அத்வைதமே அபயம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த விஷயத்தை உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கிறது. ஒன்றேயான ஸத்யவஸ்துவில் – மெய்பொருள், ஆத்மா, ப்ரஹ்மம் என்றெல்லாம் சொல்வது அதைத்தான்; அந்த ஸத்ய வஸ்துவில் – எப்போது ஒருவன் அதற்கு அந்நியமாக இன்னொன்றை பேதம் செய்து பார்க்கிறானோ அப்போதே அவனுக்குப் பயம் ஏற்பட்டுவிடுகிறது என்று தைத்திரீய (உபநிஷ) த்தில் சொல்லியிருக்கிறது1. ப்ருஹதாரண்யகத்திலும் ஒரு இடத்தில்2 ப்ரஜாபதியானவர், “எனக்கு அந்நியமாக எதுவும் இல்லாதபோது எனக்கு எதைக் குறித்து பயம் ஏற்படும்?” என்று கேட்டதாகச் சொல்லிவிட்டு, “இன்னொன்று இருந்தால்தான் த்விதீயமான அதனிடமிருந்து பயம் உண்டாகிறது” என்று முடித்திருக்கிறது.

இப்படிச் சொன்னதால் அத்வைதமாகப் போய்விட்டால் பயமே இல்லை என்று ஆகிவிடுகிறது. இப்படி ஒன்றிலிருந்து inference -ஆக (அநுமானமாக) அந்த முடிவை draw பண்ணிக்கொள்ளும்படி நம்மை விடுவதோடு நிற்காமல், டைரக்டாகவே அத்வைதம்தான் அபயநிலை என்றும் உபநிஷத்துக்கள் பல இடங்களில் உபதேசிக்கின்றன. தைத்திரீயத்திலேயே சற்று முன்னாடி சொன்னதற்கு இரண்டு மூன்று மந்திரம் முந்தி3, மனோ வாக்குகளால் எட்டமுடியாததான அத்வைதமான ப்ரஹ்மாநந்த நிலையைச் சொல்லிவிட்டு, அதை அடைந்தவன் ஒருபோதும் பயப்படமாட்டான் என்ற நேரடியாகக் கூறியிருக்கிறது. அப்புறம், ‘ஆனந்தவல்லி’ என்ற அந்தப் பகுதியை முடிக்கிற இடத்தில் மறுபடியும், மனோவாக்குகளால் எட்டமுடியாத ப்ரஹ்மாநந்த அத்வைத நிலையை அடைந்தவன் ஒரு இடத்திலும் பயப்படமாட்டானென்று சொல்லியிருக்கிறது. முதலில், காலத்தில் ஒருபோதும் (“கதாசன”) பயப்படமாட்டான் என்றும், அப்புறம், ஒரு இடத்திலும் (‘குதச்சன’) பயப்படமாட்டான் என்றும் சொன்னதால், இப்போது ஸயன்ஸில் ஸகல தத்வங்களையும் அடக்கிக்கொண்டு விடும் இரண்டு ஆதார வஸ்துக்கள் என்று சொல்லும் Time, Space இரண்டையும் சொன்னதாகிவிடுகிறது. இதே போல ப்ருஹதாரண்யகத்திலும் (நான்காம் அத்யாயத்தின் நான்காம் பிரிவான) சாரீரக ப்ராஹ்மணம் எனும் ஸெக்ஷனின் கடைசி மந்த்ரங்களில் ஆத்ம ஞானியை வர்ணித்துவிட்டு முடிவாக, ப்ரஹ்மமேயான ஆத்மா அஜரமானது (மூப்பில்லாதது) , அமரமானது, அம்ருதமானது என்று அடுக்கு மொழியில் சொல்லி, இவற்றோடு அது அபயமானது என்றும் கூறியிருக்கிறது. மறுபடியும் தனியாக எடுத்து, “ஆமாம், ப்ரஹ்மம் என்றால் அபயம்தான். தன் ஆத்மாவை ப்ரஹ்மமாகத் தெரிந்துகொண்டவன் பயமேயில்லாதவனாகிறான்” என்று முத்தாய்ப்பு வைத்திருக்கிறது.


1 தைத்திரீய உபநிஷத்தின் ஆனந்தவல்லி எனும் பகுதியில் ஏழாவது மந்த்ரம்
2 முதல் அத்யாயம் நாலாம் ப்ராஹ்மணம், இரண்டாவது மந்த்ரம்
3 ஆனந்தவல்லி நான்காம் மந்த்ரம்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பயத்துக்கு இடம் தரும் த்வைதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அபயம் - மோக்ஷம் ; பயம் - ஸம்ஸாரம்
Next