘நகரஸபை, க்ராமப் பஞ்சாயத்து என்ன? வீட்டுக்குள்ளேயே கட்சிகள் வந்துவிட்டது’ என்று ஒருத்தர் வ்யஸனத்தையே வேடிக்கை மாதிரிச் சொல்லியிருக்கிறார். தேசிய, மாகாண அடிப்படைகளில் கட்சி அரசியலைப் பெரிசாக தூபம் போட்டுக் கிளப்பிவிட்டு, அப்புறம் அந்தப் புகை உள்ளூர் நிர்வாஹத்தில் வராது என்றால் எப்படி முடியும்?
* அரசியல்வாதிகளின் கட்சி மாறலைப்பற்றி ஸ்ரீசரணர்கள் கூறியது சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்பது ஆச்சர்யமூட்டுகிறது!