மனமற்ற நிலையிலும் “நாம்” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸரி; தூக்கத்தின்போது மூர்ச்சையின்போது உனக்கு எந்த அநுபவமும் இல்லை என்பது ஸரி. நாமிருக்கிறோம் என்பது உனக்குத் தெரியத்தான் இல்லை. ஆனால், நீ அப்போது நிஜமாகவே இல்லாமல் போய்விட்டாயா, என்ன? அப்படியானால், தூக்கத்துக்கு அப்புறம் எப்படி முழித்துக் கொண்டாய்? தூக்கம் கலைந்து எழுந்த அப்புறம் அப்படி ஜடமாகக் கிடந்ததற்கும் சேர்த்து வைத்து எப்படிக் காரியம் செய்ய ஆரம்பித்தாய்? மூர்ச்சையைப் பற்றியும் இப்படியே யோசித்துப்பார். தூக்கத்துக்கும், மூர்ச்சை போடுவதற்கும் முந்தி நீயாக இருந்த ஆஸாமியேதான் தூக்கம் கலைந்த பிற்பாடும், மூர்ச்சை தெளிந்த பிற்பாடும் நீயாக இரூப்பது என்பதும் தெரிகிறதோல்லியோ? அப்போது உனக்கிருந்த அபிப்ராயங்கள், அநுபவங்கள் உறவுமுறைகள் எல்லாம் இப்போதும் தொடர்ந்து வருகின்றன அல்லவா? அந்த உடம்பேதானே இப்போதும் உன் உடம்பாயிருக்கிறது? இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தூங்குகிறபோதும், மூர்ச்சை போட்டுக் கிடந்தபோதும் உன் உயிர் இருக்கத்தானே செய்தது? ரத்த ஓட்டம், தேஹத்தில் உஷ்ணம், ச்வாஸம் எல்லாம் இருக்கத்தானே செய்தன? அதனால் மனஸ் இல்லாதபோது நீ இருக்கத்தான் இருந்தாய். அதாவது “நான் நான்” என்று மனஸ் உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகிறதென்றாலும், மனஸ் இல்லாத போதும்கூட நாம் இருந்து கொண்டுதானிருக்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மனமாற்ற ஆத்மாவின் ஆனந்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நிஜ 'நாம்'
Next