குறையும், குறைக்கு ஸமாதானமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த ஏற்பாட்டிலே ஒரு குறை தோன்றலாம். எல்லா அபேக்ஷகரும் ஜன ஆதரவு பெற்றவர்கள்தான் என்றாலும் இப்படிப்பட்ட பல அபேக்ஷகர்களில் மற்றவர்களைவிட அதிக ஆதரவு பெற்றவனே எலெக்ட் ஆகவேண்டுமென்று இல்லாமல் அவனைவிடக் குறைச்சல் ஆதரவு பெற்றவன் எலெக்ட் ஆகவும் இடம் இருந்திருக்கிறதே என்ற குறை தோன்றலாம். குழந்தை ஓலையை யெடுப்பதில் இப்படி நடக்க இடமுண்டுதான். ஆனால் தற்போதுங்கூட மெஜாரிட்டி வோட்டர்களின் ஆதரவப் பெறாமல், முப்பது முப்பத்தைந்து பெர்ஸென்ட் வோட் வாங்கினவன் தேர்தல் பெற இடமிருக்கத்தானே செய்கிறது? எதிலுமே இப்படி ஏதாவது ‘வீக் பாணின்ட்’ இராமல் போகாது. ஆனால் இப்போது எலெக்ட் ஆகிறவர்களில் மெஜாரிட்டி பெற்றே ஜயித்தவர்கூட உத்தமராகத்தான் இருக்கவேண்டும் என்பதற்குத் தேர்தல் விதிகளில் எந்த உத்தரவாதமும் இல்லாமலிருக்க, அப்போதோ ஓலைகளில் பெயர் போடப்பட்ட எல்லோரும் உத்தமர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானமாக விதியிருந்ததை கவனிக்கவேண்டும். எனவே பாபுலாரிடியில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், இந்த அபேக்ஷகருமே நிர்வாஹத் திறமையும் தூய்மையும் உள்ள உத்தமமான நபர்தான் என்பதால் இந்த அம்சம் ஒரு பெரிய குறையாக நினைக்கப்படுவதற்கில்லை.

மத்யஸ்தர்களையும் நம்பிமார்களையும் கொண்டு ஒரு குடும்பின் யோக்யதாம்சம் பெற்ற அபேக்ஷகர்களுக்குள் யார் பாபுலாரிடியில் முதல்வர் என்று அறிந்து, அப்பபடிப்பட்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கு தாராளமாக வசதி இருந்தும், வேண்டுமென்றேதான் அப்படிச் செய்யவில்லையோ என்றுகூடத் தோன்றுகிறது. இந்த முறையில் விளைவான மெஜாரிட்டி – மைனாரிடி மனோபேதமும் த்வேஷமும் ஏற்பட இடம் கொடாமல், எல்லோருக்கும் பொதுவாக ஏகோபித்த உணர்ச்சியோடு கார்யங்கள் நடக்கவேண்டுமென்ற உசந்த அபிப்ராய்ததில்தான் ஜன ஆதரவின் ஏற்ற இறக்கங்களை கணிக்காமல் குழந்தையை விட்டு “வோட்டெடுப்பு” நடத்தியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

நவீன கணித சாஸ்த்ரத்திலும் திட்டவட்டமாக இல்லாமல் ஒரு உத்தேசத்தில் செய்வதே ஸரியானதாகவும் அமைந்துவிடுவதாக ஒன்று சொல்கிறார்கள். இதை Probability test -ஹேஸ்ய பரீக்ஷை என்கிறார்கள். பகவானின் உத்தேசந்தான் குழந்தை மூலம் வருகிறது என்று மனஸார நம்பி ஒரு தேர்தலை நடத்துகிறபோது, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் அதிகமான பஹுஜன ஆதரவு பெற்றவராயிருப்பார் என்ற probability (ஸாத்யக்கூறு) பலமாகவே இருப்பதாக கொள்ளலாம்.

எத்தனை நல்ல ஏற்பாடானாலும் எதிலேயும் ஏதாவது குறை இல்லாமலிருக்காது. இதெல்லாமே முடிவிலே மாயா ப்ரப்ஞ்ச ஸமாசாரங்கள் தானே? அதனாலே, எங்கேயாவது கொஞ்சம் அபூர்ணமாக, மூளியாக, ‘ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை’ என்னும்படியாகத்தான் இந்த லோக நடப்பு எதுவுமே இருக்கும். அப்படி இந்த (உத்தரமேரூர்) தேர்தல் முறையிலும் சில இருக்கலாம்.

உதாரணமாக எழுபது எண்பது (வயஸு) க்கு மேலே போயும் நல்ல கூரறிவோடு ஆலோசனை சொல்லக் கூடிய சிலரை நாம் தற்போது பார்க்கிறோமே, இப்படிப்பட்டவர்களை ஏஜ் – லிமிட் விதயினால் ஒதுக்கி வைப்பது ஸரியா என்று கேட்கலாம்.

இதே மாதிரி ஒரு மெம்பரின் ஆத்ம பந்துக்களுக்கு இடமில்லை என்பதைப் பார்க்கும்போது, “நிரம்ப யோக்யதாம்சங்களோடு மோதிலால் நேரு (வும்) ஜவாஹர்லால் நேரு (வும்) இருந்திருக்கிறார்களே அப்பா – பிள்ளை என்ற ஒரே காரணத்துக்காக இவர்கள் ஒரே ஸமயத்திலோ அடுத்தடுத்தோ ஸபையில் அங்கம் வஹிக்கப் படாது என்று பண்ணலாமா?” என்று தோன்றலாம். இப்படியே விட்டல்பாய் படேல், வல்லபபாய் படேல் (என்ற ஸஹோதரர்கள்) இருந்திருக்கிறார்கள். இப்போது “முதலியார் ப்ரதர்ஸ்” (ஏ. ராமஸ்வாமி முதலியாரும், ஏ. லக்ஷ்மணஸ்வாமி முதலியாரும்) இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உறவுமுறை கொண்டு, தேச நலனுக்கு மாறாக ஸ்வயநலமாக எதுவும் பண்ணிக்கொள்வார்கள் என்று நினைப்பது ஸரியில்லைதான்.

ஆனாலும் உள்ளூர் ஸபைக்கும், மத்ய – மாகாண சட்ட ஸபைகளுக்கும் உள்ள வித்யாஸத்தையும் நாம் மறப்பதற்கில்லை. உள்ளூரில் மெம்பர்கள் எல்லாரும் நன்றாகத் தெரிந்தவர்களாயிருப்பதாலும், அது ‘ஸ்மால் – ஸ்கேல்’ (சிறிய அளவு) நிர்வாஹமானதாலும் எல்லாரையும் ஸரிகட்டி அவர்கள் வாயையும் கட்டி, அநேக தப்பு தண்டாக்களை மூடி மறைத்துவிட முடியும். பெரிய பரப்பளவைப் பொறுத்ததாகவும், குற்றம் கண்டுபிடிப்பதற்கே கண்குத்திப் பாம்பாகக் காத்துக்கொண்டிருக்கும் அநேக எதிர்க்கட்சிக்காரர்களைக் கொண்டதாகவும் உள்ள சட்ட ஸபைகளில் இத்தனை ஸுலபமாகத் தப்புப் பண்ணிவிட்டு அதை ஸமாளித்து விடமுடியும் என்று சொல்லமுடியாது. அதனாலேதான் உள்ளூர் நிர்வாஹத்துக்கு விதிகள் பண்ணும்போது கொஞ்சம் over-careful ஆகவே (மிகையான உஷாரோடேயே) பண்ணியிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டு, அதைப் பாராட்டத்தான் வேண்டும். ‘சில நல்லதுகள் நடக்க முடியாமல் போனாலும் போகட்டும், ஆனால் ஒரு தப்புகூட நடப்பதற்கு இடம் தந்துவிடப்படாது’ என்பதாக நிர்வாஹத் தூய்மையில் அப்படியரு விசேஷ ஈடுபாடு காட்டி, அதற்காக நல்லது சிலதை த்யாகமும் பண்ணினார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.

குடும்ப உறவு தேச க்ஷேமத்துக்கு மாறாகவும் ஒருத்தரைச் செய்யத் தூண்டக்கூடும் என்பது நூறில், ஆயிரத்தில் ஒருத்தரைத் தவிர மற்றவர்களுக்குப் பொருந்தக்கூடியதே. இதைக் கவனித்தால் மேற்சொன்ன ஷரத்து நேர்மையான ஆட்சிக்கு முதுகெலும்பு போல தெரிகிறது. ஆனாலும் விதிவிலக்கான பெரிய யோக்யசாலிகளும் இருக்கிறார்களே என்றும் தெரிகிறது.

ஒன்று வேண்டுமானால் யோசித்துப் பார்க்கலாம். எழுபதைத் தாண்டியவர்களைக் கொண்டு அட்வைஸரி கௌன்ஸில் அமைக்கலாமென்றாற்போல, மொத்த நிர்வாஹத்துக்குமே இன்னொன்று அமைக்கலாம். நேராக மந்த்ரி பதவி, அதிகாரிகள் மேல் கட்டுப்பாடு, தன் துறை ஸம்பந்தப்பட்ட ஜனங்களுடன் நேர் தொடர்பு – என்று இல்லாமல், ஆனாலும் ராஜாங்கம் ரொம்பவும் மதிப்புத் தந்து கவனித்து, அமல் நடத்துகிற அளவுக்குச் சக்தியுள்ள ஆலோசனைகள் தரும் ஒரு சக்திவாய்ந்த கௌன்ஸில் அமைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அப்பா – பிள்ளை, அண்ணா – தம்பி, அகமுடையான் – பெண்டாட்டி என்று உறவுக்காரர்கள் இருந்தால் இவர்களில் ஒருத்தர் மட்டுமே நேராக அதிகார அதாரிடி ஸ்தானத்துக்கு வரலாமென்றும், மற்றவர் ஆலோசனை கௌன்ஸிலில் இடம் பெறலாமென்றும் ஏற்பாடு பண்ணலாம்.

ஏதோ, இப்போது என் மனஸிலே தோன்றுவதைச் சொன்னேன். நல்ல அரசியல் அறிவு உள்ளவர்கள் ஆற அமர யோசித்து முடிவு காணவேண்டிய விஷயம்.

சோழர்காலத்தில், உறவுப் பாசம் ஊர்நலனை பாதிக்க விடப்படாது என்பதை கவனித்ததே நமக்கு முக்யம்.

இப்படி அவர்களுடைய உசந்த உத்தேசத்தை வைத்து விதிகளைப் பார்த்தால் குறைகள் தெரியாது. அவற்றை நாம் இப்போது அப்படியே adopt பண்ணி (எடுத்துக்கொண்டு) நடக்கத்தான் வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனாலும் அவற்றிலிருக்கிற அடிப்படை உண்மைகளை நாம் நிச்சயம் கவனித்து, அவற்றை ஸமய ஸந்தர்ப்பங்களைப் பொறுத்தும், தேச – கால வர்த்தமானங்களை ஒட்டியும் எப்படிக் கொஞ்சம் மாற்றி adopt பண்ணிக் கொள்ளலாமோ அப்படிப் பண்ணினாலே நாட்டுக்கு நல்லது என்று காட்டத்தான் இத்தனை சொல்வதும்.

அப்படியே எங்கேயாவது ஏதாவது கொஞ்சம் குறை இருந்தாலும் மொத்தத்தில் உத்தரமேரூர் சாஸனத்தை நினைக்கிறபோது, அந்தத் தேர்தல் முறையால் தேசத்துக்கு எத்தனை லஞ்சமும் பொய்யும் கக்ஷிவாதமும் கக்ஷிப் பத்திரிகைகளின் ஸாஹஸங்களும் – முடிவிலே ஏமாற்றமும் ஹிம்ஸையும் – மிச்சம் என்பதை எண்ணி த்ருப்தியே ஏற்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பழைய தேர்தல் தரும் தேறுதல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ராமராஜ்யம்
Next