ஆத்மாவுக்கு த்விதீயமான மனம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆத்மா மனஸிலே இல்லை என்றால் ஆத்மா வேறே, மனஸ் வேறே. ஆத்மாவுக்கு வேறாக மனஸ் இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு அந்நியமாக, இரண்டாவதாக, த்விதீயமாக இருப்பதே மனஸ் என்றாகிறது.

“ஆத்மாவுக்கு அந்நியமாக இன்னொன்றுதான் கிடையாது என்கிறீர்களே! இது எப்படி அப்படி இருக்கமுடியும்?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியாயிற்று, அப்பா! மறுபடி சொல்கிறேன். நிஜ ஆஸாமி ஒருத்தன், அவன் கல்பனையாகப் போட்டுக்கொள்கிற வேஷம் ஒன்று. இப்போது ஆஸாமியும் வேஷமும் ஒன்றேயா, வேறுவேறா என்றால் ஒன்றும்தான், வேறு வேறுதான். விசித்ரமாக, இப்படி முரணான இரண்டாகவும் இருக்கிறது! எவனோ ஒரு ராமஸ்வாமி ராஜபார்ட் போட்டுக்கொள்கிறானென்றால், அவன்தான் அந்த ராஜா வேஷம். அவனில்லாமல் வேஷம் இல்லை. அவனையன்றி வேறாக வேஷ ராஜா தனித்து இருக்க முடியாது. இதுதான் அத்வைதம். அப்படியானால் ராமஸ்வாமிதான் ராஜாவா என்றால் அப்படி இல்லை. அந்த ராஜாவின் ராஜ்யம் இவனுக்கு ஸொந்தமா? இல்லை. அவனுடைய பத்னி, புத்ரர்கள் இவனுக்கு ஸொந்தமா? இல்லை. ராஜா என்னவெல்லாமோ கஷ்டப்பட்டானே, ஸுகப்பட்டானே! வேட்டையாடினான்; சூதாடினான்; தோற்றுப்போனான்; அப்புறம் யுத்தத்தில் ஜயித்தான்; ஒரு ஸமயம் துக்கத்தில் தலைமயிரைப் பிய்த்துக்கொண்டான்; இன்னொரு ஸமயத்தில் ஆனந்தத்தில் ராகமாலிகை பாடினான் – இந்த அநுபவம் எதுவாவது நிஜ ராமஸ்வாமியுடையவை ஆகுமோ? இதிலே ராஜாவுக்கு ஏற்பட்ட லாப நஷ்டம் ஏதாவது ராமஸ்வாமிக்கு உண்டானதாகுமா? வேஷத்தைக்கலைத்தபோது ராமஸ்வாமி கொஞ்சமாவது குறைந்து போகாமல் பழைய ராமஸ்வாமியாக அப்படியேதானே இருந்தான்? அப்போது, நிஜ ஆஸாமிக்கு வேஷம் முற்றிலும் வேறான – த்விதீயமான – விஷயமாகத்தானே ஆகிறது? இப்பபடித்தான் ஆத்மாவுக்கு மனஸு வேறாவதும்.

இன்னொரு உபமானம் சொல்கிறேன் – அத்வைத சாஸ்த்ரங்களில் அடிக்கடிச் சொல்வது. அந்தி மயக்கத்தில் ஒரு கயிறு பாம்பாகத் தெரிகிறது. மாயா மயக்கத்தில் ஆத்மாவானது தனி ஜீவனாகத் தெரிகிறது – அதாவது ஜீவன் “நான்” என்று ஐடின்டிஃபை செய்துகொள்ளும் மனஸாகத் தெரிகிறது. கயிறு என்ற ஒன்று இல்லாவிட்டால் பாம்பு என்ற தோற்றம் உண்டாயிருக்க முடியாது. கயிற்றிலே ஸூப்பர் – இம்போஸ் பண்ணித்தான் பாம்பு கல்பிக்கப்பட்டிருக்கிறது. அது இன்றி இது இல்லை என்கிறபோது அத்வைதம். ஆனால், கயிறு பாம்பா என்றால் இல்லைதானே? பாம்புத் தோற்றத்துக்கும் கயிற்றுக்கும் கயிற்றின் நிலையிலிருந்து பார்த்தால் கொஞ்சமாவது ஸம்பந்தமுண்டா? பாம்பு என்று நினைத்து உளறி அடித்துக்கொண்டோமே, இப்படி பயமுறுத்தியதில் கயிற்றுக்கு ஏதாவது பங்கு உண்டா? தன்னிலே ஒரு பாம்புத் தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதால் அதற்கு அந்த பாம்பின் எடை கூடிற்றா? அப்புறம் வெளிச்சத்தில் பார்த்தபோது பாம்பு இல்லை, கயிறுதான் என்று தெரிந்ததே (மாயை மயக்கைப் போக்கும் ஞான ப்ரகாசத்தில் பார்க்கும்போது மனஸ் மறைந்து ஆத்மா மட்டும் தெரிகிற ஸ்திதிதான் இது.) தன்னிடமிருந்து பாம்புத் தோற்றம் எடுபடுகிறது என்பதால் கயிற்றின் எடை ஏதாவது குறைந்ததா? இப்படியெல்லாம் ஆலோசிக்கும் போது பாம்பிலே கயிற்றின் ஸமாசாரம் கொஞ்சம்கூட இல்லை, அது வேறே, இது வேறே என்றுதானே நிற்கிறது?

இப்படித்தான் ஆத்மாவுக்கு வேறேயாக மனஸ் இருப்பது.

ஆகையால் சற்றுமுன் நான் மனஸானது தன்னைத் தவிர இன்னொன்றைத்தான் காட்டிக்கொடுக்கும் என்று சொன்னதோடு விஷயம் நிற்கவில்லை. ‘இன்னொன்று இருந்தால் அப்போது பயத்துக்கு இடமேற்பட்டுவிடும், மனஸானது இப்படி பயத்தை உண்டாக்கும் ஹேது உள்ளதான த்வைதத்தை உண்டாக்குவது’ என்று முதலில் சொன்னேன். அப்படிச் சொன்னது ஸரிதான். அதற்குக் கூடுதலாக இப்போது சொல்வது: இப்படி மனஸ் தன்னைத் தவிர இன்னொன்றை மட்டுமே காட்டிக் கொடுப்பது மட்டுமில்லை;. அதுவே ஆத்மாவின் நிஜமான தானாக இல்லாமல் – ஆத்மா என்கிற நிஜமான தானாக இல்லாமல் – த்விதீயமாக இருப்பதுதான். கல்பிதம், வேஷம், அத்யாஸம், அத்யாரோபம் என்று எப்படிச் சொன்னாலும் சொல்லிவிட்டுப் போங்கள்; மனஸை ஸென்டராக வைத்து அதுவே நிஜம் என்று கார்யம் பண்ணும்வரையில் மனஸ் என்ற ஒன்று ஆத்மாவுக்கு வேறாக இருந்துகொண்டு இருக்கிறது என்றே வைத்துக்கொள்ள வேண்டியதாகிறது.

இன்னொன்று இருந்தால் பயம் வந்துவிடும். மனஸுக்கு எப்போதும் இன்னொன்றைத்தான் தெரியுமாதலால் நமக்குத் தெரிந்த த்வைத ப்ரபஞ்சம் நித்ய பயமானதுதான். இப்போது ஏதோ ஸந்தோஷமாக அரட்டையிலேயே வேதாந்த அரட்டையாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த க்ஷணமே பூமி கொஞ்சம் ஆடினால், பூகம்பமென்று வந்தால்? அது வருவது இருக்கட்டும். இப்போது நான் இப்படிச் சொன்னவுடனேயே பயம் கவ்விக்கொள்கிறது. இதுதான் மனஸினுடைய த்விதீய லோகத்தின் தன்மை.

இன்னொன்றையே தெரிவிக்கும் இந்த மனஸ் என்பதே ஆத்மாவுக்கு இன்னொன்றாக இருப்பதுதான் மற்ற எல்லா விதமான பயங்களுக்கும் காரணமான, மூலமான பயம். ஆத்மாவிலிருந்து மனஸ் புறப்படவிடுவதுதான் முதல் த்வைதம், முதல் பயம். அப்புறம் மனஸினால் உண்டாகும் அநேக இரட்டைகள், அநேக விதமான பயங்கள், த்வைத லோகமாகிற ஸம்ஸார பயம், நரகபயம் எல்லாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்ம உணர்வும், மனோ வாழ்க்கையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆத்மாநுபவமே அபய மோக்ஷம்
Next