பழைய தேர்தல் தரும் தேறுதல் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த ஸமயத்தில் பழைய நாளில் பல யோக்யதாம்சங்களை – முக்யமாக தார்மிகமான போக்கை, அர்த்த சுத்தத்தை, மனத் தூய்மையை வைத்து நடந்த தேர்தலைப் பற்றி நினைப்பதே கொஞ்சம் தேறுதலாக இருக்கிறது. குறிப்பாக கட்சிகள் பலதினுஸில் பணம் பண்ணி அந்த பலத்தில் அபேக்ஷகரை நிறுத்தி வைப்பது, அவர் கட்சியிடம் வாங்கிக் கொண்ட பணத்திலேயே ஏப்பம் விடுவது, அல்லது எப்படியும் ஜயித்தாக வேண்டும் என்பதில் அதற்குமேல் தானும் ஸொந்தச் செலவு ஏகத்தாறாகச் செய்வது (கட்சிக்கே பணம் கொடுத்துத் தங்களை நிறுத்தச்செய்பவர்களும் இருப்பார்கள்) , பணத்தை ஸரியான வழியிலும் தப்பு வழியிலும் செலவழித்து வோட்டுப் பிடிப்பது, அப்புறம் தான் செலவழித்ததற்கு வட்டியும் முதலுமாகத் தன்னுடைய பதவிக் காலத்துக்குள் ஸம்பாதிப்பது, இப்படி தான் கெட்டது போதாதென்று ஜனங்களையும் ஊரையும் லஞ்சத்தால் கெடுப்பது, ஊருக்கு ஊர் எப்போது பார்த்தாலும் கட்சி அரசியலில் சக்தி விரயமாவது – என்கிற அதர்மப்பட்டாளத்தில் எதுவும் இல்லாத ஒரு முறை அப்போது அநுஸரிக்கப்பட்டது என்பதை அறிய ஆறுதலாக இருக்கிறது. கட்சி, பெர்ஸனாலிடி என்ற வாடைகளே இல்லாமல், இந்தக் குறுகிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தர்மம். நீதி, திறமை, தூய்மை என்கிற பெரிய தத்வங்களை மையமாகக் கொண்டே ஒரு தேர்தல்முறை நம்மிடம் இருந்திருக்கிறது என்று நினைக்கவே பெருமையாயிருக்கிறது.

பெர்ஸனாலிடி என்று வந்துவிட்டால் அப்புறம் அவனவனுக்கும் விருப்பு – வெறுப்பு என்று வரத்தான் செய்யும். காரணம் தெரிந்ததும், காரணம் தெரியாததுமாக அநேக ஸ்வய அபிமானங்கள், த்வேஷங்கள், bias -கள் ஏற்படத்தான் செய்யும். சிலா சாஸனத் தேர்தல் முறையில் இந்த பெர்ஸனாலிடிக்கே இடமில்லாதது ரொம்பவும் விசேஷம். அபேக்ஷகன் என்ற அக்ஷதை போட்டுக்கொண்டு நிற்கிறவனும் இல்லை. அதே போல வோட்டுப் போடுகிறவன் என்றும் எவனும் இல்லை. இப்படியிருக்கும் போதுதான் கொஞ்சங்கூட நடுநிலைமை தவறாத நியாய

வழியில் ஒரு தேர்தல் முடிவு அமைய முடியும். அவனை இவன் வால் பிடிப்பது, இவனுக்கு அவன் ‘இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன்’ என்று ஆசை காட்டி, பணத்தைக் காட்டி வோட் பிடிப்பது ஆகியவற்றுக்கு இடமே இல்லையல்லவா?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பக்குவம் செய்தபின் பொறுப்புத் தருக !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குறையும், குறைக்கு ஸமாதானமும்
Next