மனமற்ற ஆத்மாவின் ஆனந்தம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“ஆனால், மனஸ் போய்விட்டால் நமக்கு ஒன்றுமே தெரியாதே! அது போனால் நாமே போய்விட்ட மாதிரிதானே? அப்புறம் மோக்ஷ ஆனந்தம் என்று ஒன்றை யார் அநுபவிப்பது? இல்லாவிட்டால், மோக்ஷம் என்பது தூக்கம், மூர்ச்சை மாதிரி எதுவும் தெரியாமல் ஜடம் மாதிரி ஆகி விடுவதுதானா?”

இல்லை, இல்லை. அதுவே நிஜமான ஆனந்தம்; சாச்வதமான, மாறாத ஆனந்தம். ப்ரஹ்மானந்தம், ஆத்மானந்தம் என்றே சொல்லப்படும் பேரின்பம். ப்ரக்ருதத்தில் (நடை முறையில்) கூட, நாம் ரொம்பவும் இன்பமான ஒரு அநுபவம் பெற்றால், “ப்ரஹ்மாநந்தமாயிருந்தது” என்றுதானே சொல்கிறோம்? ப்ரஹ்மம் இப்படிப்பட்டதா, இப்படிப் பட்டதா என்று தபஸ் பண்ணிப் பண்ணிப் பார்த்து, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்றை ப்ரஹ்மம் என்று நினைத்த ப்ருகு முடிந்த முடிவான நிலையில் ஆனந்தம்தான் ப்ரஹ்மம் என்று தெரிந்து கொண்டார் என்று தைத்திரீயம் சொல்கிறது. அதனால் இந்த விஷயத்தைச் சொல்லும் ஸெக்ஷனுக்கே “ஆனந்தவல்லி” என்று பெயர்.

“எல்லாம் ஸரி, அநுபவிப்பதற்கு மனஸ் என்று ஒன்று இல்லாவிட்டால் ஆனந்தம் எப்படித் தெரியும், ஸ்வாமிகளே?”

இங்கேதானப்பா த்வைத – அத்வைத ஸமாசாரம் வருகிறது. மனஸுக்கு இன்னொன்றைத்தான் தெரியும். தன்னைத் தெரியாது. மஹா ஸாமர்த்யத்தோடு எதெதையோ தெரிந்துகொள்கிற அது தன்னையே தெரிந்து கொள்ள முடியாத மஹா அசடாக இருக்கிறது! நீயே ஆலோசித்துப் பாரப்பா, புரியும். மனஸினால் அதற்குப் புறம்பான விஷயங்களைத்தான் நினைக்கவும், புரிந்து கொள்ளவும், அநுபவிக்கவும் முடிகிறது. நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுதுகிறாய், தெரிந்துகொள்கிறாய், எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுகிறாய், ஆனால் இதை எல்லாம் செய்யும் உன் மனஸ் என்னவென்று உனக்குப் புலப்படுகிறதோ? அதை நிறுத்திவைத்து இன்னவென்று தன்னைத்தானே பார்த்து அறிந்துகொள்ளும்படிப் பண்ணவிடுகிறதோ? இந்த நிமிஷம் நல்லதாய்த் தெரிகிற மனஸ் அடுத்த நிமிஷம் மஹா கெட்டதாய் விடுகிறது. இந்த ஸெகன்ட் ஸந்தோஷமாயிருக்கும் மனஸ் அடுத்த ஸெகன்ட் துக்கம் கொண்டாடுகிறது. இந்த க்ஷணம் ஏதோ கொஞ்சம் சாந்தமாயிருக்கிற மாதிரித் தோன்றுகிற இந்த மனஸு அடுத்த க்ஷணம் அப்படியிருக்குமா என்று தெரியவில்லை. இந்த மனஸ் என்பது என்ன? புரியவே இல்லை. ‘இதனால்தான் ஜீவனுக்கு எல்லா அநுபவமும் ஏற்படுகின்றன. இது வேலை செய்யாமல் தூங்கிப்போனால், அல்லது மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டால் எந்த அநுபவமுமேயில்லை’ என்பதால் இதுவேதான் நாம் என்று தோன்றுகிறது. அப்படித் தான் நினைத்து நீ கேள்வி கேட்டாய்.

“ஆமாம் அப்படித்தான் நினைத்தேன். அப்படி இல்லை என்று நீங்கள் இன்னமும் காட்டவில்லை.”

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மனமே பந்த காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனமற்ற நிலையிலும் 'நாம்'
Next