அபயம் – மோக்ஷம் ; பயம் – ஸம்ஸாரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மோக்ஷ ஸ்தானம் அபயம் என்பதால் பயம் என்பது எந்த ஸ்தானத்தைக் குறிக்கும் என்று கண்டுபிடித்துவிடலாம். பயமும் அபயமும் ஒன்றுக்கொன்று ‘ஆப்போஸிட்’. அதனால், பயத்தின் ஸ்தானம் மோக்ஷத்துக்கு ‘ஆப்போஸிட்’டாக இருக்கவேண்டும். மோக்ஷம் என்றால் ‘விடுபட்ட நிலை’. அதற்கு ஆப்போஸிட் ‘கட்டுபட்ட நிலை’. இதை ‘பந்த்ம்’ என்பார்கள். பந்த – மோக்ஷம் என்று சொல்வது வழக்கம். லோக வாழ்க்கையான ஸம்ஸாரம்தான் பந்தம். ஸம்ஸார பந்தம் என்று சேர்த்தே சொல்கிறோமல்லவா? அதனால் பயம் என்பது ஸம்ஸாரத்தைக் குறித்துத்தான். இந்தத் தடவை ஜன்மா வந்துவிட்டது. இந்த ஜன்மா முடிந்து சரீரம் போய்விட்ட பிறகாவது இன்னொரு ஜன்மா, மறுபடியும் சரீரம் என்று வராமலிருக்க வேண்டும். அதாவது மறுபடி ஸம்ஸார பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் விடுபட்டு மோக்ஷ ஸ்தானம் சேரவேண்டும். செத்தபின் “புனரபி ஜனனம்” வந்துவிடுமோ என்பதுதான் பெரிய பயத்துக்குரிய விஷயம். “பெரிய பயம்” என்று நான் சொன்னதையே பகவான் “மஹத் பயம்” என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்*. கர்மயோகம் என்பதாகப் பலனில் ஆசையில்லாமல் சாஸ்தரம் விதித்த கர்மாக்களை வழுவறப் பண்ணவேண்டும் என்ற உபதேசிக்க வந்த பகவான் இந்த நிஷ்காம்ய கர்ம யோகத்தைக் கொஞ்சம் பின்பற்ற ஆரம்பித்தாலும் போதும், அது பெரிய பயத்திலிருந்து (“மஹதோ பயாத்”) காப்பாற்றிவிடும் என்கிறார்:

ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்

காம்ய கர்மமாக ஸ்வய ஆசையின்மீதே பண்ணும் கர்மாதான் ஜீவனை ஸம்ஸாரத்தில் கட்டிப்போடுவது. நிஷ்காம்ய கர்மமோ இந்தக் கட்டை அவிழ்த்துக்கொள்ள உதவி பண்ணுவது. ஆகையினால் மஹா பயத்திலிருந்து அது காப்பாற்றும் என்று பகவான் சொல்லும் இடத்தில் ‘மஹா பயம்’ என்பது ஸம்ஸார பயம்தானென்று ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.


* கீதை 2.40

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அத்வைதமே அபயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நரக பயம்
Next