தேவாஸுரர் யார்? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“ஒரு காலத்தில் தேவர்களும் அஸுரர்களும் ஒருத்தரோடொருத்தர் சண்டை போட்டுக்கொண்டார்கள்” என்று சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது1. இதற்கு நம்முடைய ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது ‘இங்கே தேவர்கள் என்று சொல்லியிருப்பது கர்மாநுஷ்டானத்தால் பரிசுத்தி செய்யப்பட்ட இந்த்ரிய வ்ருத்திகளை (புலன்களின் ஓட்டங்களை) த்தான். அப்படியே அஸுரர்கள் என்பது வெறும் விஷய போகங்களுடன் (சிற்றின்பங்களுடன்) ஸம்பந்தப்பட்ட இந்த்ரிய வ்ருத்திகளைத்தான்’ என்று சொல்கிறார். அப்புறம் இன்னும் ஸ்பஷ்டமாகவே, “இங்கே கூறப்படும் தேவாஸுர யுத்தம் அநாதிகாலமாக ஸமஸ்த ப்ராணிகளில் ஒரு ஜீவன் விடாமல் எல்லாருக்குள்ளேயும் நடந்துகொண்டிருக்கிற போராட்டம்தான் (ஸர்வ ப்ராணிஷு ப்ரதிதேஹம் தேவாஸுர ஸங்க்ராமோ (அ) நாதிகால ப்ரவ்ருத்த:)” என்கிறார். அதாவது ஜீவனுடைய இந்த்ரியங்களை வெளி விஷயங்களில் இழுத்துக் கொண்டு போகிற போக்குகளே அஸுரர்கள் என்றும் அவற்றை உள்முகப்படுத்தும் போக்குகள் தேவர்கள் என்றும், ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இந்த இரண்டுக்குமிடையே உண்டாகும் போராட்டம்தான் இங்கே உபநிஷத் சொல்கிற தேவாஸுரப் போர் என்றும் ஆசார்யாள் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இப்படிச் சொன்னதால் அவர் இந்தக் காலத்தில், ‘புராணம் எதுவும் நிஜமாய் நடக்கவில்லை. அவையெல்லாம் உருவகக் கதைகள்தான், Symbolical தான், allegorical stories தான்’ என்று சொல்லும் கோஷ்டியைச் சேர்ந்தவரென்று நினைத்துவிடக் கூடாது. உபநிஷத்துக்களிலேயே இன்னும் பல இடங்களில் தேவாஸுரர்களைப் பற்றி வருகிறது. உதாரணமாக, கேநோபநிஷத்தில்2 பரமாத்மா தேவர்களுக்காக ஜயித்துக் கொடுத்ததாக வருகிறது. அங்கேயெல்லாம் ஆசார்யாள் தேவர்களை வெறும் உருவகமாகச் சொல்லவில்லை. ப்ரஹ்மஸூத்ரத்தில் “தேவாதி கரணம்” என்பதற்கு பாஷ்யம் பண்ணும்போது, ‘பூலோகத்தில் நாம் இருக்கிற மாதிரி தேவலோகத்தில் தேவர்கள் இருக்கிறார்கள். இந்த்ரிய ஸுகவாஸிகளான அவர்களுக்கும் அபஜயம், அதனால் கஷ்டம், அஸுயை முதலியன இருக்கின்றன. ஆனபடியால் அவர்களும் நம்மில் சிலர் மாதிரி வைராக்யமடைந்து அதன்பின் ப்ரம்ம விசாரம் செய்து ஞானத்தினால் அத்வைத முக்திபெற இடமுண்டு’ என்று ஸித்தாந்தம் செய்திருக்கிறார்.

ஆனால் வேத, உபநிஷத்துக்களில் சில இடத்தில் ஒரு தத்வத்தைச் சொல்லவும் தேவர், அஸுரர் என்று உருவகமாகக் கதை கட்டுவது உண்டு. இதை ‘அர்த்தவாதம்’ என்பார்கள். அதாவது கதைக்காகக் கதை அல்ல. தத்வார்த்தத்தைச் சொல்லவே கதை உபாயமாக்கிக் கொள்ளப்படுகிறது. மேலே சொன்ன சாந்தோக்ய கதை இந்த வகையைச் சேர்ந்ததுதான் என்பது பகவத்பாதாள் அபிப்ராயம். இங்கே ‘தேவர்’ என்பது இந்திரிய ஸுகவாஸிகளான ஒரு ஜீவ இனத்தைக் குறிக்காமல், இந்த்ரிய ஸுகத்தை விட்டு நித்ய ஸுகத்துக்கு ஜீவனைத் திருப்பிவிடும் நல்ல சக்திகளைக் குறிக்கிறது; personify செய்கிறது. கீதையிலே “தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்” என்று ஒரு அத்யாயம் இருக்கிறது. அதிலே பகவான், க்ருஷ்ண பரமாத்மா, தெய்விக குணங்கள் என்னென்ன, அஸுர குணங்கள் என்னென்னவென்று ஜாபிதா போட்ட மாதிரிக் கோ (ர்) வையாகக் கொடுத்திருக்கிறார். பயமற்ற குணம், சுத்தமான ஸாத்விக எண்ணம் என்று ஆரம்பித்து தானம், தபஸ், நேர்மை, அஹிம்ஸை, ஸத்யம், த்யாகம், சாந்தம், பிறத்தியாரிடம் கொஞ்சமும் க்ரோதம் பொறாமை த்ரோஹ சிந்தனை இல்லாமல் அவர்கள் என்ன தப்புப் பண்ணினாலும் க்ஷமித்துக் கொண்டு ஸர்வ பூதங்களிடமும் தயையோடு இருப்பது – என்றிப்படியானவற்றையெல்லாம் தைவீ ஸம்பத் என்கிறார். தைவீ ஸம்பத் என்றால் தெய்வீகமான குணச் செல்வம். இந்த குணங்களைத்தான் சில சமயங்களில் தேவகணம் என்று சொல்லி அஸுர கணங்களோடு சண்டை போடுவதாக ‘allegory’ (ரூபகம், அதாவது உருவகம்) செய்வது. அஸுர கணம் என்பது இதே மாதிரி எந்த அஸுர குணங்களுக்கு ரூபகமாயிருக்கின்றன என்பதையும் சொல்கிறார். ‘டம்பம், கர்வம், க்ரோதம், சுடுசொல், அஞ்ஞானம் ஆகியவை அஸுரத்தன்மையுள்ளவை. சாஸ்த்ரங்களில் ‘இப்படிப் பண்ணு’ ‘இப்படிப் பண்ணாதே’ என்று சொன்ன ப்ரவ்ருத்தி, நிவ்ருத்திகளுக்கு நேர்மாறாகப் பண்ணுவது; அநாசாரமாக, அஸத்யமாக, ம்ருக ப்ராயமாக இருப்பது’ – என்றிப்படி அஸுர குணங்களுக்கு ஜாபிதா கொடுத்துக்கொண்டு போகிறார். ஸம்ஸாரக் கட்டிலிருந்து விடுவித்து மோக்ஷத்துக்குச் சேர்க்க உதவுகிற எல்லாம் தைவீ ஸம்பத் என்றும், இன்னும் கெட்டியாகக் கட்டிப் போடுவதெல்லாம் அஸுர ஸம்பத் என்றும் தெளிவாக விளக்கிவிட்டு, ‘அப்பா அர்ஜுனா! ‘இதிலே நாம் எதுவோ? எதிலே போய் விழுவோமோ?’ என்று கவலைப்படாதேயப்பா! தைவீ ஸம்பத்துக்குப் பாத்ரனாகத்தான் நீ பிறந்திருக்கிறாய்’ என்று ரொம்பக் கருணையோடு தைர்யம் சொல்கிறார். இதிலிருந்து ஒரு ஜீவனை ஆச்ரயித்திருப்பவைதான் தேவாஸுர சக்திகளென்று தெரிகிறது.

நமக்கே இந்த தேவாஸுர யுத்தம் – அதாவது நமக்குள்ளே நடக்கிற போராட்டம் – நன்றாகத் தெரியத்தான் செய்கிறது. ஒரு பக்கம் யாரோ, ‘நல்ல கார்யம் பண்ணு, காமியாய்த் திரியாதே, கோவிச்சுக்காதே, அஸூயைப் படாதே, கோவிலுக்குப் போ, த்யானம் பண்ணு, தொண்டு பண்ணு’ என்று சொல்லுகிற மாதிரி இருக்கிறது. இன்னொரு பக்கம் இதற்கெல்லாம் நேர் வித்யாஸமாக யாரோ நம்மைத் தூண்டுகிறது போல இருக்கிறது. துரத்ருஷ்டவசமாகப் பின்னாலே சொன்னவர் தூண்டிவிடுகிற வழியில்தான் நாம் முக்காலே மூணு வீசம் போகிறோம். அப்புறம் அழுகிறோம். அவமானப்படுகிறோம். பச்சாத்தாபப்படுகிறோம். அந்தமாதிரி ஸமயங்களில் முதலில் சொன்ன குரலின்படி துளி நடக்கப் பார்க்கிறோம். மறுபடி இரண்டாவது குரல் பெரிசாகக் கேட்கிறது. சறுக்கி விழுகிறோம். மறுபடி அப்போதைக்கு ஒரு ஸத் ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு சறுக்கு மரத்தில் ஏறப் பார்க்கிறோம். ஒரே வழவழப்பான சறுக்கு மரத்தில் ஏறுகிறவனும் எண்ணெயைப் பூசிக் கொண்டு, ஏறப்பார்க்கிற மாதிரிதான் நம் சுப யத்னம் இருக்கிறது. ஆனால் எங்கேயோ துளி அது இல்லாமலில்லை. “யத்னம்” என்று செயல் முயற்சியாக அது வராதபோதுகூட ‘இப்படி யத்னம் பண்ணு, இதற்கு வேறேயான வழியில் நீ போறது ஸரியில்லை’ என்று உள்ளே யாரோ சொல்வது மட்டும் நடக்கிறது. மாறிமாறி நம்மைத் தப்புக்களிலே தூண்டி விடுகிற சக்தியும் இதுவுமாகக் குஸ்தி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது, கெட்ட வ்ருத்திகளுக்கும் நல்ல வ்ருத்திகளுக்கும் நம் மனஸில் நித்யம் சண்டை நடக்கிறது.

வ்ருத்தி (vritti) என்றால் போக்கு, ஓட்டம். ‘சித்த வ்ருத்தி’ என்றால் நம் எண்ணங்களின் ஓட்டம். ஒவ்வொரு தினுஸான ஓட்டமும் ஒரு வ்ருத்தி. இப்படி க்ஷணத்துக்கு நூறு வ்ருத்தி நம் சித்தத்தில்! அதில் தொண்ணூறு கெட்ட வ்ருத்தி, பத்து நல்லதாக இருக்கலாம். நல்ல வ்ருத்திதான் தேவர்கள். கெட்ட வ்ருத்திகள் அஸுரர்கள்.


1 முதல் அத்யாயம், இரண்டாம் கண்டம்
2 மூன்றாம் கண்டம்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ராமராஜ்யம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அஸுரப்போக்கு தோன்றுவது ஏன்?
Next