அஸுரப்போக்கு தோன்றுவது ஏன்? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தொண்ணூற்றொன்பது பெர்ஸென்ட் ஜயிப்பது அஸுரர்கள்தான். ஒரு பெர்ஸென்ட் தேவர்கள் ஜயிக்கிறபோது பரம ஆனந்தமாயிருக்கிறது; ஏதோ ஒரு நிறைவு தெரிகிறது; ஹ்ருதயம் அப்போதுதான் ப்ரஸன்னமாக (தெளிவாக) இருக்கிறது. மறுபடி இருட்டு வந்து மூடுகிறது. அஸுரர்கள் ஜயிக்கட்டும் என்று தோன்றுகிறது. அவர்களும் ஜயத்துக்கு மேல் ஜயம் பெற்றுக்கொண்டே போகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இத்தனை ஜயத்திலும் உள்மனஸு நிறையவே இல்லை, தெளியவே இல்லை, மேலும் கலங்கிக் குழம்பி கும்பியாகத்தான் போயிருக்கிறது என்று தெரிகிறது. துக்கம் துக்கமாக வருகிறது. இப்படி புத்தி பாழாப்போச்சே' என்று அழுகிறோம். `இனிமேலே இப்படிப் பண்ணுவதில்லை’ என்று தீர்மானம் செய்து கொள்கிறோம். தீர்மானம் ரொம்ப பலமாக இருக்கிற ஸமயத்தில் மட்டும் அடுத்த தடவை அந்த மாதிரி உணர்ச்சிகள் ஏற்பட்டால் அதன் வேகத்தை மட்டுப்படுத்தித் தட்டிவிடுகிறோம். ஆனாலும் இப்படி ஒரு தடவை, இரண்டு தடவை தட்டிவிட்டாலும் அப்புறம் நமக்கே தெரியாமல் அந்த வேகம் – அது காமமோ, க்ரோதமோ, பொறாமையோ, பொருளாசையோ எதுவோ ஒன்று – அது நம்மை அடித்துக்கொண்டு போக விட்டுவிடுகிறோம். இப்படி அஸுர சக்திகளின் ஆவேசத்தில் செய்கிற எல்லாம் பாபங்களாக நம்முடைய கர்மாக் கணக்குப் புஸ்தகத்தில் ஏறிவிடுகின்றன.

“யாரோ நம்முடைய பிடரியைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி நாம் இப்படிப் பாபத்தைப் பண்ணுகிறோமே! இது எதனால்?” என்று இதைப்பற்றித்தான் அர்ஜுனன் (கீதையில்) பகவானைக் கேட்கிறான் (அத்யாயம் 3, ச்லோகம் 36) :

அத கேந ப்ரயுக்தோ (அ)யம் பாபம் சரதி பூருஷ : |

அநிச்சநநபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித : ||

வ்ருஷ்ணி என்பவர் க்ருஷ்ணரின் மூதாதையரில் ஒருவர். வ்ருஷ்ணியின் குலத்தோன்றலானதால் அவரை வார்ஷ்ணேய' என்று கூப்பிட்டு அர்ஜுனன் கேட்கிறான். குந்தி பிள்ளை என்பதால் இவனை அவர்,`கெளந்தேய',`கெளந்தேய’ என்று கூப்பிட்டு உபதேசம் பண்ணுகிறமாதிரி இவன் அவரை, `வார்ஷ்ணேய’ என்று கூப்பிட்டுக் கேள்வி கேட்கிறான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தேவாஸுரர் யார்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பயத்துக்கு இடம் தரும் த்வைதம்
Next